கல்பனாவின் காதல்

                                                           கல்பனாவின் காதல்[1]


கல்பனாவும் அவள் தோழி ராதாவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் சந்தித்து, ஒரு குளத்தருகே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது, கல்பனா,” ராதா, அங்கே பார். அங்கே ரெண்டு  பறவைகள் சேர்ந்து போயிட்டிருக்கும் வழியில ஒரு தாமரைப்பூ இருக்குதே, தெரியுதா?“ என்றாள். “பாத்தேன். அந்தப் பறவைகளின் பெயர் என்ன? அவை இரண்டும், ஒன்றை ஒன்று பிரியாமல் போவுதே!” என்று ஆச்சர்யப்பட்டாள் ராதா. ”அந்தப் பறவைகளுக்குப் பெயர் மகன்றில். அவற்றில் ஒன்று ஆண்; மற்றொன்று பெண். அவை ரெண்டும் மனமொத்த கணவன் மனைவி போல், ஒன்றைவிட்டு ஒன்று பிரியாமல் எப்பொழுதும் ஜோடியாகத்தான் போகும். அவை போகும் வழியில் ஒரு பூ இருந்தால், அந்தப் பூவைத் தாண்டிப் போவதற்காக  அந்தப் பறவைகள் சில விநாடிகள் பிரிந்து சென்று மீண்டும் சேர்ந்தே செல்லும்.  பூவைக் கடப்பதற்காகப் பிரிந்திருக்கும் அந்த ஒவ்வொரு விநாடியும் அந்தப் பறவைகளுக்கு ஒரு வருஷம் போல் இருக்கும்னு படிச்சிருக்கேன்.” என்று சொல்லிவிட்டுக் கல்பானா மௌனமாக இருந்தாள்.

“கல்பனா, ஏன் இப்படி மௌனமா இருக்கே? மௌனம் மட்டுமல்ல; உன்னைப் பார்த்தா ஏதோ வருத்தமாக இருக்கிற மாதிரி தெரியுதே?” என்ன ஆச்சு?” என்று ராதா கேட்டாள். ”வழியில் இருந்த தாமரைப்பூவைக் கடந்து போகும்பொழுது, அந்தப் பறவைகளுக்கு ஒவ்வொரு விநாடியும் எப்படி ஒரு வருஷம்போல் இருக்குதோ அதைப் போலத்தான் எனக்கு ஒவ்வொரு விநாடியும் இருக்கு” என்றாள் கல்பனா. “உனக்கு ஏன் அப்படித் தோணுது? என்று கேட்டாள் ராதா.

“நானும் நிரஞ்சனும் காதலிக்கிறோமுன்னு உனக்குத் தெரியாதது போலக் கேக்கிறியே? அவனைப் பிரிஞ்சு இருக்கிறது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. தாங்க முடியலை. நாங்க இரண்டு பேரும் காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்த வரைக்கும் ஒவ்வொரு நாளும் சந்திச்சோம்; ஒண்ணா போய் லன்ச் சாப்பிடுவோம். நாங்க ஒருத்தரை ஒருத்த பாக்காம இருந்ததே இல்லை. இப்போ ஒரு நாலு மாசமா, நானும் அவனும் வேறவேற இடத்துல வேலை பாக்கிறோம். அதனால சந்திக்க முடியலை. வேலைக்குப் போகாத நாள்ல யாருக்கும் தெரியாம சில சமயம் சந்திக்கிறோம். எப்போவும் அவன் கூடவே இருக்கணும்னு தோணுது.என்ன பண்றதுன்னு தெரியலை.இப்படி இருக்கிறதைவிட செத்துடலாமான்னுகூட சில சமயம் தோணுது.” என்றாள் கல்பனா.

“நீயும் நிரஞ்சனும் காதலிக்கிறிங்கன்னு தெரியும், ஆனா, நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு நெருக்கம்னு தெரியாது. உங்க காதலைப் பத்தி அம்மாவுக்குத் தெரியுமா? என்று கேட்டாள் ராதா.

“நாங்க ரெண்டுபேரும் சின்ன வயசிலே இருந்து ஒண்ணா வளர்ந்தவங்க. நானும் நிரஞ்சனும் ஃபிரண்ட்ஸ்ன்னுதன்  அம்மா நினைச்சுகிட்டு இருக்காங்க. எங்க லவ்வைப் பத்தி அம்மாவுக்குத் தெரியாது. எப்ப சொல்றது? எப்படி சொல்றதுன்னு தெரியலை.” என்று கவலையோடு கூறினாள் கல்பனா.

கல்பனா தன் அம்மாவிடம் தன் காதலைப் பற்றிச் சொல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. கல்பனாவின் அம்மா சாரதா ஒரு பிராமணக் குடும்பத்துப் பெண். அவள் கல்லூரியில் படிக்கும்பொழுது அவளோடு படித்த சந்திரசேகரன் என்பவரைக் காதலித்தாள். சந்திரசேகரன் முதலியார் குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் பிராமணர் அல்ல என்ற காரணத்தால், சாரதாவின் பெற்றோர் சாரதாவின் காதலை ஏற்கவில்லை. தன் காதலைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால்,  சாரதா வீட்டைவிட்டு வெளியேறிச் சந்திரசேகரனை   ரிஜிஸ்டர்டு   திருமணம் செய்துகொண்டாள்.

திருமணத்துக்குப்  பிறகு   சந்திரசேகரனுக்கு ஒரு கம்பெனியில் நல்ல வேலை கிடைத்தது. தன் கணவர் அளித்த ஊக்கத்தால், சாரதா தன் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தாள். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், சாரதாவுக்கு அவளுடைய ஊரில் இருந்த கிறித்துவப் பள்ளி ஒன்றில் ஆசிரியை   வேலை கிடைத்தது.

 

சாரதாவும் சந்திரசேகரனும் எவருக்கும் தெரியாமல் கலப்பு மணம் செய்துகொண்டதால், சாரதாவின் பெற்றோர் மிகுந்த கோபமடைந்து, சாரதாவோடு பேச மறுத்தது மட்டுமல்லாமல், அவளோடு எந்தத்  தொடர்பும் இல்லாமல் இருந்தார்கள். பெற்றோரைப் போலவே சாரதாவின் அண்ணன், தம்பி மற்றும் தங்கை ஆகியோரும் சாரதாவோடு தொடர்பில்லாமல் இருந்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன் சாரதாவின் அப்பா இறந்துபோனார். அவர் இறந்த பொழுது சாரதாவைப் பார்க்கவேண்டும் என்று தன் விருப்பத்தைக் கூறினார். அவர் இறக்கும் தருவாயில், சாரதாவைப் பார்த்து, தான் அவள் திருமணத்திற்குச் சம்மதிகாதது தவறு என்று சொல்லி சாரதாவிடம் மன்னிப்புக் கேட்டார். எல்லோரையும் சாரதாவோடு மீண்டும் பழகுமாறு சொன்னார். அதற்குப் பிறகு, சாரதாவோடு எல்லோரும் பழக ஆரம்பித்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்குமுன்  சாரதாவின் கணவர் இறந்தார்.  அவர் இறந்த பிறகு. சாரதா குடும்பத்தினர் அவளுக்கு மிகவும் அன்பும் ஆதரவும் காட்ட ஆரம்பித்தார்கள்.

ஜாதிவிட்டு மற்றொரு ஜாதியைச் சார்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதற்கே இவ்வளவு எதிர்ப்பு இருந்தால், தான் கிறித்துவ மதத்தைச் சார்ந்த நிரஞ்சனைத் திருமணம் செய்துகொண்டால் எவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று கல்பனா எண்ணிப் பார்த்தாள். ”பல வருஷங்களுக்குப் பிறகு, இப்பொழுதுதான்,  அம்மாவோடு  எல்லோரும் மீண்டும் பழக ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நான் நிரஞ்சனைத் திருமணம் செதுகொள்ள விரும்புகிறேன் என்று சொன்னால் அம்மா என்ன நினைப்பாள்? மற்ற உறவினர்கள் என்ன நினைப்பார்கள்?” என்றெல்லாம் கல்பனா சிந்தித்து மனக்கவலையோடு இருந்தாள்.

 அன்றொருநாள், குளத்தங்கரையில் கல்பனாவைப் பார்த்த பிறகு, சில நாட்கள் கழித்து மீண்டும் ராதா காஞ்சனவைப் பார்க்கப்போனாள். அவள் போன சமயத்தில், கல்பனா வீட்டில் இல்லை. சாரதா மட்டும் வீட்டில் இருந்தாள்.  ராதாவும் சாரதாவின் மாணவிதான்.  ராதாவைப் பார்த்தவுடன், ”வாம்மா ராதா, எங்கே இந்தப் பக்கம் ? ரொம்ப நாளாச்சே உன்னைப் பார்த்து. நல்லா இருக்கியா ?”என்று சாரதா கேட்டாள்.

”நல்லா இருக்கேன் டீச்சர் . கல்பனாவைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்.” என்றாள் ராதா.

“கல்பனா இப்ப வந்துருவா, உட்கார். கொஞ்ச நாளா கல்பனா ஒரு மாதிரி இருக்கா, சரியா பேச மாட்டேங்றா. அவளைப் பாத்தா எதையோ இழந்ததைப் போல இருக்கா” என்று கவலையோடு சாரதா கூறினாள்.

ராதாவுக்கு கல்பனாவின் அம்மாவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. கல்பனாவைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “கல்பனா ஒரு பையனைக் காதலிக்கிறான்னு நினைக்கிறேன்.” என்று சொல்லி நிறுத்திக்கொண்டாள்.

“ஆமா. நானும் சந்தேகப்பட்டேன். அது யாருன்னு உனக்குத் தெரியுமா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் சாரதா.

“நான் சொல்லலாமா சொல்லக்கூடாதான்னு தெரியிலை. அந்தப் பையன் பேர் நிரஞ்சன்.” என்றாள் ராதா.

“அப்படியா? நிரஞ்சனா? என்னால் நம்பவே முடியலியே?” என்றாள் சாரதா

“ஏன் டீச்சர்? அப்படி சொல்றீங்க? என்று ஆச்சர்யத்தோடு கேட்டாள் ராதா.

“நிரஞ்சனும் கல்பனாவும் சின்னப் பிள்ளையிலே இருந்தே  ஒண்ணா வளர்ந்தவங்க. சின்னப் பசங்களா இருந்தப்பா ரெண்டுபேரும் சிண்டைப் புடிச்சு இழுத்துகிட்டு  எப்பப் பாத்தாலும் சண்டை போடுவாங்க. அப்புறம் போகப்போக அவ்வளவா சண்டை போடுறதில்லை. இப்ப கல்பனா  அவனைக் காதலிக்கிறாங்கிறதைக் கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷம். நிரஞ்சன் ரொம்ப நல்ல பையன். எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும்.” என்று மகிழ்ச்சி ததும்பும் முகத்தோடு கூறினாள் சாரதா. கல்பனாவின் வருகைக்காக சாரதாவும் ராதாவும் காத்திருந்தார்கள்.

கல்பனா வந்தவுடன் அவளைக் கட்டிப்பிடித்து சாரதா முத்தம் கொடுத்தாள். அவளை அறியாமலேயே தன் கண்களிலிருந்து வந்த ஆனந்தக் கண்ணீரை சாரதாவால் அடக்க முடியவில்லை.

“ஏன் அம்மா? என்னாச்சு? என்றாள் கல்பனா.

“நிரஞ்சனைப் பத்தி ராதா இப்பதான் சொன்னா. நீ எங்கிட்ட ஓண்ணுமே சொல்லலியே? நிரஞ்சன் தங்கமான பையன். எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும்.” என்றாள் சாரதா.

“சொல்லலாமுன்னு நினைச்சேன், எப்ப சொல்றதுன்னு தெரியில. எப்படி சொல்றதுன்னும் தெரியில. நிரஞ்சனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு நம்ப சொந்தக்காரங்களுக்குத் தெரிஞ்சா என்ன நினைப்பாங்கன்னு நினைச்சா பயமா இருந்தது. அதனாலதான் சொல்லல.” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள் ராதா.

“யார் என்ன நினைச்ச எனக்கென்னா? உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் சாரதா.

“சரி, நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க, நான் வர்ரேன்.” என்று கூறி ராதா புறப்பட்டாள்.

“இரு. நீ சந்தோஷமான செய்தியைச் சொல்லிருக்கே, இருந்து சாப்பிட்டுப் போ.” என்று சாரதா கூறினாள். சாரதாவின் விருந்தோம்பலைத் தவிர்க்க முடியாமல், தங்கியிருந்து , சாப்பிட்ட பிறகு ராதா தன் வீட்டுக்குச் சென்றாள்.

கல்பனாவின் காதலைப் பற்றி ராதா கூறியதைக் கேட்டவுடன் சாரதாவுக்கு அது ஒரு பெருமகிழ்சிதரும் அதிர்ச்சியாக இருந்தது. அதைப் போலவே கல்பனாவின் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவளுக்குத் தெரியாமல் செய்து அவளுக்குப் பெருமகிழ்ச்சி தரும் அதிர்ச்சியை அளிக்கவேண்டும் என்று சாரதா முடிவு செய்தாள்.

சாரதா நிரஞ்சனை கூப்பிட்டுப் பேசினாள். நிரஞ்சனுடைய பெற்றோர் முறையாக வந்து கல்பனாவைப் பெண்பார்த்து தங்கள் சம்மத்தைத் தெரிவித்தார்கள்.

அவளுடைய ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்று கல்பனாவுக்கும் நிரஞ்சனுக்கும் திருமணத்தை நடத்திக்கொடுக்குமாறு அங்குள்ள குருக்களைக் கேட்டாள் சாரதா.  நிரஞ்சன் கிறித்துவனாக இருப்பதால், இந்துமதப்படித் திருமணம் செய்விக்க முடியாது என்று குருக்கள் கூறினார். உடனே, சாரதா, தான் வேலை பார்க்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஆரோக்கியசாமியைச் சந்தித்து, கல்பனாவுக்கும் நிரஞ்சனுக்கும் கிறித்துவ முறைப்படி திருமணம் செய்விக்குமாறு கேட்டாள். அருட்தந்தை ஆரோக்கியசாமி கல்பனாவுக்கும் நிரஞ்சனுக்கும் திருமணம் செய்விப்பதில் தனக்குப் பெருமகிழ்ச்சி என்று கூறித் திருமணம் செய்விக்கச் சம்மதித்தார்.

நிரஞ்சன், ராதா மற்றும் ராதாவின் பெற்றோர்களின் உதவியோடு திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் கல்பனாவுக்குத் தெரியாமல் சாரதா செய்து முடித்தாள்.

தன்னுடைய இருபத்தைந்து ஆண்டு பணிநிறைவை முன்னிட்டு  பள்ளியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும் அந்த நிகச்ச்சிக்குக் கல்பனா அவசியம் வரவேண்டும் என்று சாரதா கல்பனாவிடம் கூறினாள்.

அந்த நிகழ்ச்சியன்று, சாரதாவும், கல்பனாவும், சிறப்பான ஆடை அலங்காரத்துடன்   பள்ளிக்குச் சென்றார்கள்.   

அங்கே, கல்பனாவின் உறவினர்களும், நிரஞ்சனின் உறவினர்களும், வேறு பலரும்  வந்திருந்திருந்தார்கள். கல்பனாவைக் கண்டவுடன் எல்லோரும் எழுந்து நின்று கூச்சலிட்டு அவளை வரவேற்றார்கள். அருட்தந்தை ஆரோக்கியசாமியும் நிரஞ்சனும் மேடையில் நின்றுகொண்டு கல்பனாவின் வரவுக்காகக் காந்திருந்தார்கள். அப்பொழுதுதான் அன்று அங்கே நடக்கப்போகும் நிகழ்ச்சி தனக்கும் நிரஞ்சனுக்கும் நடக்கப்போகும் திருமணம் என்பதைக் கல்பனா புரிந்துகொண்டாள்.

முறைப்படி, திருமணம், விருந்து எல்லாம் மிகச் சிறப்பாக  நடைபெற்றன. மணமக்களை வாழ்த்துவதற்காக ராதா அவர்கள் அருகில் சென்றாள். “தேங்க்ஸ் ஃபார்  எவ்வெரித்திங்” என்றாள் கல்பனா. “இனிமேல் இந்த மகன்றில் பறவைகள் செல்லும் வழியில் மலர்கள் இல்லை!” என்றாள் ராதா.

 


 

குறுந்தொகை - 57

 

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவர் சிறைக்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரின் பாடல்கள், குறுந்தொகையில் எட்டும்(56, 57, 62, 132, 168, 222, 273, 300), நற்றிணையில் ஒன்றும் (16) உள்ளன.

திணை: நெய்தல்.

கூற்று: காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

கூற்று விளக்கம்:  தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறார்கள். தன் மகளின் களவொழுக்கத்தை அறிந்த தாய், தலைவியைக் கடுமையான காவலில் வைத்தாள். தலைவனைக் காணமுடியாததால், தலைவி மிகவும் வருந்துகிறாள். பிரிவினால் வாடும் தலைவிக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுஆண்டுபோல் தோன்றுகிறது. இந்தப் பிரிவினால் உண்டாகும் வருத்தத்தைத் தவிர்ப்பதற்கு ஒரேவழி, தலைவனும் அவளும் ஒருங்கே இறப்பதுதான் என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

 

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன

நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்

பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு

உடனுயிர் போகுக தில்ல கடனறிந்

திருவேம் ஆகிய வுலகத்

தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.

 

அருஞ்சொற்பொருள்: இடைப்படுதல் = இடையில் வருதல்; யாண்டு = ஆண்டு (ஒருவருடம்); உறைதல் = வாழ்தல்; மகன்றில் = நீரில் வாழும் பறவை. (இந்தப் பறவை இனத்தில், ஆணும் பெண்ணும் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும்); புணர்ச்சி = சேர்க்கை; தண்டா = நீங்காத; தில்ல – விழைவுக் குறிப்பு; கடன் = கடமை; இருவேம் = இருவர்; ஒருவேம் = ஒருவர்; புன்மை = துன்பம்; உயற்கு = தப்புதற்கு.

உரை: தோழி, செய்ய வேண்டிய கடமைகளுக்காக இருவேறு உடல் உடையவர்களாக இந்த உலகத்தில் நானும் தலைவனும் இருந்தாலும் உள்ளத்தால் இணைந்து ஓருயிர் ஈருடலாகக் கருத்தொருமித்த காதலர்களாக இருந்தோம். இப்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத சூழ்நிலையில் பிரிந்து வாழ்கிறோம்.  நீரில் எப்பொழுதும் சேர்ந்தே இருக்கும் மகன்றில் பறவைகள், பூ இடையே வந்ததால் சிறிது நேரம் பிரிய நேரிடும் பொழுது, அந்தப்பிரிவு ஓராண்டுகாலம் கடந்தாற் போல அப்பறவைகளுக்குத் துன்பத்தை உண்டாக்குமாம். இந்தப் பிரிவினால் நாங்கள் அந்தப் பறவைகளைப் போல வருந்துகிறோம். இந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்கு ஒரேவழி, பிரிதலே இல்லாமல், நீங்காத காதலோடு எங்கள் இருவரின் உயிரும் ஒருங்கே போகட்டும். 

விளக்கம்: நீர்வாழ் பறவைகளுள் மகன்றிலும் ஒன்றுஇப்பறவைகளுள்ஆணும் பெண்ணும் எப்பொழுதும் பிரிவின்றி இணைந்து வாழ்வனவாகக் கருதப்படுகின்றனஎப்பொழுதும் இணைந்தே இருப்பதால்அவை நீரில் சென்றுகொண்டிருக்கும் பொழுது அவை செல்லும் வழியில் ஒரு பூ குறுக்கே வந்தாலும் அந்தக் குறுகிய காலப் பிரிவைக்கூட இப் பறவைகள் தாங்க முடியாமல் வருந்தும் என்று புலவர் கூறுகிறார்.


 

குறுந்தொகை - 229

 

பாடியவர்: மோதாசானார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

திணை: பாலை.

கூற்று: இடைச் சுரத்துக் கண்டார், தம்முள்ளே சொல்லியது.

கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பாலை நிலத்தில் உடன் போகிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் சிலர் அவர்களைக் காண்கிறார்கள். தலைவனும் தலைவியும் சிறுவர்களாக இருந்த பொழுது அவர்கள் சிறுசிறு சண்டைகள் போட்டுக் கொண்டதையும்,  இப்பொழுது, அவர்கள் இணைபிரியாத காதலர்களாக இருப்பதையும் கண்ட வழிப்போக்கர்கள், அவர்களை சேர்த்துவைத்த ஊழ்வினையை வியந்து பாராட்டுகிறார்கள்.

இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்

புன்றலை யோரி வாங்குநள் பரியவும்

காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா

தேதில் சிறுசெரு வுறுப மன்னோ

நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்

துணைமலர்ப் பிணைய லன்னவிவர்

மணமகிழ் இயற்கை காட்டி யோயே.

 

கொண்டு கூட்டு: இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,  காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏதில் சிறுசெரு உறுப, மன்னோ! மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்ன இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோய்,  பாலே, நல்லை மன்ற. அம்ம.

அருஞ்சொற்பொருள்: ஐம்பால்  - சங்க காலத்தில், பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என்ற ஐந்து வகையாக அலங்கரித்துக் கொள்வது வழக்கிலிருந்தது. அதனால், ஐம்பால் என்பது பெண்களின் கூந்தலைக் குறிக்கும் சொல் ஆகியது; ஓரி = ஆணின் தலைமுடி ; வாங்குதல் = வளைத்து இழுத்தல்; பரிதல் = ஓடுதல்; ஏது = காரணம்; ஏதில் = காரணமில்லாத; செரு = சண்டை; மன் – கழிந்தது என்ற பொருளில் வந்த இடைச் சொல்; அம்ம – அசைச்சொல்; பால் = ஊழ்வினை; பிணையல் = பின்னிய மாலை.

உரை: சிறுவயதில், இவன் இவளது கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவனது சிறிய தலைமுடியை வளைத்து இழுத்து ஓடவும், அன்புடைய செவிலித்தாயார் இடைமறித்துத் தடுக்கவும், ஓயாமல், காரணமில்லாமல் இவர்கள் சிறுசிறு சண்டை போட்டுக்கொள்வார்கள்.  இப்பொழுது, மெல்லிய இயல்புடைய மலர்களால் பின்னிய இரட்டை மாலையைப் போன்ற இவர்கள், மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கிய ஊழ்வினையே, நிச்சயமாக நீ நன்மையை உடையாய்.



[1]. இந்தச் சிறுகதை குறுந்தொகைப் பாடல்கள் 57 மற்றும் 229 ஆகியவற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தாவத் தெரிந்த குரங்கு

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்

கிருஷ்ண லீலா