மறந்தனா அல்லது மறைந்தானா? சென்னையில் உள்ள கலைமகள் கலைக்கூடத்தில் பரதநாட்டியம் கற்று, நாட்டியக்கலையில் தேர்ச்சிபெற்ற மாணவி சத்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி பத்மஸ்ரீ நர்த்தகி சிவகாமி தலைமையில், முதலமைச்சர் ஜெயச்சந்திரிகா அவர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சத்யாவின் நாட்டிய நிகழ்ச்சியில், மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகள் ஒலிக்க சத்யாவின் நண்பன் முரளியின் பாட்டுக்கேற்ப சத்யா நடனம் ஆடினாள். அந்த நாட்டிய நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சத்யாவின் முகபாவங்கள், நளினமான நடனம் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்த, நடனக்கலையை நன்கறிந்த முதலமைச்சர், ”சிலப்பதிகாரத்தில், மாதவியின் அரங்கேற்றத்தில் அவள் நடனம் ஆடியது ஒரு பூங்கொடி வந்து அரங்கிலே தோன்றி நாட்டியக்கலை நூல்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை எல்லாம் சரியாகக் கடைப்பிடித்து ஆடியதைப்போல் இருந்தது என்று இளங்கோவடிகள் எழுதியுள்ளாதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று சத்யாவின் நடனம் அதுபோல் இருந்தது.” என்று கூறிச் சத்யாவைப் புகழ்ந்து, ’நாட்டிய வித்தகி’ என்று பட்டமளித்துப் பொன்னாடை போர்த்திப் பாராட...