தாவத் தெரிந்த குரங்கு

                                                       


அன்றைய வகுப்புகள் எல்லாம் முடிந்த பிறகு, வீட்டிற்குப் போவதற்காக சுந்தர் தன்னுடைய மோட்டார் சைக்கிள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அங்கே, சற்று தூரத்தில் ஒரு மரத்தடியில் சில பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருத்தி ஏதோ பாடிக்கொண்டிருந்தாள். மற்றொருத்தி, அவளைப் பார்த்து, “, திலகா, எல்லா பாட்டும் பாடுறியே, உங்க பாட்டி காலத்துக் காதல் பாட்டு ஒண்ணு பாடேன்.” என்றாள். உடனே, திலகா, “அத்தான் என் அத்தான்என்ற 1961 ஆம் ஆண்டு வெளிவந்த, பாவ மன்னிப்பு என்ற படத்தில், கவியரசு கண்ணதாசன் எழுதி, மெல்லிசை மன்னர்களில் ஒருவரான எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்து, இசைக்குயில் பி. சுஷீலா பாடிய பாடலைப் பாடினாள். திலகா தன்னை நோக்கி அந்தப் பாடலைப் பாடியதாக சுந்தருக்குத் தோன்றியது. அது அவனுடைய கற்பனைதான். அவனையோ அல்லது அவன் அங்கு நிற்பதோ திலகாவுக்குத் தெரியாது; அவளுக்கு மட்டுமல்ல,  அங்கிருந்த எந்தப் பெண்ணுக்கும் தெரியாது.  

அந்தக் கூட்டத்தில் திலகாவோடு இருந்த இன்னொரு பெண், “அந்தப் பாட்டு நல்லா இருந்தது. உங்க அத்தான்கிட்ட மறக்காம அதைப் பாடு. சரி, இப்ப உங்க அம்மா காலத்துப் பாட்டு ஒண்ணு பாடு.” என்றாள். அவள் சொல்லி முடிப்பதற்குமுன், திலகா, 1985 ஆம் ஆண்டு வெளிவந்த சிந்து பைரவி என்ற படத்தில், கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, இசைஞானி இளையராஜா இசை அமைத்து, சின்னக்குயில் கே. எஸ். சித்ரா பாடியபாடறியேன் படிப்பறியேன்என்ற தேசிய விருதுபெற்ற பாடலைப் பாடினாள். அங்கிருந்த பெண்கள் எல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்து திலகாவை உற்சாகப் படுத்தினார்கள். அவர்கள் எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தபொழுது, சுந்தருக்குத் தானும் கைதட்டி, தன்னுடைய பாராட்டுகளைத் திலகாவுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று நினைத்து கைதட்ட முயற்சி செய்தான். கைதட்டினால், தான் இருப்பது அங்குள்ள பெண்களுக்குத் தெரியவரும். அவர்களுக்குத் தெரிந்தால், “மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?” என்று திலகா பாடினாலும் பாடுவாளோ என்று நினைத்து சுந்தர், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

அந்த இரண்டு பாடல்களையும் பாடிய பிறகு, ஒரு நேயர் விருப்பம் நிகழ்ச்சிபோல் அவளுடைய தோழிகள் விரும்பிக் கேட்ட பாடல்கள் பலவற்றையும் திலகா பாடினாள். அந்தக் கூட்டத்தில் இருந்த பெண் ஒருந்தி, “, திலகா, அடுத்த வாரம் நம்ப காலேஜ்லே நடக்கப் போகும் பாட்டுப் போட்டியில் நீ அவசியம் கலந்துக்கணும். அதிலே நீ ஜெயிச்சா, நீ சென்னையில நடக்கும் அனைத்துக் கல்லூரி பாட்டுப் போட்டிக்கு நம்ப காலேஜ் சார்பா போகலாம். அதிலே ஜெயிச்சா, நீ ரொம்ப ஃபேமசாயிடுவே. அப்புறம் சினிமாவிலே பின்னணிப் பாடகி ஆகலாம்.” என்று கூறி திலகாவை ஊக்குவித்தாள். மற்ற எல்லாப் பென்களும் அதை ஆமோதித்தார்கள். திலகா, “, சாந்தி, வாடி, நாழியாச்சு, வீட்டுப்போகலாம்.” என்று சாந்தி என்பவளைக் கூப்பிட்டாள்.

அவர்கள் வரும் வழியில், நின்றுகொண்டிருந்த சுந்தர், திலகா அருகே வந்தவுடன், “எக்ஸ்குயூஸ் மீ, நீங்க ரொம்ப நல்லா பாடுறிங்கஎன்று கூறினான். குனிந்த தலை நிமிராமல், “தேங்க்ஸ்என்று வெட்கத்தோடு கூறி, அவனை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து விரைந்து சென்றாள் திலகா.  கொஞ்ச தூரம் போனவுடன், தன்னைப் பாராட்டிய அந்த இளைஞன் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு, சாந்தியிடம், “அவன் யாருன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள். “எனக்குத் தெரியாது. காயத்திரியைக் கேளு. அவளுக்கு எல்லா பசங்களுடைய ஜாதகமும் தெரியும்.” என்றாள் சாந்தி.

மறுநாள், காயத்திரியிடம், “நேத்திக்கு, நாம வர்ர வழியிலிருந்த ஒரு பையன் நான் ரொம்ப நல்லாப் பாடுறேன்னு சொன்னானே. அவன் யாருன்னு உனக்குத் தெரியுமா?” என்று திலகா கேட்டாள். சுந்தர் அதே காலேஜ்லே MBA படிப்பதாகவும், அவன் சென்ற ஆண்டு, கல்லூரிப் பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றதாகவும் திலகா தெரிந்துகொண்டாள். நன்றாகப் பாடத்தெரிந்த ஒருவன் தன்னைப் பாராட்டியதை நினைத்துத் திலகா மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தாள்.

அந்தக் கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்தி கூறியது போல், அடுத்த வாரம் சுந்தரும் திலகாவும் படிக்கும் இலயோலா கல்லூரியில் பாட்டுப்போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில், சுந்தர் சிறந்த பாடகனாகவும், திலகா சிறந்த பாடகியாகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

முறையாக சங்கீதம் கற்காவிட்டாலும், சுந்தருக்கு சங்கீதத்தில் மிகுந்த விருப்பம் உண்டு. பாடல்களை மனப்பாடம் செய்து, குளியலறையில் தனக்குத்தானே பாடிக்கொண்டிருந்த சுந்தர், கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான், மேடைகளில் பாட ஆரம்பித்திருக்கிறான். இப்பொழுது, கல்லூரிப் பாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றதால், திலகாவோடு தங்கள் கல்லூரி சார்பாக சென்னையில் நடைபெறும் அனைத்துக் கல்லூரி பாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளப் போவதை நினைத்து அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. பாட்டுப் போட்டிகளில் பாடுவதற்கும் திலகாவோடு பழகுவதற்கும்  கிடைக்கப்போகும் வாய்ப்புகளை நினைத்து சுந்தர் இரவிலும் பகலிலும் கனவு கண்டுகொண்டிருந்தான்.

சென்னையில் பல கல்லூரிகள் இருப்பதால், சென்னையைப் பல பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கிடையே போட்டி நடைபெற்றது. முதல் போட்டி, சுந்தரும் திலகாவும் படிக்கும் இலயோலா கல்லூரிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் இடையே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திலகாவுக்குப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தது. ஆனால், கோடம்பாக்கத்தில் இருக்கும் அவள் வீட்டிலிருந்து கிண்டிக்கு எப்படிப் போவது, எப்படித் தனியாகப் போவது என்பதை நினைத்தால் அவளுக்குப் பயமாக இருந்தது. இவ்வாறு திலகா குழப்பத்தோடு இருந்தபொழுது, சுந்தர், “திலகா, நானும் அதே போட்டிக்குத் தானே போகிறேன். நாம ரெண்டுபேரும் ஒண்ணா போகலாம்.” என்று ஆர்வத்தோடு கூறினான். திலகாவுக்கு அவனோடு தனியாகப் போவதற்குச் சற்று தயக்கம். “என்னோடு, என் ஃபிரண்டு சாந்தியும் வருவாள். நாம மூணுபேரும் ஒண்ணா போகலாமா?” என்று திலகா சுந்தரைக் கேட்டாள். சுந்தர், “நீங்க ரெண்டு பேரும் நம்ப காலேஜுக்கு வந்திடுங்க. நான் உங்களை அங்கே சந்திக்கிறேன். உங்க கூட இன்னும் யாராவது வந்தாலும் சரி. நாம அனைவரும் சேர்ந்து போகலாம்.” என்று சொன்னான்.

போட்டி அன்று, திலகாவும் சாந்தியும் சுந்தருக்காகக் காத்திருந்தார்கள். சுந்தர் ஒரு காரில் வந்தான். திலகாவும் சாந்தியும் அவனோடு காரில் கிண்டிக்குச் சென்றார்கள். “இவன் காலேஜுக்கு மோட்டார் சைக்கிளில் வர்ரான். இப்ப, பெரிய கார்லே வந்திருக்கான். பெரிய பணக்காரன் போலிருக்கு.” என்று திலகா நினைத்தாள். அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவளுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. அவன் யார் என்று அவனைத் தான் கேட்க வெட்கப்பட்டு, சாந்தியைக் கேட்கச் சொன்னாள்.

சுந்தர், இது உங்க வீட்டுக் காரா?” என்று சாந்தி சுந்தரைக் கேட்டாள். “இது எங்க கம்பெனி கார். எங்க அப்பா பேரு ரங்கராஜன். அவர் ராஜன் டிரேன்ஸ்போர்ட்ஸ் (Rajan Transports) என்கிற பேர்ல ஒரு எக்ஸ்போர்ட் இம்போர்ட் கம்பெனி வைச்சிருக்கார்.  எங்க கம்பெனியிலே அஞ்சாறு கார் இருக்கு. வேணுங்கிறபொழுது இந்தக் காரை நான் யூஸ் பண்ணலாம்னு அப்பா சொல்லியிருக்கார். எனக்குக் கார்லே போறதைவிட மோட்டார் சைக்கிளிலே போறதுதான் ரொம்பப் பிடிக்கும். அதனாலேதான், நான் காலேஜுக்கு மோட்டார் சைக்kiளில் வர்ரது வழக்கம்.” என்று தன்னைப் பற்றியும் தன் தகப்பானாரைப் பற்றியும் கூறினான் சுந்தர். “இனிமே, நாம எப்ப பாட்டுபோட்டிக்குப் போறதா இருந்தாலும், நான் கார்லேயே உன்னையும் உன் ஃபிரண்ட்ஸையும் கூட்டிட்டுப் போறேன். நீ கவலைப்பட வேண்டாம்.” என்று சுந்தர் திலகாவுக்கு உறுதியளித்தான்.

சுந்தர் சொல்லியதைக் கேட்டவுடன், திலகாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. ”இனிமேல் போட்டிக்கு எப்படிப் போவது என்று கவலைப்படத் தேவையில்லை. சுந்தர் கவனித்துக்கொள்வான். நான் பாடுவதிலே கவனம் செலுத்தினால் போதும்.” என்று நினைத்து நிம்மதியாக இருந்தாள்.

தொடர்ந்து போட்டியில் திலகாவும் சுந்தரும் கலந்துகொண்டார்கள். அவர்களுடைய பிரிவில் இருந்த கல்லூரிகள் அனைத்திலும் அவர்கள் இருவரும் வெற்றி பெற்றார்கள். சுந்தர் சிறந்த பாடகனாகவும், திலகா சிறந்த பாடகியாகவும், அவர்கள் இருவரும் சிறந்த டூயட் டீம் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் போட்டிக்குப் போகும்பொழுது, திலகாவோடு சாந்தியும் சில சமயங்களில் வேறு சிலரும் அவளோடு செல்வது வழக்கம். நாளடைவில் சுந்தரும் திலகாவும் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தார்கள். மற்றவர்கள் அவர்களோடு வருவது அவர்களுடைய தனிமைக்கு இடையூறாக இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். அவர்களும் இருவரும் தனிமையை விரும்பினார்கள்.

போட்டிகளுக்குப் போவது மட்டுமல்லாமல், சினிமா, ஹோட்டல் போன்ற இடங்களுக்கும் அவர்கள் தனியாகவே சென்றார்கள். இரண்டு பேர் மட்டுமே போவதால், மோட்டர் சைக்கிளில் போகத் தொடங்கினார்கள். முதலில் சுந்தரோடு மோட்டர் சைக்கிளில் போகும் பொழுது அவனை தழுவிக்கொண்டு போவதற்கு திலகா கொஞ்சம் வெட்கப்பட்டாள். ஆனால், நாளடைவில், அந்த நெருக்கத்தை இருவருமே ரசித்தார்கள்; விரும்பினார்கள். திலகாவும் சுந்தரும் இணைபிரியாத காதலர்கள் என்பது காலேஜில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகிவிட்டது.

போட்டிகள் எல்லாம் முடிவடைந்தன. சென்னைக் கல்லூரிகள் அனைத்திலும் சிறந்த பாடகியாக திலகா வெற்றிபெற்றாள். ஆண்களுக்கன போட்டியில் சுந்தர் இரண்டாம் இடத்தைப் பிடித்தான். டூயட் போட்டியில், சுந்தர்/திலகா குழுவிற்கு முதற்பரிசு கிடைத்தது.

 

போட்டிகள் எல்லாம் முடிந்தன. இறுதித் தேர்வுகளும் முடிந்தன. சுந்தர் MBA வில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றான். திலகா, தகவல்த் தொடர்புத்துறையில் (தகவல்த் தொடர்பு - Communications) முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றாள். இனிமேல், அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்காது என்பதைக் குறித்து சுந்தரும் திலகாவும் கவலை அடைந்தார்கள். ”படிப்பெல்லாம் முடிஞ்சாச்சு. இப்ப நீ என்ன பண்ணப் போற?” என்று சுந்தர் திலகாவைக் கேட்டான். திலகா, “நான் ஒரு ரேடியோ ஸ்டேஷன்ல டிஸ்க் ஜாக்கியா வேலை பார்க்கப் போகிறேன். இப்ப நைட் ஷிஃப்ட்லதான் வேலை கிடைச்சிருக்கு. இன்னும் கொஞ்சம் நாள்ள பகல் ஷிஃப்ட்க்கு மாத்திடுவாங்க.” என்றாள்.  ”நீ அவசியம் வேலை பாக்கணுமா?” என்று கேட்டான் சுந்தர். “ஆமா. அப்பா ரிடையர் ஆயிட்டார். வருமானம் அதிகமா இல்லை. தம்பியைப் படிக்க வைக்கணும். தம்பி படிச்சு முடிக்கிற வரைக்குமாவது வேலை பார்க்கணும். நீ என்ன பண்னப் போற?” என்று கேட்டாள் திலகா. “நான் எங்க அப்பா கம்பெனியிலே வேலை பார்க்கப்போறேன். நீ நைட் ஷிஃப்ட்லே வேலை ஆரம்பிக்கிறதுக்கு முன்னால நான் தினமும் உன்னை வந்து பார்க்கிறேன். இப்ப அப்பா ஃபாரின் போயிருக்கார். அவர் வந்தவுடன், அவர்கிட்ட பேசி வேற ஏற்பாடு செய்றேன்.” என்றான் சுந்தர்.

சுந்தர் குறிப்பாகவேற ஏற்பாடு செய்றேன்என்று சொன்னதற்கு என்ன பொருள் என்று திலகாவால் ஊகிக்க முடிந்தது. அவன் அவளைத் திருமணம் செய்துகொள்வதாக சொல்லாமல் சொன்னதாகத் திலகா நினைத்தாள்.

திலகாவின் அப்பாவைப் பல ஆண்டுகளாக அலுவலகத்திற்குக் காலையில்  அழைத்துக்கொண்டுபோய் சாயந்திரம் வீட்டுக்கு கொண்டுவந்து விட்டவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் முத்து. அவரைத் திலகாவுக்கு சுமார் பதினைந்து ஆண்டுகளாகத்  தெரியும். சிறுமியாக இருந்ததிலிருந்து ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் முத்துவை ஆட்டோ தாத்தா என்று திலகா கூப்பிடுவது வழக்கம். இப்பொழுது திலகாவை இரவில் ரேடியோ ஸ்டேஷனுக்கு அழைத்துக்கொண்டுபோய் விட்டுவிட்டு காலையில் வீட்டுக்கு கொண்டுவந்துவிடும் பொறுப்பை ஆட்டோ தாத்தா ஏற்றுக்கொண்டார்.

திலகாவின் வேலை இரவு ஒன்பது மணி முதல் காலை ஐந்து மணி வரை. ஆனால், அவள் தன் வேலையைத் தொடங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே போவதை வழக்கமாகக் கொண்டாள். அந்த ஒருமணி நேரம் சுந்தர் அவளோடு இருப்பான். சில நாட்களில் அவர்கள் இருவரும் ஏதாவது ஒரு கடைக்கோ அல்லது ஹோட்டலுக்குப் போய் நேரத்தைச் செலவழித்தார்கள்.

முதலில் இரவெல்லாம் விழித்துகொண்டு இருப்பதை திலகா விரும்பவில்லை. சில சமயம், திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பாமால், தானே சில பாடல்களப் பாடினாள் திலகா. அவள் பாடுவதை நேயர்கள் மிகவும் விரும்பிக் கேட்டார்கள். அதைக் கண்ட ரேடியோ ஸ்டேஷன் அதிகாரிகள், திலகாவின் நிகழ்ச்சிக்குநேயர் விருப்பம்என்று இருந்த பெயரை மாற்றி, “திலகாவின் விருப்பம்என்று மாற்றினார்கள். திலகா தன் விருப்பப்படி திரைப்படப் பாடல்களைத் தானே பாடி நேயர்களை மகிழ்வித்தாள். நேயர்கள் திலகாவுக்குதிரையிசைத் திலகம் திலகாஎன்று பட்டமளித்து அவளைப் பாராட்டினார்கள். வேலைக்கு வந்த சில நாட்களிலேயே அவள் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்தது. இரவெல்லாம் விழித்துக்கொண்டு பாடுவதைத் திலகா விரும்ப ஆரம்பித்தாள்.

இரவில், சுந்தரோடு மோட்டார் சைக்கிளில் செல்லும்பொழுதெல்லாம் திலகாவுக்கு மிகவும் பயமாக இருந்தது. தினமும் இரவில் சுந்தர் மோட்டார் சைக்கிளில் வருவதும் வீட்டுக்குத் திரும்பிப் போவதும் திலகாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவன் வெகுவேகமாக மோட்டர் சைக்கிளை ஓட்டுவதை நினைத்தால், அவனுக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்று திலகா பயந்தாள். ஒருநாள், சுந்தரோடு மோட்டர் சைக்கிளில் போகும்பொழுது, மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்த இளைஞன் ஒருவன், ஒரு காரோடு மோதி, அடிபட்டு இறந்து கிடந்ததைப் பார்த்தாள். அதற்குப் பிறகு, தன்னைப் பார்ப்பதற்கு வரவேண்டாம் என்று சுந்தரிடம் பலமுறை கூறினாள். இருந்தாலும் அவன் தினமும் தவறாமல் வந்துகொண்டிருந்தான்.

ஒருநாள், தொலைக்காட்சியில், டிஸ்கவரி சேனலில், ”ஒரு குரங்கின் வாழ்க்கை” (Life of a Monkey) என்று ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தாள். அந்த நிகழ்ச்சியில், ஒரு ஆண்குரங்கு மலையுச்சியில் உள்ள ஒரு மரத்தின் ஒருகிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்பொழுது, குறிதவறிக் கீழே விழுந்து இறந்தது. அதைப் பார்த்த அந்த ஆண்குரங்கின் துணையாக இருந்த பெண்குரங்கு, வருத்தம் தாங்காமல் தானும் விழுந்து உயிரை விடுவதைக் காட்டினார்கள்.   அதைப் பார்த்தவுடன், அவளுக்கு, ஒருகால், சுந்தருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டு அவன் இறந்தால் தானும் இறந்துவிட வேண்டும் என்று தோன்றியது. அந்த நிகழ்ச்சியை சுந்தர் பார்த்தால், அவளுடைய மனநிலையை அவன் புரிந்துகொள்வான் என்று நினைத்தாள்.

திலகா வீட்டில் ஃபோன் இல்லை. தன் தோழி சாந்தி வீட்டுக்குப்போய் சுந்தருக்கு ஃபோன் செய்தாள். ஆனால், அவனோடு பேச முடியவில்லை. ”சாந்தி, அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நான் சில நாட்களுக்கு வேலைக்குப் போக முடியாது. நீ சுந்தரைத் தொடர்புகொண்டு, அவனை, டிஸ்கவரி சேனலில் உள்ளஒரு குரங்கின் வாழ்க்கைஎன்ற நிகழ்ச்சியை தவறாமல் பார்க்குமாறு நான் சொன்னதாகச் சொல்என்று கேட்டுக்கொண்டாள் திலகா. திலகா கூறியபடி, சுந்தரை அந்த நிகழ்ச்சியைப் பார்க்குமாறு சாந்தி கூறினாள். மறுநாள், அந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, சுந்தர் சாந்தியை ஃபோனில் கூப்பிட்டு, “இந்தக் குரங்குக்குத் தாவத் தெரியும். திலகாவைக் கவலைப்படாமல் இருக்கச் சொல்.” என்றான்.

தன் தங்கையிடம், “நான் திலகா என்ற பெண்ணைக் காதலிக்கிறேன். இந்த செய்தியை சமயம் பார்த்து அம்மாவிடம் சொல்.” என்று கூறி அவளுடைய உதவியை நாடினான் சுந்தர். சுந்தரின் பெற்றோர்கள் அவனிடம் பேசி, திலகாவைப் பற்றியும், சுந்தர் அவளை மிகவும் விரும்புகிறான் என்பதையும் புரிந்துகொண்டார்கள். அவன் விருப்பப்படியே சுந்தருக்குத் திலகாவைத் திருமணம் செய்துவைப்பதற்குத் தேவையான முயற்சிகளை உடனே எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

சுந்தரின் அப்பா ரங்கராஜன் எதையும் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் என்ற கொள்கை உடையவர். அவருடைய அலுவலகத்தில் கோபல ஐயர் என்று ஒருவர் அவரிடம் வேலை பார்க்கிறார். அவர் திருமணத் தரகராக (Marriage Broker) இருந்து பல திருமணங்களை ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது ரங்கராஜனுக்குத் தெரியும். ரங்கராஜன் கோபால ஐயரைக் கூப்பிட்டு, “என் பையன் சுந்தரும் திலகா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறாங்க. நீங்க போய் திலகாவோடு அப்பா அம்மாவைப் பார்த்து, சுந்தருக்கு திலகாவைக் கல்யாணம் செய்துகொடுப்பதற்கு சம்மதிக்கவைக்கணும். என்ன சொல்றிங்க?” என்று கேட்டார். ”சார், கண்டிப்பா செய்றேன்.” என்று உறுதி அளித்தார் கோபால ஐயர்.

கோபல ஐயர், திலகாவுடைய பெற்றோரைச் சந்தித்து, ரங்கராஜன் குடும்பத்தைப் பற்றியும், சுந்தரைப் பற்றியும் புகழ்ந்து பேசி, சுந்தரும் திலகாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், அநேகமாக, அவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரிந்திருக்கலாம் என்றும் கூறினார். “ரங்கராஜன் சார் கல்யாணத்துக்கான செலவை எல்லாம் அவரே பாத்துப்பார். நீங்க அதைப் பத்திக் கவலைப்படத் தேவையில்லை. இது ரொம்ப நல்ல சம்பந்தம். நீங்க உங்க பொண்ணுகிட்ட பேசுங்க. உங்களுக்குச் சம்மதம்னா, சொல்லுங்க. மற்றதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நான் இன்னும் ரெண்டு நாள்ள வர்ரேன். உங்க முடிவைச் சொல்லுங்க.” என்று சொன்னார் கோபால ஐயர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோபால ஐயர் திலகாவின் பெற்றோரைச் சந்தித்து அவர்களுக்குத் திலகாவைச் சுந்தருக்குத் திருமணம் செய்விப்பதில் சம்மதம் என்று தெரிந்துகொண்டு அந்தச் செய்தியை ரங்கராஜனிடம் பகிர்ந்துகொண்டார்.

ரங்கராஜனும் அவர் மனைவியும் சுந்தரும் திலகாவை முறையாகப் பெண்பார்த்து திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். திருமணத்திற்கான செலவு அனைத்தையும் தானே ஏற்றுக்கொள்வதாக ரங்கராஜன் சொன்னதைக் கேட்டு திலகாவின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தார்கள்.

சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சுந்தருக்கும் திலகாவுக்கும் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருமண வரவேற்பில் விருந்தினர்களை மகிழ்விக்க புகழ்பெற்ற திரைப்படப் பாடகர்களின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார் ரங்கராஜன். திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர், புதுமணத் தம்பதிகளை வரவேற்கும்பொழுது, “Ladies and Gentlemen, please put your hands together and welcome the newly married couple Mr. and Mrs. Sundhar” என்று அறிவித்தார். அப்ப்பொழுது, சுந்தர் மற்றும் திலகாவின் நண்பர்கள் அவர்களைப் பாடுமாறு கூச்சலிட்டு வேண்டுகோள் விடுத்தனர். என்ன பாடுவது என்று சுந்தர் ஒருநிமிடம் சிந்தித்தான். உடனே, “சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம்என்று அவன் பாட ஆரம்பித்தவுடன், திலகா, “சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம்என்று மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிஇசைஞானி இளையராஜா இசையமைத்து, உலக நாயகன் கமல்ஹாசனும் இசையரசி ஜானகியும் பாடிய  பாட்டைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

திலகாவுக்கு மட்டும் கேட்கும் விதமாக, அவள் காதில், “இந்தக் குரங்குக்குத் தாவத் தெரியும்னு சொன்னேன்ல’” என்றான் சுந்தர். “ஆமாம். நீதாவத் தெரிந்த குரங்குதான்’, நீ செய்தவேற எற்பாடும்நல்லாதான் இருக்கு.” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தாள் திலகா

*****************************

இந்தச் சிறுகதை, குறுந்தொகையின் 69 ஆவது பாடலைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.

 

69. குறிஞ்சி - தோழி கூற்று

 

பாடியவர்: கடுந்தோட் கரவீரனார். கரவீரம் என்பது சோழ நாட்டில் திருவாரூருக்கு அருகில் உள்ள ஓரூர். இவர் அந்த ஊரைச் சார்ந்தவராக இருந்ததால் இப் புலவர் இப் பெயரைப் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறதுஇவர் பாடியதாக சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடல் மட்டுமே காணப்படுகிறது.

 

பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தலைவன் இரவு நேரத்தில் தலைவியைக் காணவருவதைத் தலைவியும் தோழியும் விரும்பவில்லை. இரவு நேரத்தில் வந்தால், அவனுக்கு எதாவது தீங்கு வருமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். ஒருநாள் இரவு தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். அப்பொழுது, “இனி, நீ இரவில் வரவேண்டாம். இவ்வாறு களவொழுக்கத்தில் உங்கள் காதலைத் தொடர்வதைவிட, நீ தலைவியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதே சிறந்தது.” என்று தலைவனிடம் தோழி மறைமுகமாகக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

 

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி

ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்

சாரல் நாட நடுநாள்

வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

 

அருஞ்சொற்பொருள்: கருங்கண் = கருமை நிறமான கண்கள்; தா = தாவுதல்; கலை = கரிய ஆண்குரங்கு; பெரும்பிறிது = இறப்பு; கைம்மை = கணவனை இழந்த நிலைமை; உய்யா = தாங்கிக்கொள்ள முடியாத; காமர் = விருப்பம்; மந்தி = பெண்குரங்கு; கல்லா = பயிற்சி இல்லாத; வன் = வலிய; பறழ் = குட்டி; கிளை = உறவு; அடுக்கம் = பக்க மலை; செகுத்தல் = கொல்லுதல்; சாரல் = மலைச்சாரல்; நடுநாள் = நள்ளிரவு; வாரல் = வருவதைத் தவிர்.

 

உரை: கருமை நிறமுள்ள கண்களையும், தாவும் இயல்பையும் உடைய ஆண்குரங்கு இறந்ததால், கைம்மைத் துன்பத்தைத் தாங்கமுடியாத, அந்த ஆண்குரங்கின் துணையாகிய பெண்குரங்கு, தன்னுடைய தொழிலில் (மரமேறுவது போன்ற தொழில்களில்) பயிற்சி இல்லாத தன்னுடைய வலிய குட்டியை, சுற்றம் ஆகிய குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு, உயர்ந்த மலைப்பக்கத்திலிருந்து தாவித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மலைச்சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே! இனி, நீ நள்ளிரவில் வரவேண்டாம். நீ நள்ளிரவில் வந்தால் உனக்குத் தீங்குண்டாகும் என்றெண்ணி நாங்கள் வருந்துவோம். நீ நீடூழி வாழ்வாயாக!

 

விளக்கம்: ”இரவில் வருவதால் உனக்குத் தீங்கு வரலாம். அவ்வாறு உனக்குத் தீங்கு நேர்ந்தால் தலைவி உயிர் வாழமாட்டாள். ஆகவே, நீ இரவில் வந்து களவொழுக்கத்தைத் தொடர்வதை நிறுத்திவிட்டு, முறைப்படி அவளைத் திருமணம் செய்துகொள்.” என்று தோழி தலைவனிடம் மறைமுகமாகக் கூறுகிறாள்.

ஆண்குரங்கு இறந்ததால், கைம்மையுடன் வாழ விரும்பாத பெண்குரங்கு, தன் உயிரைப் போக்கிகொண்டதைப்போல், நீ நள்ளிரவில் வரும்பொழுது புலி, யானை, பாம்பு முதலிய விலங்குகளின் கொடுமையால் நீ இறக்க நேர்ந்தால், தலைவியும் உன்னைப்பிரிந்து வாழ விரும்பாமல் இறந்துவிடுவாள் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

உள்ளுறை உவமத்திற்கு அப்பால் இன்னொரு செய்தியும் இப்பாடலில் உள்ளது. ”தலைவ! உன் நாட்டில் அஃறிணைப் பொருளாகிய  பெண்குரங்குகூடத் தன் துணையாகிய ஆண்குரங்கு இறந்தவுடன் தான் உயிர் வாழாமல் இறக்குமெனின், எம் தலைவி மட்டும் உன்னைப் பிரிந்து எப்படி வாழ்வாள்? அவளுடைய உணர்ச்சியை உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா?” என்று தோழி மறைமுகமாகக் கேட்பதாகவும் தோன்றுகிறது. இவ்வாறு, ஒரு பாடலில் உள்ளுறை உவமத்திற்கு அப்பாலும் ஒருபொருள் இருக்குமானால் அஃது இலக்கணத்தில்இறைச்சிஎன்று அழைக்கப்படுகிறது. பெரும்பான்மைத் தலைவனின் கொடுமையைக் கூறும் இடங்களிலும், சிறுபான்மை அன்பை உரைக்கும் இடங்களிலும் புலவர்கள் அகத்திணைப் பாடல்களில் இறைச்சியைப் பயன்படுத்துவது வழக்கம்.

Comments

  1. அருமை. சிறப்பாக உள்ளுறை உவமம், அப்பால் இறைச்சி விளக்கபட்டுள்ளது. ஒரு விலங்கு கூட பிரிவும், கைம்மையையும் ஆற்றாதபோது தலைவி நிலை தலைவனுக்கு மனதில் தைக்குமாறு மொழியப்பட்டுள்ளது.
    தங்களுடைய அருமையான தெளிவான எளிய விளக்கத்தால் பாடலையும் பொருளையையும் படிப்பதே போதுமானதாக உள்ளது. ஆரம்ப நிலையில் இருக்கிற போது கதையைப் படித்து, பிறகு பாடலைப் படித்தால் தெளிவு கிடைக்கும். ஆர்வமான பெருமுயற்சி.
    வணங்குகிறேன் ஐயா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்

கிருஷ்ண லீலா