சுமதிக்கு மட்டும் ஏகாதசி

 சுமதிக்கு மட்டும் ஏகாதசி[1]


சுமதியைப் பார்த்துப் பல நாட்களாகிவிட்டன என்று நினைத்த தேவிகா அவளைப் பார்ப்பதற்காக அவள் வீட்டுக்குப் போனாள். சுமதியைப் பார்த்த தேவிகா பெரும் அதிர்ச்சி அடைந்தாள். சுமதி எப்பொழுதும் நன்றாக உடையுடுத்திக்கொண்டு, தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவள். அத்தகையவள், அன்று, அழுக்குப் படிந்த புடவையை அலங்கோலமாகக் கட்டிக்கொண்டு, தலை வாராமல், முகம் கழுவாமல், தூக்கத்திலிருந்து அப்பொழுதுதான் கண் விழித்ததுபோல் படுக்கையில் படுத்திருந்தாள். 

சுமதியைப் பார்த்த தேவிகா அதிர்ச்சியோடு. “ஏ, சுமதி உனக்கு என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்கே? உடம்பு சரியில்லையா?” என்று கவலையோடு கேட்டாள். “உடம்பெல்லாம் நல்லாதான் இருக்கு. நேத்திக்கி ராத்திரி தூக்கமே வரல்லை. இந்த ஊர்லே இருக்கிற எல்லாரும் ராத்திரி பூரா தூங்குறாங்க. மனுஷங்க மட்டுமில்ல. ஆடு, மாடு, நாய், நரி எல்லாம்கூடத் தூங்குது. நான் ஒருத்தி மட்டும் ராத்திரி பூராவும் முழிச்சுக்கிட்டு இருந்தேன்.  எல்லாரும் தூங்குறாங்க. எனக்கு மட்டும் ஏகாதசி. நேத்திக்கு மட்டுமில்ல. கொஞ்ச நாளாவே  இப்படித்தான்.  எல்லா நாளும் எனக்கு ஏகாதசிதான்.” என்று சுமதி அழுதுகொண்டே கூறினாள்.

“சரி, சரி, அழாதே. கண்ணைத் துடைச்சுக்க. நீ தூங்கலைங்கிறது எனக்குப் புரியுது. ஏன் தூங்கலைன்னுதான் புரியிலை” என்றாள் தேவிகா.

“எல்லாம் உன்னால வந்த வினைதான்.” என்று சற்று கோபத்தோடு உரத்த குரலில் கூறினாள் சுமதி.

சுமதி கூறியதைக் கேட்ட தேவிகா ஆச்சர்ய்த்தோடும் குழப்பத்தோடும், ”நான் என்னடி பண்ணினேன்? இது என்ன புதுக்கதையா இருக்கு? நீ சொல்றது ஒண்ணுமே புரியிலை. கொஞ்சம் பொறுமையா, விளக்கமா சொல்லுடி.’ என்றாள் தேவிகா.

“போன வருஷம், ஒரு நாள் நான் பாட்டுக்கு வீட்டுலே சும்மா இருந்தேன். அப்ப நீ வந்து, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிச்ச புதுப்படம்”படையப்பா” நம்ப ஊர்லே ராஜா தியேட்டர்லே ரிலீசா ஆயிருக்கு. வா, போகலாம்னு கூப்பிட்டெ. நான் வரலைன்னு சொல்லாம, சரின்னு உடனே கிளம்பி, உன்னோட ”படையப்பா” படம் பாக்கப் போனேன். அங்க போனா, டிக்கட் கிடைக்கலை. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நின்னுகிட்டு இருந்தோம். அப்ப உனக்குத் தெரிந்த பையன் சங்கர்ன்னு  ஒருத்தன் நம்பகிட்டு வந்து,   ரெண்டு எக்ஸ்ட்ரா டிக்கட் இருக்கு , வேணுமான்னு கேட்டான்.   நாம, ரொம்ப சந்தோஷமா சரின்னு சொன்னோம். அவன் காசு வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டான். அவனோட சேந்து சினிமா பாத்து முடிச்ச உடனே, அவனோட ஹோட்டலுக்குப் போய் டிஃபன் சாப்பிட்டோம். ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள் சுமதி.

சுமதி சொன்ன நிகழ்ச்சி தேவிகாவுக்கு நன்றாக நினைவுக்கு வந்தது. ஆனால், எப்பொழுதோ சினிமா பார்த்ததற்கும், இப்பொழுது சுமதி தூங்காமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. “ஆமாம். சங்கரோடு சேர்ந்து சினிமா பாத்தோம். அதுக்கும் நீ தூங்காம இருக்கிறதுக்கும் என்னடி சம்பந்தம்?” என்று கேட்டாள் தேவிகா.

“சம்பந்தம் இருக்கிறதனாலேதான் சொல்றேன். அன்னிக்கி நாமெல்லாம் சினிமா பாத்ததுக்கு அப்புறம், அவன் என்னோட பழக ஆரம்பித்தான். எனக்கும் அவனை ரொம்பப் பிடிச்சிருந்தது. அதிலிருந்து நாங்க ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சோம்.” என்றாள் சுமதி.

“சங்கர் எனக்கு தூரத்துச் சொந்தம். என்னோட ரெண்டு வயசு மூத்தவன். எனக்கு அவன் அண்ணன் முறை. அவன் ரொம்ப நல்லவன். நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறிங்கன்னு எனக்குத் இத்தனை நாளாத் தெரியாதே. பெரிய ஆளுடி நீ. அது சரி, நீ ஏன் தூங்காம இருக்கே? விஷயத்துக்கு வா.” என்றாள்.

“சங்கரும் நானும் முதல்லே, வாரத்துலே ஒருநாள் சந்திச்சோம். அப்புறம் அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சோம். எப்பொழுதும் மத்தியானம் நான் வேலை பாக்குற இடத்துக்கு வருவான். நாங்க ரெண்டுபேரும் எங்கேயாவது தனியா ஒரு இடத்துலே சந்திப்போம். எங்க அப்பாவும் அம்மாவும் ஒரு கல்யாணத்துக்காகத் திருச்சிக்கு போகப்போறாங்க. எனக்கு லீவு கிடைக்கலை. அதனாலே, நான் தானியாத்தான் வீட்டுலே இருக்கப்போறேன்னு அவன்கிட்ட சொன்னேன். ஒருநாள் சாயந்திரம், அப்பா அம்மா இல்லாத சமயத்துலே, சங்கர் எங்க வீட்டுக்கு வந்தான்.  நான் எனக்குத் தெரிஞ்சதைச் சமைத்தேன். அவனும் எனக்கு உதவி செய்தான். நான் சமைத்ததை அவன் ரொம்ப ரசித்துச் சாப்பிட்டான். ”சுமதி, உன் சமையல் பிரமாதம்” ன்னு சொன்னான். அப்புறம் கொஞ்ச நேரம் ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தோம். மணி ஒன்பது ஆச்சு. அவன் இன்னும் எங்க வீட்டிலே இருந்து கிளம்பாம பேசிக்கிட்டே இருந்தான். நான் தனியா இருக்கிறதைவிட அவனோட இருந்தது நல்லாத்தான் இருந்தது. திடீரென்று என்கிட்ட  ரொம்ப நெருக்கமா வந்து உட்கார்ந்தான். தயங்கித் தயங்கி ஏதோ சொன்னான். முதல்ல அவன் என்ன சொன்னான்னு எனக்குப் புரியலை. அப்புறம் கொஞ்சம் புரியும்படி சொன்னான். நான் சற்று விலகி உட்கார்ந்தேன். வெட்கம் ஒருபக்கம்; பயம் ஒரு பக்கம்.  அவன் அப்படிக் கேட்பான் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவன் அப்படிக் கேட்டவுடன் எனக்கு எங்க அப்பா அம்மா ஞாபகமும் அவுங்க என்ன நினைப்பாங்க என்ற நினைப்பும் வந்தது. ’அதெல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். மீண்டு ஒருமுறை கேட்டான்; கெஞ்சினான். நான் சற்றுக் கண்டிப்பாக, “கல்யாணத்துக்கு அப்புறம்தான்.’ என்று  உறுதியாகச் சொன்னேன். அவன் ஏமாற்றத்தோடு, ‘நாழி ஆயிட்டுட்டுது, நான் வர்ரேன்.’ என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பினான்.” என்று மூச்சுவிடாமல் சொல்லிய சுமதிக்குத்  தொடர முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.  

“ சுமதி, யூ ஆர் கிரேட். நான் உன்னை நினைச்சு பெருமைப்படுறேன்.” ஏன்று கூறி தேவிகா சுமதியைக்  கட்டிப்பிடித்தாள்.

சுமதி தொடர்ந்தாள்.” அதுக்கப்புறம் ஒருவாரமா லஞ்ச் சமயத்துலே சங்கர் என்னைப் பார்க்க வரவே இல்லை. நான் அவனிடம் அவ்வாறு கூறியதால் அவன் என்மீது கோபித்துக்கொண்டானா? நான் அவனை என் உயிருக்கும் மேலாகக் காதலிக்கிறேன். அவன் இல்லாம நான் உயிரோடு இருக்க மாட்டேன். நான் செய்தது சரியா? தவறா? இனிமேல் அவனைச் சந்திக்க முடியுமா?” என்றெல்லாம் என்னையே  கேட்டுக்கேட்டு நான் பைத்தியம் பிடிச்சவ மாதிரி ஆயிட்டேன். நேத்திக்கு ராத்திரி தூங்கவே முடியலை. எங்கேயாவது போய் முட்டிக்கலாமான்னு தோணுச்சு. நான் தூங்க முடியாம தவிக்கிறப்ப, தூங்கிறவங்களை நினைச்சா கோபமா வந்தது. அவுங்க எல்லாரையும் ஒரு தடியெடுத்து அடிக்கணும்போல் ஆத்திரம் வந்தது. ’ஆ’, ’ஓ’ன்னு கூச்சலிட்டுக் கலாட்டா பண்ணலாமன்னுகூட நினைச்சேன். என்ன செய்றதுன்னு தெரியிலடி.” என்று சுமதி சொல்லி முடித்தாள்.

“சுமதி! நீ அப்படி அவன்கிட்ட சொன்னதுலே எந்தத் தப்பும் இல்லை. ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள? கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்.’ன்னு நீ படிச்சிருக்கில்லே. அந்தக் குறளுக்கு எடுத்துக்காட்டாகத் தான் நீ நடந்திருக்கே. உன்மீது சங்கருக்கு மரியாதை அதிகமாகி இருக்கும். அவன் அவ்வாறு உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டதை நினைச்சு அவனும் உன்னைப்போல் தூங்காம தவித்துக்கொண்டிருப்பான். எங்க  அண்ணன் சந்துருவுக்கு சங்கரை நல்லாத் தெரியும். நான் அவன்கிட்ட சொல்லி சங்கரிடம் பேசச் சொல்றேன்

”நான் சொன்னதை எல்லாம் அப்படியே உங்க அண்ணன்கிட்ட சொல்லப்போறியா?” என்று கவலையோடும் வெட்கத்தோடும்  சுமதி தேவிகாவிடம் கேட்டாள்.  அதற்கு, தேவிகா, “இல்லை. அவனைப் பாக்காம நீ ரொம்ப கவலையோடு இருக்கேன்னு எங்க அண்ணன்கிட்ட சொல்லி, அவன் உன்னை வந்து பாக்கிறதுக்கு ஏற்பாடு செய்யப் போகிறேன்.” என்று கூறி ஆறுதல் அளித்தாள் தேவிகா.

சந்துரு சங்கரைப் பார்த்துப் பேசிய பிறகு, சுமதியின் நிலைமையைப் புரிந்துகொண்ட சங்கர், மறுநாள் மத்தியானம் லஞ்ச் சமயத்தில் வந்து சுமதியைப் பார்த்தான். அவனைப் பார்த்தவுடன் சுமதிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட முயற்சி செய்தாள். ”அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்”என்று சொல்லிவிட்டு, “ அதனால, உடனடியா நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப்போகிறேன்” என்றான் சங்கர்.

ஏகாதசிக்குப்பின் வரப்போகும் விருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் சுமதி.


6. நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: பதுமனார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவி தலைவனைப் பிரிந்திருக்கிறாள். பிரிவினால் விளைந்த வருத்தத்தால் அவளால் தூங்க முடியவில்லை. நள்ளிரவில் அனைவரும் உறங்கிய பிறகும் தான் மட்டும் தூங்க  முடியாமல் பட்ட துன்பத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

 

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்

தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

 

அருஞ்சொற்பொருள்: நள் = நடு, செறிதல், மிகுதிப்பொருள் தரும் ஓர் இடைச்சொல், இரவு; யாமம் = நள்ளிரவு; அவிந்து = ஓய்ந்து ; மாக்கள் = ஐய்யறிவு உடையவர்கள், மனிதர்; முனிவு = வெறுப்பு, வருத்தம்; நனம் = அகற்சி; நனந்தலை =அகன்றவிடம்; துஞ்சுதல் = தூங்குதல்; மன்ற = உறுதியாக.

உரை: நடு இரவு இருள் மிகுந்ததாக உள்ளது. மனிதர்கள் அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டு, இனிமையாக உறங்குகின்றனர். அகன்ற இடத்தையுடைய இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வருத்தமின்றி உறங்குகின்றன. நான் ஒருத்தி மட்டும் (உறுதியாகத்) தூங்காமல் இருக்கிறேன்.

விளக்கம்: இப்பாடலில், தலைவி “மாக்கள்” என்று குறிப்பிடுவது அவள் வீட்டில் உள்ளவர்களைக் குறிக்கும். அவர்கள் அனைவரும் அவளுடைய மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால், சினமுற்ற தலைவி, அவர்களை ஐய்யறிவு உடையவர்கள் என்று குறிப்பிடுகிறாள் என்று கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

இப்பாடலில், உரிப்பொருளாகிய இரங்கல் குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் நெய்தற் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

28. பாலை - தலைவி கூற்று

 

பாடியவர்: ஒளவையார்.

ஔவையார் (15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388): தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் காண்கிறோம்.  சங்க காலத்தில் வாழ்ந்து, அதியமான் நெடுமான் அஞ்சியோடு நெருங்கிய நட்பு கொண்டு அவனைப் புகழ்ந்து பாடிய ஔவையார் மற்ற ஔவையார்களைவிடக் காலத்தால் முந்தியவர்.  இவருடைய பாடல்கள் புறநானூற்றில் முப்பத்து மூன்றும் (87-104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390, 392),

அகநானூற்றில் நான்கும் ( 11, 147, 273, 303), குறுந்தொகையில் பதினைந்தும், நற்றிணையில் ஏழும் 129, 187, 295, 371, 381, 390, 394) உள்ளன. .  இவர் அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி ஆகிய பல அரசர்களைப் பற்றிப் பாடிய  பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

            சங்க காலத்துப் புலவராகிய ஔவையார்க்குப் பின்னர், நாயன்மார்கள் காலத்தில் (கி.பி. எட்டாம் நூற்றாண்டில்) ஔவையார் ஒருவர் மிகுந்த சிவ பக்தியோடு வாழ்ந்ததாகவும் சிலர் கருதுகின்றனர். 

            அடுத்து, மற்றுமொரு ஔவையார் கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் வாழ்ந்த காலத்தில் (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர்.  இவர், அக்காலத்துச் சோழ அரசனுடைய அவைக்களத்திலும், சிறு பகுதிகளை ஆண்ட தலைவர்களோடும் ஏழை எளியவர்களோடும் பழகியவர்.  இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலிய நீதி நூல்களைச் சிறுவர்கள் கற்பதற்கு ஏற்ற எளிய நடையில் இயற்றியவர்.

            அடுத்து, ஞானக்குறள் என்ற ஒரு நூல் ஔவையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது.  இந்நூலில், உயிரின் தன்மையையும் யோகநெறியையும் பற்றிய ஆழ்ந்த கருத்துகள் காணப்படுகின்றன.  விநாயகர் அகவல் என்ற பக்திச் சுவை ததும்பும்  நூல் ஔவையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.  இவர் ஞானக்குறள் எழுதிய ஔவையார் அல்லாமல் வேறொருவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

            ஆகவே, தமிழ் இலக்கிய வரலாற்றில் பல ஔவையார்கள் காணப்பட்டாலும், சங்க காலத்து ஔவையார் காலத்தால் முந்தியவர். ஔவையார் என்ற பெயர் கொண்ட புலவர்களின் வரலாறு தனியே ஆய்வு செய்தற்குரியது.

 

பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் குறித்த காலத்தில் வராததால் தலைவி வருந்துகிறாள். தலைவியின்  வருத்தத்தை அறிந்த தோழி அவளைக் காண வருகிறாள். தலைவி தான் படும் துன்பத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

 

முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்

அலமரல் அசைவளி அலைப்பவென்

உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.

 

அருஞ்சொற்பொருள்: ஓரேன் = அறியேன்; பெற்றி =  காரியமுறை; அலமரல் = சுழலல்; வளி = காற்று;அசைவளி = அசையும் காற்று; அலைப்ப = வருத்த; உயவு = வருத்தம், துன்பம்; துஞ்சுதல் = உறங்குதல்.                                                                           

உரை: சுழன்று வருகின்ற தென்றல் காற்று எனக்குக் காம நோயைத் தந்து என்னை வருத்துகிறது. எனக்கு வருத்தத்தை தரும்  என்னுடைய நோயை உணர்ந்து கொள்ளாமல், கவலையின்றித் தூங்கும் இவ்வூர் மக்களை நினைத்து  நான் முட்டிக் கொள்வேனா? அவர்களைத்  தாக்குவேனா? அல்லது,  ஏதாவது ஒரு போலிக்காரணத்தை முன்வைத்து, ஆவென்றும் ஒல்லென்றும் கூச்சலிட்டு எல்லோரையும் கூப்பிடுவேனா?  என்ன செய்வது என்பதை அறியேன்.

விளக்கம்: தலைவி கூச்சலிட்டால் ஊர்மக்களிடையே அலர் எழும். அந்த அலரினால் தனக்கும் தலைவனுக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலைவி எண்ணுவதாகத் தோன்றுகிறது.


 

176. தோழி கூற்று

.

பாடியவர்: வருமுலையாரித்தியார். இவர் பாடியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

திணை: குறிஞ்சி.

கூற்று: தோழி, கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது.  (குறை நயப்ப - தலைவனது காரியத்தை விரும்பி நிறைவேற்றுதற்கு.)

கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணைப் பார்த்தான், அவள் அழகில் மயங்கினான். அவளை அடைய விரும்பினான். தனக்குத் தலைவியின் மேல் உள்ள விருப்பத்தைத் தலைவியின் தோழியிடம் கூறி, தலைவியைச் சந்திப்பதற்கு அவள் உதவியை நாடினான். ஒருமுறை அன்று; இருமுறை அன்று; அவன் பலமுறை தோழியின்  உதவியை வேண்டினான். தோழி தலைவியிடம் அவனுக்காகப் பரிந்துரைத்தாள். ஆனால், தலைவி அவனை ஏற்கவில்லை.  அதனால் ஏமாற்றம் அடைந்த தலைவன் இப்பொழுது எங்கோ சென்றுவிட்டான். 

 

ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்

பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி என்

நன்னர் நெஞ்சம்  நெகிழ்த்த பின்றை

வரைமுதிர் தேனின் போகியோனே

ஆசுஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?

வேறுபுலன் நன்னாட்டுப் பெய்த

ஏறுடை மழையின் கலிழும் என் நெஞ்சே.

 

கொண்டு கூட்டு: ஒருநாள் வாரலன், இருநாள் வாரலன், பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி  என் நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை, வரைமுதிர் தேனிற் போகியோன். ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ? வேறு புலன் நன்னாட்டுப் பெய்த ஏறுடை மழையிற் கலிழும் என் னெஞ்சே.

அருஞ்சொற்பொருள்: பணிமொழி = பணிவான சொற்கள்; பயிற்றி = கூறி; நன்னர் = நன்மை ( நல்ல); பின்றை = பிறகு; வரை = மலை; ஆசு = பற்றுக்கோடு ; எந்தை = என் தலைவன் ( நம் தலைவன்); புலன் = புலம் = இடம்; ஏறு = இடி; கலிழும் = கலங்கும்.

உரை: தலைவன் ஒருநாள் வரவில்லை; இரண்டு நாட்கள் வரவில்லை. பல நாட்கள் வந்து, பணிவான சொற்களைப் பலமுறை கூறி எனது நல்ல நெஞ்சத்தை இரங்கச் செய்த பிறகு மலையிலிருந்து முதிர்ந்து விழுந்த தேனடையைப் போலப் போனவனும், நமக்குப் பற்றுக்கோடாக இருக்கும் எம் தந்தை போன்றவனுமாகிய நம் தலைவன் இப்பொழுது  எங்கே இருக்கின்றானோ? வேற்றுப் புலங்களையுடைய நல்ல நாட்டில், இடியுடன் பெய்த மழைநீர் கலங்கி நம் நாட்டிற்கு வருவது போல, எங்கோ இருக்கும் தலைவனை நினைத்து என் நெஞ்சு கலங்குகின்றது.

சிறப்புக் குறிப்பு: மலையில் முதிர்ந்த தேனடை, தன்னிடம் உள்ள தேன் ஒருவருக்கும் பயன்படாது விழுந்து அழிந்ததைப் போல, தான் கூறுவதைத் தலைவி ஏற்றுக் கொள்ளாததால்,  தலைவன் எங்கோ சென்றான் என்பது குறிப்பு. வேற்று நாட்டில் இடியுடன் பெய்த மழை கலங்கித் தலைவி இருக்கும் நாட்டிற்கு வருவதைப் போல் எங்கோ இருக்கும்  தலைவனைப் பற்றிய நினைவு தோழிக்கு மனக்கலக்கத்தைத் தருகின்றது.

 



[1]. மார்கழி மாதத்தில், அமாவாசையிலிருந்து பதினொன்றாம் நாள் வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்துக்கள், குறிப்பாக வைணவர்கள், ஏகாதசியன்று இரவு முழுதும், எதையும் உண்ணாமல், உறங்காமல் இருந்து மறுநாள் காலை, கடவுளைத் தொழுதபின், பெரிய விருந்துபோல் பல உணவுவகைளையும் உண்டு மகிழ்வர்.

 

Comments

Popular posts from this blog

தாவத் தெரிந்த குரங்கு

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்

கிருஷ்ண லீலா