மறந்தனா அல்லது மறைந்தானா?

 மறந்தனா அல்லது மறைந்தானா?

சென்னையில் உள்ள கலைமகள் கலைக்கூடத்தில் பரதநாட்டியம் கற்று, நாட்டியக்கலையில் தேர்ச்சிபெற்ற மாணவி சத்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி   பத்மஸ்ரீ நர்த்தகி சிவகாமி தலைமையில், முதலமைச்சர் ஜெயச்சந்திரிகா அவர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சத்யாவின் நாட்டிய நிகழ்ச்சியில், மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் ஆகிய இசைக்கருவிகள் ஒலிக்க சத்யாவின் நண்பன் முரளியின் பாட்டுக்கேற்ப சத்யா நடனம் ஆடினாள். அந்த நாட்டிய நிகழ்ச்சி  கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சத்யாவின் முகபாவங்கள், நளினமான நடனம் ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்த, நடனக்கலையை நன்கறிந்த முதலமைச்சர், ”சிலப்பதிகாரத்தில், மாதவியின் அரங்கேற்றத்தில் அவள் நடனம் ஆடியது ஒரு பூங்கொடி வந்து அரங்கிலே தோன்றி நாட்டியக்கலை நூல்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளை எல்லாம் சரியாகக் கடைப்பிடித்து ஆடியதைப்போல் இருந்தது என்று இளங்கோவடிகள் எழுதியுள்ளாதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று சத்யாவின் நடனம் அதுபோல் இருந்தது.” என்று கூறிச் சத்யாவைப் புகழ்ந்து, ’நாட்டிய வித்தகி’ என்று பட்டமளித்துப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். முரளியின் இசையும் சத்யாவின் நடனத்தைப்போல் மிகச் சிறப்பாக இருந்தது என்று பாடகர் முரளியையும் முதலமைச்சர் பாரட்டினார்.

கலைமகள் கலைக்கூடத்தின் தலைமை ஆசிரியை, ”முரளி ஒரு சிறந்த பாடகன் மட்டுமில்லை. அவன் மிக நன்றாக நாட்டியமும் ஆடுவான். எங்க கலைக்கூடத்தில அவுங்க ரெண்டு பேரும் பாட்டும் பரதநாட்டியமும் கத்துக்கிட்டு இவ்வளவு சிறப்பான  கலைஞர்களாக வளர்ந்திருக்கிறதைப் பாத்தா எங்களுக்கு  ரொம்பப் பெருமையா இருக்கு.” என்று முதலமைச்சரிடம் கூறினார்.

தலைமையாசிரியையின் சொற்களைக் கேட்ட முதலமைச்சர், “அடுத்த மாதம் உலகத்தில பல நாடுகளிருந்து தொழிலதிபர்கள் வர்ராங்க. அப்ப அவுங்களுக்காக ஒரு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருக்கோம். நீங்க ரெண்டு பேரும் வந்து அந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடணும்.” என்று அவர்களை அந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார்.

முதலமைச்சரின் அழைப்பை ஏற்று, அவர் அழைத்த அந்த நிகழ்ச்சிக்குச் சென்று, “ருத்ர தாண்டவம்” என்ற நாட்டிய நாடகத்தில் முரளி சிவபெருமானாகவும் சத்யா காளியாகவும் வேடம் தரித்து ஆவேசமாக நாட்டியம் ஆடி அனைவரையும்  மகிழ்வித்தனர். அந்த நாட்டிய நாடகம் மட்டுமல்லாமல், குறிஞ்சிப்பாட்டு என்ற பத்துப்பாட்டில் உள்ள பாடலுக்கு இசையமைத்து, அதில் முரளி தலைவனாகவும் சத்யா தலைவியாகவும் நடித்துக், காதற் சுவை ததும்பும் நாட்டிய நாடகத்தையும் ஆடினார்கள். அன்றைய நிகழ்ச்சிகளைச் சத்யாவின் தோழி விஜயா தொகுத்து வழங்கினாள். அவையோர் எழுந்து நின்று, கரவொலி எழுப்பி சத்யாவையும் முரளியையும் பாராட்டினார்கள்.

சத்யாவும் முரளியும். நடனங்களில் காதலர்களாக ஆடியது மட்டுமல்லாமல், தங்கள் வாழ்க்கையிலும் காதலர்களாக மாறினர். அவர்களின் காதலைப் பற்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் தெரியும். சத்யாவும் முரளியும் பல நிகழ்ச்சிகளுக்குச் சேர்ந்தே செல்வதை வழக்கமாகக்கொண்டார்கள். அவ்வப்பொழுது, சில இசைக் கச்சேரிகளுக்கு முரளி தன்னுடைய குழுவோடு செல்லும்பொழுது சத்யா அவனோடு போவதில்லை. எல்லா நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் இருவரும் சேர்ந்தே செல்வது வழக்கம்.

நாளடைவில் அவர்களின் புகழ் பரவத் தொடங்கியது. அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்ற அமைப்பின் அழைப்பிற்கிணங்க, அமெரிக்காவுக்குச் சென்று பல ஊர்களில் சத்யாவும் முரளியும் நாட்டியம் ஆடி மக்களை மகிழ்வித்தனர். அவர்களுக்கு எண்ணற்ற விருதுகள் குவிந்தன; உலகெங்கும் நேயர்களின் எண்ணிக்கை பெருகியது. சத்யா முரளி ஆகிய இருவருக்கும் தமிழ் நாடு அரசு ‘கலைமாமணி’ விருது வழங்கி அவர்களைச் சிறப்பித்தது.

 

ஒருநாள் திருச்சியில் ஓர் இசைக் கச்சேரியில் கலந்துகொள்வதற்காக முரளி தன் குழுவோடு காரில் சென்றான். ஆனால், அவன் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் போய்ச் சேர்ந்ததாகத் தெரியவில்லை. திருச்சியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் முரளியின் பெற்றோர்களைத் தொடர்புகொண்டு, தாங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு வருவதாக வாக்களித்த முரளி அங்கு வராததால் தாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார்கள். முரளியின் பெற்றோர்கள் சத்யாவைத் தொடர்புகொண்டு, “நேத்திக்கு திருச்சியில நடக்கிற கச்சேரிக்கு வர்ரேன்னு சொல்லிட்டு முரளி போகலியாமில்லை. என்னாச்சுன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன். நான் முரளியைச் செல்ஃபோன்ல கூப்பிட்டேன், அவன் எடுக்கலை. அவனோடு கூடப் போனவங்களை எல்லாரையும் கூப்பிட்டேன். யாரும் எடுக்கலை. என்ன செய்ரதுன்னு தெரியிலை. எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு. உங்களுக்கு ஏதாவது சேதி தெரிஞ்சா எனக்குச் சொல்லுங்க.” என்று சொல்லிவிட்டு, வருத்தம் தாங்க முடியாமல் அழுதாள் சத்யா.

முரளியைக் காணவில்லை என்று கேள்விப்பட்ட விஜயா, சத்யாவைப் பார்க்க வந்தாள். “சத்யா, முரளியைக் காணும்னு கேள்விப்பட்டேன். என்ன ஆச்சு” என்று விஜயா சத்யாவைக் கேட்டாள். “நானும் முரளியும் சேர்ந்து நாட்டியம் ஆடியது மட்டுமல்ல. நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம். அவனைக் காணாம இருக்கும் ஒவ்வொரு விநாடியும் நான் செத்துக்கிட்டு இருக்கேன். எனக்குத் தெரிஞ்ச எல்லாரையும் கேட்டுப் பார்த்துட்டேன். ஒருத்தருக்கும் ஒண்ணும் தெரியலை. அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை. அவன் என்னை மறந்துட்டானா? அல்லது எங்கேயோ மறைஞ்சுட்டானா? எனக்கு உதவி செய்றதுக்கு யாருமில்லை. என்ன பண்ரதுன்னு தெரியலை.” என்று சொல்லி விஜயாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு சத்யா  அழுதாள்.

”இந்த பாரு சத்யா. முரளி எப்படி. காணாமப் போயிருப்பான்? அவன் என்ன மண்ணுக்குள்ள மறைஞ்சு போயிருப்பானா? திருச்சிக்குத் தானே போனான். அங்கே போற வழியில மூழ்கிப்போறதுக்கு எங்கேயும் கடல் கூட இல்லை. காத்துலே கரைஞ்சு வானத்துக்கா போயிருப்பான்? அவனைச் சரியா தேடினா கண்டிப்பா கண்டுபிடிச்சுட முடியும்.” என்றாள் விஜயா.

” நீ சொல்றதெல்லாம் சரி. அவன் திடீரின்னு மறைஞ்சு போயிருக்க மாட்டான்னு எனக்கும் புரியுது. அவனை எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னுதான் தெரியிலை” என்று சொன்னபொழுது, சத்யாவால் அவளுடைய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“அழாதே. என் கணவர் தங்கவேல் ஒரு டிஸ்பி. அவர் முதலமைச்சருக்கு ரொம்பவும் வேண்டியவர். நான் அவர்கிட்ட சொல்லி, முரளியைத் தேடுரதுக்கு ஏற்பாடு செய்றேன். எதாவது உதவி வேணும்னா முதலமைச்சரையும் அவர் கேட்பார். எப்படியாவது முரளிக்கு என்னாச்சுன்னு கண்டுபிடிச்சுலாம். கவலைப்படாதே. நான் இன்னிக்கு ராத்திரியே எங்க வீட்டுக்காரரிடம் சொல்றேன். ஏதாவது சேதி இருந்தா நான் உன்னை உடனே கூப்பிடுறேன்.” என்று சொல்லிவிட்டு, விஜயா சத்யாவிடம் இருந்து விடைபெற்று வீட்டுக்குச் சென்றாள்.

விஜயா தன் கணவர் தங்கவேலிடம் முரளியைப் பற்றிக் கூறி, அவனைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு சொன்னாள். டிஸ்பி தங்கவேல் எல்லாக் காவல் நிலையங்களுக்கும் முரளியைப் பற்றிக் கூறி அவனைக் கண்டுபிடிக்குமாறு செய்தி அனுப்பினார். ஒரு வாரம் ஆயிற்று. முரளியைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. முரளியின் படமும் அவனைப் பற்றிய செய்தியும், அவனைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என்றும் ஒரு விளம்பரத்தைத்  தயார் செய்து, அதைத் தமிழ் நாட்டில் உள்ள எல்லாப் பேருந்து நிலையங்களுக்கும், சுங்கச்சாவடிகளுக்கும், ரயில்வே நிலையங்களுக்கும் அனுப்பி அதை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஓட்டி வைக்குமாறு தங்கவேல் ஏற்பாடு செய்தார். வானொலி வழியாகவும் முரளியைப் பற்றிய செய்தியை விளம்பரப்படுத்துவதற்குத் தங்கவேல் ஏற்பாடு செய்தார்.

தங்கவேல் எடுத்த முயற்சி வீண்போகவில்லை. லாரி டிரைவர் ஒருவர் போலீசாரைத் தொடர்புகொண்டு,” சார், கொஞ்ச நாளைக்கு முன்னாலே நான் சென்னையில இருந்து திருச்சிக்குப் போற ஹைவேயில வண்டி ஓட்டிக்கிட்டுப் போறப்ப, திண்டிவனத்துக்குப் பக்கத்துலே ஒரு கார் ஆக்சிடண்ட் ஆயிருந்தது. அந்தக் கார் சுத்தமா எரிஞ்சு போய் உருத்தெரியாம இருந்தது. அதிலே இருந்த நாலு பேரும் கீழே விழுந்து கிடந்தாங்க. நான் வண்டியை நிறுத்திட்டுப் போய்ப் பாத்தேன். அந்த நாலு பேர்ல, ஒருத்தர் மட்டும் உயிரோடு இருந்தார், அவர் ஒண்ணும் பேச முடியாம இருந்தார். உயிரோடு இருந்தவரை தூக்கிக்கொண்டுபோய் திண்டிவனம் ஆசுபத்திரியிலே சேத்துட்டு நான் கிளம்பிட்டேன்.” என்று சொன்னார்.

லாரி டிரைவர் சொன்ன செய்தியைப் போலீசார் டிஸ்பி தங்கவேலுக்குத் தெரியப்படுத்தினார்கள். டிஸ்பி தங்கவேல், திண்டிவனம் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு லாரி டிரைவர் கொண்டுவந்த சேர்த்தவருக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தார்.  அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர், “சார், அந்த லாரி டிரைவர் சொன்னதெல்லாம் உண்மைதான். அவர் கொண்டுவந்து சேர்த்தவருக்குத் தலையில அடிபட்டிருந்தது. உடம்பில கொஞ்சம் காயம் இருந்தது. உடம்பில இருந்த காயத்துக்கெல்லாம் மருந்துபோட்டு ஓரளவுக்கு சரி பண்ணிட்டோம்.  ஆனா, அவருக்குத் தலையில அடிபட்டதுனால தான் யார்ன்னுகூட ஞாபகம் இல்லை. முதல்ல சுத்தமா பேசாம இருந்தார். இப்ப கொஞ்சம் கொஞ்சம் பேசுறாரு. அவருக்கு வைத்தியம் செய்ரதுக்கான வசதி எங்க ஆஸ்பத்திரியில இல்லை. அவரை யாரவது கூப்பிட்டுக்கிட்டுப் போய் ஒரு நல்ல நியூராலஜிஸ்ட்டுக்கிட்ட காட்டினா சரியாயிடலாம்னு நினைக்கிறேன்.” என்று சொன்னார்.

முரளியைப் பற்றிய செய்தியை டிஸ்பி தங்கவேல் சத்யாவிடம் கூறினார். சத்யாவும், முரளியின் பெற்றோரும் உடனே திண்டிவனத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். முரளியைப் பார்த்தவுடன், சத்யாவுக்கும், முரளியின் பெற்றோருக்கும் முரளி உயிரோடு இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அவன் ஞாபக மறதியோடு இருப்பது தாங்க முடியாத வருத்தத்தை அளித்தது.

முரளியை சென்னைக்கு அழைத்துவந்து, அபல்லோ மருத்துவமனையில்  உள்ள நரம்பியல் மருத்துவரோடும், உளவியல் மருத்துவரோடும் கலந்து ஆலோசித்தார்கள். அந்த மருத்துவர்கள், “இவருடைய உடலில் எந்த நோயும் இல்லை. தலையில் அடிபட்டதால் இவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது” என்றார்கள்.

சத்யா, “இவருடைய ஞாபகமறதியை எப்படியாவது குணப்படுத்த முடியாதா?” என்று கேட்டாள்.

“இவருக்கு வந்திருப்பது ஒருவிதமான கோமா. அதுக்கு மருந்து இருக்கு. மருந்து சாப்பிட்டா சரியாகிவிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவருக்குப் பழைய நினைவுகள் வர்ர மாதிரி அடிக்கடி ஏதாவது சொல்லுங்க. பழைய ஃபோட்டோ அல்லது, வீடியோ ஏதாவது இருந்தா அவருக்குக் காட்டுங்க.  உங்களுக்கு லக் இருந்தா சீக்கிரமே அவருக்கு ஞாபகம் திரும்பி வந்திடும். பெஸ்ட் ஆஃப் லக்” என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

முரளியை எப்படியாவது குணப்படுத்திவிட முடியும் என்று சத்யா உறுதியாக நம்பினாள். முரளி வீட்டுக்குச் சத்யா தினமும் சென்று, அவனும் அவளும் சேர்ந்து ஆடிய நடனங்கள், அவனுடைய கச்சேரிகள் ஆகிய வீடியோக்களை நாள்தோறும் முரளிக்குப் போட்டுக்காட்டினாள். சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு ஒருநாள் காலையில் எழுந்தவுடன், அவன் வீட்டில் இருந்த சத்யாவைப் பார்த்து முரளி, “ ஏ சத்யா, நீ எப்ப இங்கே வந்தே? இங்க என்ன பண்றே?” என்று கேட்டான். அவன் குரலைக் கேட்டவுடன் சத்யா ஆச்சர்யத்தோடும் மகிழ்ச்சியோடும் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தாள். அவனுடைய பெற்றோர்கள் அங்கே இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த சத்யா வெட்கத்தோடு அவனை விட்டு விலகி, “முரளி சரியாயிட்டான்” என்று கூறிக் கூச்சலிட்டு, சிறு குழந்தைபோல் துள்ளிக் குதித்தாள். முரளி குணமடைய வேண்டும் என்பதற்காக எந்தெந்தக் கடவுளை எல்லாம் வேண்டிக்கொண்டாளோ அந்தக் கடவுளுக்கெல்லாம் தன் மனத்தால் சத்யா நன்றியைத் தெரிவித்தாள்.

பாட்டும் பரதமும் மீண்டும் ஒன்று சேர்ந்தது.


 

Comments

Popular posts from this blog

தாவத் தெரிந்த குரங்கு

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்

கிருஷ்ண லீலா