கிருஷ்ண லீலா



”ராதா, சாப்பிட வா” என்று தன் மகளைக் கூப்பிட்டாள் கல்யாணி.

”இதோ வர்ரேன், அம்மா” என்றாள் ராதா.

“நானும் அரைமணி நேரமா கூப்பிடுறேன். இந்த பொண்ணு வர்ரேன், வர்ரேன்னு சொல்றாளே தவிர வரல்லே. எப்பப் பார்த்தாலும் ஃபோன்லே பேசிகிட்டே இருக்கா. அப்படி என்னதான் பேசுவாளோ? யாரோடதான் பேசுவாளோ?” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு கல்யாணி அலுத்துக்கொண்டாள்.

மேலும் பத்து நிமிடங்கள் ஆயின. இன்னும் ராதா வராததால், கல்யாணி, ராதா இருக்கும் அறைப்பக்கம் போய் நேரா அவளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போனாள். ராதா இருக்கும் அறையின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அவள் பேசுவதும் சிரிப்பதும் நன்றாகவே கல்யாணிக்குக் கேட்டன. ராதாவோடு பேசிகொண்டிருப்பவரின் குரல் சற்று அரைகுறையாகக் கேட்டது. அது ஒரு ஆணின் குரல் போல் இருந்தது.  அதைக் கேட்டுக்கொண்டு கல்யாணி சற்று நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். ராதா ஒரு ஆணிடம் சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள் என்பதைக் கல்யாணி  புரிந்துகொண்டாள். கல்யாணி குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்து அடுப்பறைக்குச் சென்றாள்.

ராதா சாப்பிட வந்தாள். வரும்பொழுது, எதையோ சாதித்ததைப் போல் அவள் முகத்தில் மகிழ்ச்சி; நடையிலே துள்ளல்; உதடுகள் ஒரு பாடலைப் பாடி ஒத்திகை செய்துகொண்டிருந்தன. “யார்கிட்டே இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தே” என்று கேட்டாள் கல்யாணி. ”என் ஃபிரண்டுகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்.” என்று பதிலளித்தாள் ராதா. “அது யாரு அந்த ஃபிரண்டு?” என்று கேட்டாள் கல்யாணி. “எனக்கு நல்லா தெரிஞ்சவ.” என்று சொல்லி அம்மா செய்திருந்த உருளைக்கிழங்கு கறி மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறிப் பேச்சை மாற்ற முயற்சி செய்தாள் ராதா. ராதாவின் பேச்சு, முகபாவம் எல்லாம் பார்த்தால் அவள் யாரோ ஒரு பையனைக் காதலிக்கிறாள் என்று புரிந்துகொள்வதற்குக் கல்யாணிக்கு அதிக நேரம் ஆகவில்லை. அதுபோல், தான் ஒருவரைக் காதலிப்பதாகத் தன் அம்மா சந்தேகப்படுகிறாள் என்பதைப் புரிந்துகொள்ள ராதாவுக்கும் அதிக நேரம் ஆகவில்லை.

யாரையாவது காதலித்து, அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று ராதா கூறுவதற்குமுன் அவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துத் திருமணம் செய்துவைத்துவிடவேண்டும் என்று கல்யாணி நினைத்தாள். கல்யாணிக்கு ஜாதி, ஜாதகம் போன்றவற்றில் நம்பிக்கை அதிகம். ஆனால் அவள் கணவர் முத்துசாமி கொஞ்சம் பகுத்தறிவு சிந்தனையுடையவர். அவருக்கு, ஜாதி, ஜாதகம், மதம், கடவுள் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. அவரைப் பொருத்தவரை, ராதா யாரையாவது காதலித்தால், அவள் விரும்புபவனுக்கே அவளைத் திருமணம் செய்துகொடுப்பதில் அவருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ராதாவின் திருமண விஷயத்தில் அவருக்கும் கல்யாணிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவளோடு வீண் தகறாறு வேண்டாம் என்ற நோக்கத்தோடு, தன் மனைவி சொல்வதை முத்துசாமி மறுத்துப் பேசுவதில்லை.

ராதாவுக்கு சாந்தி என்று ஒரு நெருங்கிய தோழி இருக்கிறாள். இரண்டு பேரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவர்கள் இரண்டு பேருக்கும், சுமார் நான்கு  ஆண்டுகளாகப் பழக்கம். இப்பொழுது இரண்டு பேரும் ஒரே கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். சாந்தியின் அண்ணன் கிருஷ்ணன் வெளியூரில் படித்து முடித்துவிட்டு, சென்னையில், ”சென்னை சிஸ்டம்ஸ்” என்று ஒரு கம்பூயூட்டர் கம்பெனி வைத்திருக்கிறான். அந்தக் கம்பெனி வழியாக வாடிக்கைக்காரர்களுக்குக் கம்பூயூட்டர்களை விற்பது, பழுதுபார்ப்பது, சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்வது, பயிற்சி அளிப்பது போன்றவற்றை அவன் செய்துவருகிறான். வாடிக்கைக்காரர்களிடம் கிருஷ்ணனுக்கு நல்ல பெயர்; கம்பெனிக்கு நல்ல வருமானம். சில மாதங்களுக்குமுன் ராதாவுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே ஆரம்பித்த தொடர்பு, நாளடைவில் நட்பாக மாறி, இப்போழுது காதாலாக மாறிவிட்டது. அவர்கள் இருவரும் அடிக்கடி சந்திப்பதையும், நாள்தோறும் மணிக்கணக்கில் ஃபோனில் பேசுவதையும் வழக்கமாகக்கொண்டு, தங்கள் காதலை வளர்த்து வந்தார்கள்.

தான் யாரையோ காதலிப்பதாகத் தன் அம்மா நினைப்பதால், இனிமேல் வீட்டிலிருந்து அவனோடு பேச முடியாது என்பதை அவனிடம் சொல்வதற்காக ராதா அவனுக்குப் பலமுறை ஃபோன் செய்தாள். ஆனால், அவனைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

“சாந்தி! நானும் கிருஷ்ணனும் நேற்று ஃபோனில் பேசிகொண்டிருப்பதை அம்மா கண்டுபிடித்துவிட்டாள். கிருஷ்ணனைப் பற்றி அம்மாவுக்குத் தெரியாது. அம்மாவுக்கு ஜாதி ஜாதகம் இதெல்லாம் ரொம்ப முக்கியம். அவ ஒரு பழைய பஞ்சாங்கம். எங்க கல்யாணத்துக்கு அம்மாவைச் சம்மதிக்க வைப்பது ரொம்ப கஷ்டம்.  எங்க அப்பா அப்படி இல்லை. அவர்கிட்டே சொல்லி எங்க கல்யாணத்துக் சீக்கிரமே ஏற்பாடு செய்திடுறேன். கொஞ்ச நாளைக்கு, நான் வீட்லே இருக்கும்பொழுது எனக்கு ஃபோன் செய்யவேண்டான்னு  அண்னன்கிட்ட சொல்லு. நேரம் இருக்கப்ப நான் அவனை ஆஃபீஸ்லே இருந்து கூப்பிடுறேன்னு சொல்லு.” என்று அழாக்குறையாக சாந்தியிடம் கூறினாள் ராதா.

”சரி, கண்டிப்பா சொல்றேன். எல்லாம் சரி ஆயிடும், கவலைப் படாதே.” என்று சாந்தி ராதாவுக்கு ஆறுதல் கூறினாள்.

அன்று மாலை, ராதா சொன்னதை எல்லாம் கிருஷ்ணனிடம் விவரமாகக் கூறினாள் சாந்தி.  அவள் சொல்வதைக் கேட்டபொழுது, கிருஷ்ணனின் முகத்தில், ஏமாற்றம், வருத்தம், கோபம் போன்ற உணர்வுகள் எல்லாம் போட்டிபோட்டுக்கொண்டு தோன்றுவதை சாந்தி கவனித்தாள்.

“என்ன அண்ணா, ராதாமேலே கோபமா? பாவம், அவ என்ன செய்வா?” என்றாள் சாந்தி.

“அவ மேலே எனக்குக் கோபம் இல்லை. இது போன்ற சூழ்நிலையிலே பழங்காலத்திலே என்ன பண்ணினாங்கன்னு படிச்சிருக்கேன். அதைப் பற்றிதான் நினைச்சுகிட்டு இருந்தேன். அவ்வளவுதான்.” என்றான் கிருஷ்ணன்.

“என்ன பண்ணினாங்க?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் சாந்தி.

”ஒரு பெண் ஒருத்தனைக் காதலிக்கிறா என்று அவ அம்மாவுக்குத் தெரிஞ்சா, அவளை வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாதுன்னு சொல்லிடுவாங்க. அப்ப, அவ காதலன் என்ன பண்ணுவான் தெரியுமா?” என்றான் கிருஷ்ணன்.

“எனக்கு எப்படித் தெரியும்? நீயே சொல்லு” என்று ஆர்வத்தோடு கேட்டாள் சாந்தி.

”அவன் பனங்கருக்கால குதிரை மாதிரி ஒண்ணு செய்வான். உடம்புலே சாம்பலைப் பூசிக்குவான்; தலையி எருக்கம்பூ மாலையைக் கட்டிக்குவான்;  அவனோட காதலியைப்போல ஒரு படம் வரைஞ்சு, அதிலே அவ பேரை எழுதிக்கிட்டு. அந்தப் படத்தைக் கையிலே வைச்சுக்கிட்டு, பனங்கருக்கில செய்த குதிரை மேல் உட்காந்துக்குவான். சின்னப் பசங்க எல்லாம் அந்தக் குதிரையை தெருத்தெருவா இழுத்துகிட்டு போவாங்க. அப்படி அவன் செய்றதுக்கு பெயர் ‘மடலேறுதல்’” என்றான் கிருஷ்ணன்.

“வேடிக்கையா இருக்கே. அப்படி செய்தா, என்ன ஆகும்.” என்றாள் சாந்தி.

“அப்படி செய்தா, அவங்க காதலைப் பற்றி ஊரிலே எல்லாருக்கும் தெரியவரும். அப்புறம் வேற வழியில்லாம, அந்தப் பெண்ணை அவனுக்கே கல்யாணம் செய்து வைப்பாங்க.” என்றான் கிருஷ்ணன்.

”நீ அப்படி செய்யப்போறியா?” என்று சாந்தி சற்று குழப்பத்தோடு கேட்டாள்.

“சேச்சே, அப்படி எல்லாம் யாரும் இந்தக் காலத்திலே செய்ய மாட்டாங்க. இந்தக் காலத்திலே, தன் காதலியோட ஒரு செல்ஃபி எடுத்து அதை ஃபேஸ்புக்ல போட்டா அவுங்களப் பத்தி உலகத்துக்கே தெரியுமே.” என்றான் கிருஷ்ணன்.

“நீ அப்படியா செய்யப் போற?” என்று கேட்டாள் சாந்தி.

“நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். அப்படிச் செய்தால், அதனால, எங்க ரெண்டு பேருக்கும் கெட்ட பெயர். நான் செய்ய வேண்டியதைச் செய்வேன். பொறுத்திருந்து பார்.” என்றான் கிருஷ்ணன்.

மறுநாள், ராதாவை அவள் ஆஃபிஸ்லே கூப்பிட்டுப் பேசினான் கிருஷ்ணன். “நீ ஒண்ணும் கவலைப்படாதே. எல்லாத்தையும் சமாளிச்சுக்கலாம்.” என்று ஆறுதல் கூறினான்.

“நான் வீட்டிலெ இருக்கிறப்ப நீ எனக்கு ஃபோன் பண்ணாதே. ஆனா, நீ எப்ப வேணுமானாலும் ஈமெயில் அனுப்பலாம். நான் பதிலெழுதுறேன். நான் ஆஃபீஸ்லே இருக்கப்ப என்னை அங்கே கூப்பிடு. கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும்.” என்றாள் ராதா.

ராதா தைரியாமாக இருப்பதைப் பார்த்தவுடன் கிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அடுத்த சில நாட்கள் அவள் ஆஃபீஸுக்குப் ஃபோன் செய்து அவளோடு பேசினான். சில சமயம், அவளுக்கு ஈமெயில் அனுப்பினான்.

ஒருநாள், மாலை அவள் ஆபீஸ்க்குப் போய் அவளைக் அழைத்துக்கொண்டு, மெரினா  பீச்சுக்குப் போனான். அங்கே, ராதாவுடன் பேசிகொண்டிருந்தபொழுது, “நான் உனக்கு ஈமெயில் அனுப்பினேனே, கிடைச்சுதா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

ராதா சிரித்தாள். “ஏன் சிரிக்கிறே? என்னாச்சு?” என்றான் கிருஷ்ணன்.

“அது ஒரு பெரிய கதை.” என்றாள் ராதா.

“எனக்குக் கதைன்னா ரொம்பப் பிடிக்கும். சொல்லு.” என்று ஆர்வத்தோடு கூறினான்  கிருஷ்ணன்.

“நான் உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தது எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சு போச்சுன்னு சொன்னேன்லியா. அதுக்கு அப்புறம், எங்க அம்மா, எங்க அப்பாகிட்ட போய், எனக்கு மாப்பிள்ளை பார்க்கச்சொல்லி தொல்லை பண்ணினா.  அம்மாவோட தொல்லை தாங்க முடியாமல், அப்பா பல வெப்சைட்டுக்குப் போய் மாப்பிள்ளை தேடினார். ஒரு அஞ்சாறு பேர் படத்தை என்கிட்ட காட்டி, என் அபிப்பிராயத்தைக் கேட்டாங்க, அவுங்க எல்லாரையும் ஏதாவது ஒரு காரணம் காட்டி, எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லிட்டேன். இப்படிப் பல வெப்சைட்டுக்குப் போனதுனாலே, இப்ப எங்க கம்பூயூட்டரை ஸ்டார்ட் பண்ணவே முடியலே.” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் ராதா.

ராதா சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் கிருஷ்ணன். ”என்னா,யோசனை எல்லாம் பலமா இருக்கே? சரி, சரி நாழி ஆயிட்டுது நான் வீட்டுக்குப் போகணும்” என்றாள் ராதா. கிருஷ்ணன் ராதாவைக் கொண்டுபோய் அவள் ஆஃபீஸ்லே விட்டான். அவள் தன் ஸ்கூட்டர்லே தன் வீட்டுக்குப் போனாள்.

அன்று இரவெல்லாம், கிருஷ்ணன் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து, ஒரு நல்ல திட்டம் தீட்டினான். மறுநாள், “முதியோர் கம்பூயூட்டருக்கு முதல் உதவி! உங்கள் கம்பூயூட்டரைப் பழுதுபார்த்து, தேவையான சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தேவையான பயிற்சியும் அளிக்கப்படும். 91678 12345 என்ற எண்ணில் சென்னை சிஸ்டம்ஸைத் தொடர்புகொள்ளுங்கள். இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டும் முதியோருக்கு 50% தள்ளுபடி. முதலில் தொடர்புகொள்ளும் ஐந்து பேருக்கு இலவசமாக எல்லா உதவிகளும் அளிக்கப்படும்” என்று ஒரு விளம்பரத்தைக் கண்களைக் கவரும்விதமாக அச்சிட்டு, ராதாவின் அப்பாவுக்குத் தபாலில் அனுப்பினான்.

இரண்டு நாட்களில் அந்த விளம்பரம் ராதாவின் அப்பா முத்துசாமிக்குக் கிடைத்தது. அதைப் பார்த்தவுடன் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. தன் மனைவி கல்யாணியை அழைத்து விளம்பரத்தைப் பற்றிய செய்தியைக் கூறினார். “நீங்கதான் முதல் அஞ்சு பேர்லே ஒருத்தன்னு எப்படித் தெரியும்? இதுக்குள்ளே நிறைய பேர் கூப்பிட்டிருந்தா?” என்று சந்தேகத்தோடு கேட்டாள் கல்யாணி.

“பரவா இல்லை. முதல் அஞ்சு பேர்ல ஒருத்த்தரா இல்லாட்டிகூட, 50% தள்ளுபடி இருக்கே! நான் கூப்பிடப் போறேன்.” என்று அவசரமாகக் கூறிவிட்டு, விளம்பரத்தில் உள்ள எண்ணுக்கு முத்துசாமி ஃபோன் செய்தார்.

போனை எடுத்த ரிசப்ஷனிஸ்ட்டுக்கு அந்த விளம்பரத்தைப் பற்றி எதுவும் தெரியாததால், ஃபோனை கிருஷ்ணனிடம் கொடுத்தாள். முத்துசாமிதான் ஃபோன் செய்கிறார் என்று தெரிந்தவுடன், கிருஷ்ணன் தான் சென்னை சிஸ்டம்ஸின் முதலாளி என்றும், தன் பெயர் கிருஷ்ணன் என்றும் தன்னை அறிமுகப்படுத்திகொண்டு, அன்று மாலை நாலு மணிக்கு அவர் வீட்டுக்கு வருவதாகவும் கூறினான்.

அவன் சொல்லியபடியே, சரியா நான்கு மணிக்கு வந்து முத்துசாமி வீட்டுக்கு வந்து, வாசலில் இருக்கும் மணியை அடித்தான். அவனை வரவேற்று, தான் கம்பூயூட்டரில் என்ன செய்தார் என்றும், அதற்குப் பிறகு என்ன ஆயிற்று என்றும் விளக்கமாக முத்துசாமி கிருஷ்ணனிடம் சொன்னார்.  ஒரு மருத்துவர் நோயாளியைப் பரிசோதனை செய்வதைப்போல் அந்தக் கம்பூயூட்டரை கிருஷ்ணன் பரிசோதனை செய்துவிட்டு, அந்தக் கம்பூயூட்டரை வைரஸ் தாக்கியிருப்பதாகக் கூறினான்.

முத்துசாமிக்கு கம்பூயூட்டரை பயன்படுத்தத் தெரியும். ஆனால், அதைப் பற்றி அதிகம் தெரியாது. “என்னப்பா இது, மனுஷனுக்கு தான் வைரஸ் அட்டேக் வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். கம்பூயூட்டருக்குக் கூட வைரஸ் அட்டேக் வருமா?’ என்று மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டார்.

“சார், இதெல்லாம் சகஜம். நீங்க சில வெப்சைட்டுக்குப் போனா அதிலுள்ள சாஃப்ட்வேர் உங்க கம்பூயூட்டரில் உள்ள சாஃப்ட்வேரைக் கெடுத்திடும். அப்புறம் உங்க கம்பூயூட்டர் வேலை செய்யாது.” என்று முத்துசாமிக்குப் புரியும்படி கிருஷ்ணன் விளக்கம் அளித்தான்.

“சரி, அதுக்கு இப்ப என்ன செய்றது? இந்த மாதிரி இனிமே ஆகாம இருக்கணும்னா என்ன செய்றது?” என்று ஆவலுடன் கேட்டார் முத்துசாமி.

“சார், இந்த மாதிரி நான் பல கேஸ் பார்த்திருக்கேன். இப்ப இதை சரி செய்திட்டு, இனிமே வைரஸ் வராம இருக்கிறதுக்கு, அமெரிக்காவிலிருந்து ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்தால், உங்க கம்பூயூட்டர் புதுசு மாதிரி ரொம்ப நாள் இருக்கும்.”

“அமெரிக்காவிலிருந்து சாஃப்ட்வேரா? அதுக்கு ரொம்ப செலவாகுமோ?’ என்று கவலையோடு கேட்டார் முத்துசாமி.

“சார், அதைப் பத்தி நீங்க கவலைப் படாதிங்க. உங்க கம்பூயூட்டரை சரி செய்து, இனிமே வைரஸ் அட்டேக் வராம இருக்குறதுக்கு, நான் கேரண்டி. இதை எல்லாம்  சரி செய்றதுக்கு ஒரு வாரம் ஆகும். இப்ப எங்க கம்பெனியில் ஒரு ப்ரோமோஷன் நடக்குதுன்னு உங்களுக்கு நோட்டீஸ் வத்தது, அதை பார்த்து நீங்க எங்களைக் கூப்பிட்டிங்க. அஞ்சு பேருக்கு இலவசமா சர்வீஸ்ன்னு சொல்லியிருந்தோம். நீங்க தான் அஞ்சாவதாக கூப்பிட்டிங்க. நீங்க ரொம்ப லக்கீ, சார். நான் எல்லாம் கவனிச்சுக்கிறேன் சார்.” என்று கிருஷ்ணன் முத்துசாமிக்கு உறுதி அளித்தான்.

முத்துசாமிக்கு மனதில் இருந்து ஒரு பெரிய பாரம் குறைந்ததுபோல் இருந்தது. ”இந்தக் கம்பூயூட்டரை சரிசெய்ய முடியாவிட்டால், புதுசா ஒரு கம்பூயூட்டர் வாங்கணும்.  அதுக்குக் குறைஞ்சது ஒரு லட்சம் ஆகும். வேலையில் இருந்து ரிடையர் ஆனத்துக்கு அப்புறம் ஒரு லட்சம் பெரிய செலவாச்சே.” என்றெல்லாம் யோசனை செய்துகொண்டிருந்த முத்துசாமிக்கு, கிருஷ்ணன் கூறியதைக் கேட்டவுடன், லாட்டரியில் ஒரு லட்சம் கிடைத்துபோல் இருந்தது. கிருஷ்ணனுக்குத் தன்னுடைய மனமார்ந்த நன்றியைக் கூறினார். கலயாணி அழைத்து, கிருஷ்ணன் சொல்லியதை எல்லாம் சொன்னார்.

அன்று வேலையை முடித்துவிட்டு கிருஷ்ணன் வீட்டுக்குக் கிளம்பினான். கல்யாணி, “தம்பி, கொஞ்சம் இருங்க காபி சாப்பிட்டுப் போங்க.” என்று சொல்லிவிட்டு, அடுப்பங்கரைக்குப் போய் அவசரம் அவசரமாக காப்பி போட்டுக்கொண்டுவந்து கொடுத்தாள். கிருஷ்ணன் அமைதியாக காப்பி சாபிட்டுக் கொண்டிருந்தான். கல்யாணியும் முத்துசாமியும் மிகவும் மகிழ்ச்சியாக அவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது, ராதா ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்தாள். அங்கே கிருஷ்ணனுக்கு ராஜ உபசாரம் நடப்பதையும், அம்மாவும் அப்பாவும் அவனோடு சந்தோஷமா பேசிக்கொண்டிருப்பதையும் பார்த்தவுடன், அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.“இங்கே என்ன நடக்குது?,  இவன் ஏன் இங்கே வந்தான்?, அம்மாவும் அப்பாவும் இவனோடு என்ன பேசுகிறார்கள்?, இவனைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதா?, தெரியாதுபோல் நடந்துகொள்வதா?” என்றெல்லாம் ஆயிரம் எண்ணங்கள் அவள் மனத்தில் தோன்றின.  ஆச்சரியம், பயம், குழப்பம் போன்ற எல்லா உணர்வுகளும் ஒன்று சேர்ந்து அவளைத் தாக்கின. அவள் நிலைமை திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் இருந்தது.

ராதா உள்ளே வத்தவுடன், “மிஸ்டர் கிருஷ்ணன், இது எங்க பொண்ணு ராதா” என்று அவளை முத்துசாமி கிருஷ்ணனுக்கு அறிமுகப்படுத்தினார். முன்பின் தெரியாத ஒருவரைப் பார்ப்பதைப்போல் கிருஷ்ணனைப் பார்த்து, ”வணக்கம்” என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு விரைந்து சென்று, சாந்திக்கு ஃபோன் செய்து, “இன்னிக்கி நான் ஆஃபீஸிலிருந்து வீட்டுக்கு உள்ளே வந்தேன். அங்கே உங்க அண்ணன் உட்கார்ந்து எங்க அம்மா அப்பாவோடே ஜாலியா பேசிகிட்டு இருந்தான். எனக்கு பெரிய ஷாக்கா இருந்தது. அவன் ஏன் வந்தான்? இங்கே என்ன பண்றான்? உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டாள் ராதா. தனக்கு எதுவும் தெரியாது என்றும், கிருஷ்ணனைக் கேட்டுச் சொல்வதாகவும் பதிலளித்தாள் சாந்தி.

கிருஷ்ணன் வந்தவுடன் அவனிடமிருந்து நடந்த செய்திகளைத் தெரிந்துகொண்டு, அவற்றை ராதவுடன் பகிர்ந்துகொண்டாள் சாந்தி. மறுநாள், ராதா ஆபிசிலிருந்து கிருஷ்ணனுக்கு ஃபோன் செய்து பேசினாள்.

 “என்னைத் தெரியாததுபோல் நடந்துக்க. இன்னும் ஒரு வாரத்துலே நான் செய்ய வேண்டிய வேலையெல்லாம் முடிச்சிடுவேன். அப்புறம் வரமாட்டேன்.” என்றான் கிருஷ்ணன்.

தொடர்ந்து ஏழுநாட்கள் கிருஷ்ணன் முத்துசாமி வீட்டுக்கு வந்தான். கம்பூயூட்டரில், புது சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்தான். முத்துசாமி கல்யாணி இருவருக்கும் கம்பூயூட்டரைப் பயன்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளை அளித்தான். முதல் இரண்டு மூன்று நாட்கள் கல்யாணி கிருஷ்ணனுக்குக் காப்பி போட்டுக்கொடுத்தாள். அடுத்த இரண்டு நாட்கள், மத்தியானம் சாப்பாடும் போட்டாள்.

 கடைசி நாள், ”வேலை எல்லாம் முடிச்சுட்டேன். ஏதாவது வேணும்னா எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க.  இப்ப நீங்க தாராளமா எந்த வெப்சைட்ல வேணும்னாலும் உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்.”  என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்புவதற்குத் தயாரானான் கிருஷ்ணன். “தம்பி, இருந்து சாப்பிட்டு போங்க” என்றாள் கல்யாணி. கிருஷ்ணன் செய்த உதவிக்காக, தடபுடலாக சமைத்து அவனை அன்போடு உபசரித்தாள் கல்யாணி.

அடுத்த நாள், கிருஷ்ணனைப் பார்க்காததால் முத்துசாமிக்கும் கல்யாணிக்கும் எதையோ இழந்ததுபோல் இருந்தது. கம்பூயூட்டரில் ராதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் முத்துசாமி. ஷாடி.காம்(shaadi.com) என்ற வெப்சைட்டுக்குப் போனவுடன், அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அதில் கிருஷ்ணனின் புகைப்படமும் அவனைப் பற்றிய எல்லாத் தகவல்களும் இருந்தன. ஜாதி மட்டும் குறிப்பிடப்படவில்லை. மிகுந்த ஆச்சரியத்தோடு, கல்யாணியைக் கூப்பிட்டு தான் பார்த்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். “அவன் தங்கமான பையன். நம்ப ராதாவுக்குப் பொருத்தமா இருக்கும். ஆனா என்ன ஜாதின்னு தெரியிலியே.” என்று கல்யாணி ஆதங்கப்பட்டாள்,

முத்துசாமி பொறுமையை இழந்தார். “எப்பப் பார்த்தாலும் ஜாதி ஜாதின்னு சொல்லிகிட்டே இருக்கியே! உங்க சாமி முருகன் ஒரு குறத்தியைக் கல்யாணம் செய்துகிட்டான். யாரோ பெத்துத் தரையிலே போட்டுட்டுப் போன சீதையை ராமன் கல்யாணம் செய்துகிட்டான். துளசிச் செடிக்கு அடியிலே கிடந்த ஆண்டாளை ரெங்கநாதர் கல்யாணம் செய்துகிட்டார். அப்புறம் ஜாதகம் ஜாதகம்னு சொல்றியே, மஹாரிஷிகளாகிய வசிஷ்டரும், விஸ்வாமித்திரரும் ஜாதகம் எல்லாம் பார்த்துதான் ராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சாங்க. ராமனும் சீதையும்  நல்லாவா வாழ்ந்தாங்க?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினார் முத்துசாமி.

“அந்தப் பையனை நம்ப இரண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. இன்னிக்கி சாயங்காலம், ராதா வந்தவுடன், அவளைக் கேட்போம். அவளுக்குப் பிடிச்சிருந்ருந்தா, இந்தக் கல்யாணத்தை நடத்த வேண்டியதுதான்.” என்று திட்டவட்டமாகக் கூறினார் முத்துசாமி.

அவர் அவ்வளவு பொறுமை இழந்து கோபமா கல்யாணியிடம் பேசியதே கிடையாது. கல்யாணி என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று நேரம் சிந்தித்தாள். முத்துசாமி கேட்ட கேள்விகள் எல்லாம் நல்ல கேள்விகள்தான் என்பதை அவள் உணர்ந்தாள்.

ராதா பிறந்தவுடன் ஒரு பிரபல ஜோஸ்யர் அவள் ஜாதகத்தைப் பார்த்து, அவளுக்கு எல்லா யோகமும் இருக்கு, அவள் திருமண வாழ்க்கை பிரமாதமாக இருக்கும்னு சொன்னது கல்யாணிக்கு ஞாபகம் வந்ததது. அதை நினைத்துத் தன்னைத் திருப்தி செய்துகொண்டாள். ”ஜாதி ஜோஸ்யம் எல்லாம் வேண்டாம். அந்த கிருஷ்ணனுக்கும் நம்ப ராதவுக்கும் பேர் பொருத்தம் பிரமாதம். சரி, சாயங்காலம் ராதாவை ஒரு வார்த்தை கேட்டுட்டு முடிவு செய்திடாலாம்.’ என்றாள் கல்யாணி.

 “இந்த கிருஷ்ணன் நல்லவன். உங்க கிருஷ்ணன் மாதிரி எல்லாப் பெண்கள் பின்னாலேயும் சுத்த மாட்டான்.” என்று கிண்டலடித்தார் முத்துசாமி.

சாயங்காலம் ராதா வந்தவுடன், “நம்ப  வீட்டுக்கு வந்து கம்பூயூட்டரை ரிப்பேர் செய்தானே, அந்தக் கிருஷ்ணனைப் பத்திய தகவல் எல்லம் இன்னிக்கி ஷாடி.காம்லே வந்திருக்கு. நாங்க இரண்டு பேரும் பார்ததோம். எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ என்ன சொல்றே? நீ சந்தோஷமா இருக்கணும். அதுதான் எங்களுக்கு முக்கியம்.” என்று முத்துசாமியும் கல்யாணியும் இரட்டை நாயனம் வாசித்தார்கள்.

ராதா குனிந்த தலையோடும், வெட்கத்தோடும், “உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்தான்” என்றாள். கிருஷ்ணனின் லீலையால் திருமணம் இனிதே நடந்தேறியது..

-------------------------------------------  ************************ --------------------------------------------

இந்தச் சிறுகதை குறுந்தொகைப் பாடல் 17ஐத் தழுவி எழுதப்பட்டது.

 

மாவென மடலும் ஊர்ப பூவெனக் 
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
 
மறுகி னார்க்கவும் படுப
 
பிறிது மாகுப காமங்காழ் கொளினே.
 

( குறுந்தொகை – 17, பேரெயின் முறுவலார்)

 

அருஞ்சொற்பொருள்: மா = குதிரை; மடல் = பனை மட்டை; குவிதல் = கூம்புதல்; முகிழ் = அரும்பு; கண்ணி = தலையில் அணியும் மாலை; மறுகு = தெரு; ஆர்த்தல் = ஆரவாரித்தல்; காழ்கொள்ளுதல் = முதிர்தல்.

 

உரை: காம நோயானது முதிர்வடைந்தால், பனங்கருக்கால் செய்த குதிரை போன்ற ஒன்றைக்  குதிரை எனக் கொண்டு, ஆடவர் அதனை ஊர்வர்; குவிந்த அரும்பை உடைய எருக்கம் பூமாலையை அணிந்து கொள்வர்; தெருவில் தம்மைக் காண்பவர்களால்  ஆரவாரிக்கவும் படுவர். தாம் எண்ணியது நிறைவேறாவிட்டால், வேறு செயல்களையும்  செய்வர்.

Comments

  1. 👌 சிறப்பு;

    "பிறிதுமாகுப" என்ற சொல்லிற்கு ஏற்ப, இன்றையக் காலத்திற்கேற்பச் சுவைபட கதை கூறியுள்ளீர்கள் ஐயா. கதாநாய்கன் கிருஷ்ணன் பெண்ணின் மனம் கவர்ந்த செயல் நன்று!
    ஆர்வ முயற்சிக்கு வாழ்த்து ஐயா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவத் தெரிந்த குரங்கு

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்