காணமற்போன காஞ்சனா
”ஏ, ராமானுஜம், நீ இன்னிக்கி விக்ரமைப்
பாத்தியா?” என்று கேட்டான் அவன் நண்பன் செந்தில். “நீயும் அவனும் ஒரே பில்டிங்லேதானே
இருக்கீங்க. அவனைக் காணும்னு என்னைக் கேக்கிறியே! இன்னிக்கு அவன் வேலைக்கு வர்ரலை.
அதான் எனக்குத் தெரியும்.” என்றான் ராமானுஜம்.
”நானும் அவனும் எப்பொழுதும் ஒண்ணாதான்
வேலைக்கு வர்ரது வழக்கம். இன்னிக்கு, நான் வேலைக்குக் கிளம்புறப்ப அவனுக்கு ஃபோன் பண்ணினேன்; அவன் எடுக்கலை. நீயும்
அவனும் பக்கத்துப் பக்கத்து டெஸ்க்குங்றதுனாலே உன்னைக் கேட்டேன். சாயங்காலம் போய் அவனைப்
பாக்கிறேன்.” என்றான் செந்தில்.
ராமானுஜம், செந்தில், விக்ரம் ஆகிய மூன்று
பேரும் ஒரே கல்லுரியில் படிப்பை முடித்துவிட்டு இப்பொழுது பெங்களூரில் ஒரு கணினி நிறுவனத்தில்
வேலை பார்க்கிறார்கள். செந்திலும் விக்ரமும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும்
ஒரே கட்டிடத்தில் தனித்தனி அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறார்கள். சென்ற வருடம் கல்லூரியில்
படிக்கும்பொழுது, செந்தில் வீட்டுக்கு அருகே இருந்த காஞ்சனா என்ற ஒரு பெண்ணை விக்ரம்
காதலித்தான். விக்ரம் காஞ்சனா காதலைப் பற்றி, செந்திலுக்கும் அவன் தங்கை மீனாவுக்கும்
தெரியும். செந்தில் யாரோ ஒருபெண்ணைக் காதலிக்கிறான் என்று ராமனுஜத்திற்குத் தெரியும்.
ஆனால், அவள் யார் என்று அவனுக்குத் தெரியாது.
அன்று மாலை, வேலை முடிந்த பிறகு விக்ரம்
வீட்டிற்குச் சென்று, ராமானுஜம் அவனை பார்த்தான். விக்ரமைப் பார்த்து, “ஏய், இன்னிக்கி
நீ ஏன் வேலைக்கு வரல்லை? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டான். தன் காதலியைப் பார்க்க
முடியாமல் இருப்பதால் வருத்தமாக இருப்பதாக விக்ரம் கூறினான். ”இதுக்கெல்லாம் யாராவது
கவலைப் படுவாங்களா? எல்லாம் பகவான் இஷ்டப்படி நடக்கும்.” என்றான் ராமனுஜம். தன்னுடைய
நிலைமையை ராமனுஜம் புரிந்துகொள்ளவில்லையே என்பதை நினைத்துக் கோபமடைந்த விக்ரம், “ஏய்
ராமனுஜம், வேதம், பகவத் கீதைன்னு என்னன்னமோ சொல்றியே, என்னை மாதிரி இந்த நிலையில் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரயோஜனப்படக்கூடிய ஐடியா அதிலே சொல்லியிருக்காங்களா?”
என்று ராமானுஜத்தைக் கேட்டான். “இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையே இல்லை. நீதான் ரொம்ப
அலட்டிக்கிற.” என்றான் ராமானுஜம். ”உனக்குப் பிரேகடிகலா எதுவும் தெரியாது. உன்கிட்ட
எதையும் சொல்லி எந்தப் பிரயோஜனமும் இல்லை. நீ படிச்ச வேதத்திலும் பகவத் கீதையிலும்
என் பிரச்சனைக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லு. அதைவிட்டுவிட்டு என்னைக் குறை சொல்லாதே.”
என்று விக்ரம் ராமானுஜத்திடம் கோபமாகக் கூறினான்.
அன்று மாலை விக்ரம் வீட்டிற்குச் சென்று
செந்தில் அவனைப் பார்த்தான். விக்ரம், லுங்கி, பனியனோடு படுத்திருந்தான். அவனைப் பார்த்தால்,
அன்று முழுதும் அவன் குளிக்காமல், சவரம் செய்துகொள்ளாமல், தலை வாராமல் காட்சி அளித்தான்.
செந்தில், “ஏய், உனக்கு என்னடா ஆச்சு. உடம்பு சரியில்லையா? டாக்டரைப் பார்க்கிறியா?”
என்று கவலையோடு கேட்டான். “ஒண்ணுமில்லை. உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு.” என்றான்.
“அப்புறம், ஏண்டா இப்படி இருக்கே? சென்னையிலே அப்பா, அம்மா அல்லது யாருக்காவது உடம்பு
சரியில்லியா? சொல்லுடா.” என்று மிகுந்த வருத்தத்தோடு கேட்டான் செந்தில். “காஞ்சனாவை
பாக்காம மனசே சரியில்லை. அவ்வளவுதான்.” என்றான். “சே, இதுக்குதான் இந்த கோலமா? எழுந்திருடா.
குளிச்சுட்டு, டிரஸ் பண்ணிகிட்டு வா. நாம ஒரு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு வரலாம்.”
என்றான் செந்தில். “ஏய், என்னோட நிலைமையில நீ இருந்தாதான், என் கஷ்டம் உனக்குத் தெரியும்.”
என்றான் விக்ரம். “சரி, எனக்குப் புரியிலே. அப்படி உன் நிலைமை என்னான்னு எனக்குப் புரியிற
மாதிரி சொல்லேன்.” என்றான் செந்தில்.
செந்தில் ஒரு பெருமூச்சு விட்டுப் படுக்கையில்
இருந்து எழுந்து தன் நிலைமையைச் செந்திலுக்குப் புரியும் விதத்தில் சொல்ல ஆரம்பித்தான்.
“நான் சொல்றேன். பொறுமையாக் கேளு. எனக்கு நாலு வயசிருக்கிறப்ப, ஒருநாள் கடைத்தெருவுக்கு
எங்க அம்மாவோட போனேன். அங்கே ஒரு ஐஸ் கிரீம் கடை இருந்தது. ஐஸ் கிரீம் வாங்கிகொடுன்னு
அம்மாவைக் கேட்டேன். அம்மா, முடியாதுன்னு சொன்னாங்க. நான் ரொம்ப அடம் பிடிச்சு அழுது
ரகளை பண்ணினேன், எங்க அம்மா, “சரி, சரி, இப்படி நடு ரோட்டிலே கலட்டா பண்ணி மானத்தை
வாங்காதே. ஐஸ் கிரீம் வாங்கித் தறேன். ஆனா, வீட்டுக்குப் போனப்புரம்தான் அதை நீ சாப்பிடணும்.தெருவெல்லாம்
சாப்பிட்டுக்கிட்டுப் போகக்கூடாது.” என்று கண்டிப்பா அம்மா சொன்னாங்க, ஒரு கையாலே அம்மா
கையைப் புடிச்சுக்கிட்டு, இன்னோரு கையில ஐஸ் கிரீமை வைச்சுக்கிட்டு நடந்தேன். வழியிலே,
அம்மாவுக்குத் தெரிஞ்சவங்க நிறைய பேரைப் பார்த்தோம். ஓவொருத்தர்கிட்டேயும் அம்ம ரொம்ப
நேரம் பேசினாங்க. அப்ப சித்திரை மாசம்னு நினைக்கிறேன். அந்த வெயில்லே, என் ஐஸ் கிரீம்
சுத்தமா கரைஞ்சு போச்சு. எனக்குப் பிடித்த
ஐஸ் கிரீம் எனக்குச் சாப்பிடக் கிடைக்காமல் வீணாப் போகும்போது அதை என்னாலே காப்பாத்த
முடியலேயே என்று நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். இப்ப என் நிலைமை அப்படித்தான்
இருக்கு.” என்று விக்ரம் வருத்ததோடு கூறினான்.
“சரி, நீ சொல்றது எனக்குப் புரியுது.
நீ எப்ப காஞ்சனாகிட்ட கடைசியா பேசினே?” என்று செந்தில் கேட்டான்.
“நான் ஒருநாள் அவளை செல் ஃபோன்ல கூப்பிட்டேன்.
அவளுக்குப் பதிலா, அவளோட அப்பா எடுத்தார். “யாருடா நீ? காஞ்சனாவை எதுக்குக் கூப்பிடுறே?”ன்னு கேட்டுக்
கத்தினார். அதுக்கப்புறம் அவளைப் பலமுறை கூப்பிட்டேன். அவ ஃபோனையே எடுக்கலே. அதான்
ஏன்னு எனக்குப் புரியலை.” என்று விக்ரம் கூறினான்.
“சரிடா, நீ ஒண்ணும் கவலைப்படாதே. நான்
என் தங்கை மீனாவைப் போய் காஞ்சனாவைப் பார்த்துவிட்டு வரச் சொல்றேன். அப்புறம் என்ன
பண்றதுன்னு யோசனை பண்ணலாம். எதுவானலும், நான் உனக்குக் கண்டிப்பா உதவி செய்றேன். நீ
கவலைப் படாதே.” என்று ஆறுதலாகக் கூறினான்.
செந்தில் கூறியதைப் போல், மீனா காஞ்சனாவைப்
பார்க்கப் போனாள். காஞ்சனா மிகுந்த கவலையோடு, காணப்பட்டாள். மீனா, “ விக்ரம் ஃபோன்
பண்ணா, நீ எடுக்க மாட்டேங்கிறேன்னு விக்ரம் சொன்னதாக செந்தில் சொன்னான். உனக்கும் விக்ரமுக்கும் என்ன
பிரச்னை?” என்று காஞ்சனாவைக் கேட்டாள்.
“ஒருநாள், விக்ரம் கூப்பிட்டான். அப்ப
என் ஃபோனும் எங்க அப்பா ஃபோனும் பக்கத்துப் பக்கதுலே இருந்தது. தன்னோட ஃபோன்னு நினைச்சுகிட்டு
எங்க அப்பா என் ஃபோனை எடுத்தார். என் கிட்ட பேசறதா நினைச்சுகிட்டு, விக்ரம்”ஹலோ காஞ்சனான்னு”
சொல்லியிருக்கான். எங்க அப்பா, “யாருடா இது, காஞ்சனாவைக் கூப்பிடுறதுன்னு ஃபோன்ல கத்தினவுடன்
விக்ரம் ஃபோனைக் கட் பண்ணிட்டான். அதுக்கு
அப்புறம், யாருக்கும் தெரியாம, பாத் ரூம்லே இருந்து விக்ரம்கிட்ட அப்பப்ப ஃபோன்லே பேசினேன்.
ஒருநாள் என் கையிலே இருந்து என் ஃபோன் தண்ணியிலே விழுந்து கெட்டுப் போச்சு. அதுக்கு
அப்புறம் இன்னும் புது ஃபோன் வாங்கலை.” என்றாள்.
“அது மட்டுமல்ல. எங்க வீட்டுல இப்ப எனக்கு
மும்மரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டங்க. இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை யாராவது
என்னைப் பெண்பார்க்க வர்ராங்க. நான் ஏதாவது காரணம் காட்டி எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லிகிட்டு
இருக்கேன். இப்படி எத்தனை நாளுக்குச் சமாளிக்க முடியுமுன்னு தெரியலை.” என்று சொல்லும்பொழுது,
காஞ்சனாவின் கண்களிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
காஞ்சனா மீனாவிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது,
அந்த அறையில் தொலைக்காட்சியில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியில், ஒரு சிறுகுழந்தை
மிட்டாய் இருந்த ஒரு பாட்டிலைத் திறக்க முடியாமல் தவித்துக்கொண்டு, அந்த பாட்டிலைத்
தொட்டு நக்கிக்கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, ”இப்ப என் நிலைமையும்
அப்படித்தான் இருக்கு. விக்ரமை அடைய முடியாவிட்டலும், அவனோடு பழகிய
நாட்களை நினைச்சு நான் சந்தோஷப் பட்டுக்கொண்டிருக்கேன்.” என்றாள் காஞ்சனா.
“சரி. நீ சொன்னதை நான் அண்ணன்கிட்ட சொல்றேன்.
நானும் அண்ணனும், உன்னையும் விக்ரமையும் சீக்கிரமா சேர்த்துவைக்கிறதுக்கு என்ன செய்ய
முடியுமோ அதைக் கண்டிப்பா செய்றோம். நீ கவலைப்படாதே.” என்று கூறி மீனா காஞ்சனாவுக்கு
ஆறுதல் அளித்தாள்.
காஞ்சனா சொன்ன செய்தி அனைத்தையும் மீனா
செந்திலிடம் சொன்னாள். விக்ரமையும் காஞ்சனாவையும் சேர்த்துவைப்பதற்குச் செந்தில் ஒரு
திட்டம் தீட்டினான். அவன் திட்டப்படி, ஒருநாள் அவனும் விக்ரமும் சென்னைக்கு வந்தார்கள்.
”காஞ்சனா, விக்ரம் எங்க வீட்டுக்கு வந்திருக்கான். இப்ப நீ எங்க வீட்டுக்கு வந்தா அவனைப்
பார்க்கலாம்.” என்று கூறி மீனா, காஞ்சனாவை தன் வீட்டிற்கு அழைத்தாள். மீனா வீட்டுக்குச்
சென்று வருவதாகத் தன் அம்மாவிடம் கூறிவிட்டுக் காஞ்சனா வீட்டைவிட்டு வெளியேறினாள்.
மீனா வீட்டுக்குப் போகும் வழியில் செந்திலும் விக்ரமும் இருப்பதைக் காஞ்சனா பார்த்தாள்.
தன்னோடு பெங்களூருக்கு வருமாறு விக்ரம் காஞ்சனாவிடம் சொன்னான். தன் அப்பாவையும் அம்மாவையும்
விட்டுவிட்டு, அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் விக்ரமோடு செல்வதற்குக் காஞ்சனா முதலில்
தயங்கினாள். சற்று யோசித்த பிறகு சம்மதித்தாள். செந்தில் விக்ரமோடு பெங்களூருக்குச்
சென்றாள் காஞ்சனா.
பெங்களூருக்குப் போனவுடன், விக்ரமுக்குக்கும்
காஞ்சனாவுக்கும் நடைபெற்ற ரிஜிஸ்டர்டு திருமணத்தைச் செந்திலும், ராமானுஜமும் சாட்சியாக
இருந்து நடத்திவைத்தார்கள்.
மீனா வீட்டிற்குச் சென்று வருவதாகச்
சொல்லிவிட்டுப் போன காஞ்சனா, வீட்டுக்குத் திரும்பி வராததால் காஞ்சனாவின் பெற்றோர்கள்
அதிர்ச்சி அடைந்தார்கள். மீனா வீட்டுக்கு போய் அங்கு காஞ்சனா வந்தாளா என்று கேட்டதற்கு,
மீனாவின் குடும்பத்தினர் அங்கு காஞ்சனா வரவில்லை என்று சொன்னார்கள். அன்றிரவே, தன்
மகள் காஞ்சனாவைக் காணவில்லை என்று காஞ்சனாவின் தந்தை ராமசாமி போலிஸில் புகார் செய்தார்.
காஞ்சனாவின் அம்மா காமாட்சி காஞ்சனாவின்
அறைக்குச் சென்று அங்குள்ள அலமாரி, பெட்டி ஆகியவற்றை எல்லாம் தேடிப் பார்த்தாள். அதில் விக்ரமின் ஃபோட்டோ ஒன்று இருந்தது. காஞ்சனாவின் பிறந்த நாளுக்கு விக்ரம் கொடுத்த கடிதம்
ஒன்றில் ”என் உயிரினும் இனிய கண்மணி காஞ்சனாவுக்கு” என்று எழுதி அவனுடைய பெயரையும்
குறிப்பிட்டுக் கையழுத்தும் போட்டிருந்தான். அதைப் போலீஸில் கொடுத்து, அவனைத் தேடுமாறு
அவர்களின் உதவியை ராமசாமி நாடினார்.
பல இடங்களுக்கும் சென்று பலரையும் சந்தித்து,
விசாரணை செய்து, விக்ரமும் காஞ்சனாவும் திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் இருப்பதாகப்
போலீஸார் கண்டுபிடித்தார்கள். அவர்களின் இருப்பிடத்தை ராமசாமியிடம் தெரிவித்தார்கள்.
“நாங்க அவுங்களை ஒண்ணும் பண்ண முடியாது. நீங்க போய் அவுங்களைப் பாருங்க.” என்று சொல்லி
கேஸை முடித்துவைத்தார்கள்.
ராமசாமிக்கு விக்ரம்மீது அளவற்ற கோபம்.
அவன் தன் பெண்ணைக் கடத்திக் கொண்டுபோய் பெங்களூரில் வைத்திருக்கிறான் என்று உறுதியாக
அவர் நம்பினார். சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞரிடம் சென்று, விக்ரம் என்பவன்
தன் பெண்ணைக் கடத்திக்கொண்டு போய்விட்டான் என்று வழக்குத் தொடரச் சொன்னார் ராமசாமி.
“உங்கப் பெண்ணை விக்ரம் கடத்திக்கொண்டு போனான்
என்று நீங்கள் சொல்வதற்கு சாட்சி எதுவும் இல்லை. விக்ரம் உங்கள் பெண்ணைக் கடத்திக்கொண்டு
சென்றான் என்று நீங்கள் சொல்வதைப் போல், உங்க பெண் விக்ரமைக் கடத்திக்கொண்டு போய்விட்டாள்
என்று விக்ரமின் பெற்றோர் கூறினால் என்ன செய்வீர்கள். மேலும், விக்ரம் காஞ்சனா இருவரும்
சிறுவர்கள் அல்ல. அவர்கள் இருவரும் வயது வந்தவர்கள். அவர்கள் விருப்பப்படி அவர்கள்
திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தாலும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தாலும் அது சட்டப்படிக்
குற்றமில்லை.” என்று வழக்கறிஞர் சொன்னார். என்ன செய்வதென்று தெரியாமல் ராமசாமி வீடு
திரும்பினார்.
காஞ்சனாவைக் காணாததால், அவள் அம்மா காமாட்சி,
மிகுந்த வருத்தத்தோடு, சரியாக உண்ணாமல் உறங்காமல் இருந்து, உடல் மெலிந்து காணப்பட்டாள்.
அவள் கணவர் ராமசாமி அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவளைப் பரிசோதனை செய்த
பிறகு, அவள் தன் மகளைக் காணததால் மனவழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவளுக்கு
ஒரு மனநல மருத்துவரின் உதவி தேவை என்றும் மருத்துவர் அறிவுரை கூறினார்.
மருத்துவரின் அறிவுரைக்கேற்ப, ராமசாமி
காமாட்சியை மனநல மருத்துவர் டாக்டர் கமலாவிடம் அழைத்துச் சென்றார். டாக்டர் கமலா ஒரு
புகழ்பெற்ற மனநல மருத்துவர். குறிப்பாக, பெண்களின் மனதைப் புரிந்துகொண்டு நல்ல அறிவுரைகள்
அளிப்பதில் அவர் மிகுந்த அனுபவமும் ஆற்றலும் உடையவர். அவர் காமாட்சியின் மனநிலைமையைப் புரிந்துகொள்வதற்கேற்ற கேள்விகளைக்
கேட்டு, அவர் அளித்த விடைகளைப் பொறுமையாகக்
கேட்டார். பின்னர், “அம்மா, முடிவாக நான் உங்களிடம் இன்னும் மூன்று கேள்விகளைக் கேட்கிறேன்.
அவை மிகவும் எளிமையான கேள்விகள்தான். நன்றாக யோசனை செய்து பதில் கூறுங்கள்.”என்றார்.
முதல் கேள்வி: “மலையிலே விளைந்த சந்தனத்தால்
மலைக்கு ஏதாவது பயன் உண்டா?”
காமாட்சி: ”இல்லை. அதை அரைத்துப் பூசிக்
கொள்பவர்களுக்குத்தான் பயனுண்டு”
இரண்டாவது கேள்வி: “கடலில் பிறந்த முத்தால்
கடலுக்குப் பயனுண்டா?”
காமாட்சி: “அதை அணிந்துகொள்பவர்களுக்குத்தான்
பயனுண்டு.”
மூன்றாவது கேள்வி: “யாழில் பிறந்த இசையால்
யாழுக்குப் பயனுண்டா?”
காமாட்சி: “இல்லை. அதைக் கேட்பவர்களுக்குத்தான்
பயனுண்டு.”
“அம்மா, அதைப்போல், எதுவும் அதுஅது இருக்க
வேண்டிய இடத்தில் இருந்தால்தான் அதனால் பயனுண்டு. அதைப்போல், உங்கள் மகள் சேரவேண்டிய
இடத்தில் சேர்ந்துவிட்டாள். அவள் தன் கணவரோடு இருப்பதுதான் சிறப்பு. அவள் தன் கணவனோடு
மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்பதை நினைத்துப் பெருமைப்படுங்கள்; மகிழ்ச்சியாக இருங்கள்.”
என்று டாக்டர் கமலா அறிவுரை கூறினார். டாக்டர் கூறியதைக் கேட்டு காஞ்சனாவின் அம்மா
மன நிம்மதி அடைந்தாள்.
அவள் வீட்டைவிட்டு அவர்களிடம் சொல்லாமலே
விக்ரமோடு வந்ததால், அவள் அம்மாவும் அப்பாவும் வருத்தமாக இருப்பதாக மீனாவிடம் இருந்து
காஞ்சனா தெரிந்துகொண்டாள். காஞ்சனாவுக்கு, அம்மா அப்பாவிடம் உடனே பேச வேண்டும் என்று
தோன்றியது. தொலைபேசி வழியாகக் காஞ்சனா தன் பெற்றோர்களிடம் பேசினாள்.
”காணமற்போன காஞ்சனா கிடைத்துவிட்டாள்!”
என்று ராமசாமியும் காமாட்சியும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.
156. தலைவன் கூற்று
பாடியவர்: பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார். இவர் இயற்றியதாக அகநானூற்றில்
உள்ள ஒருபாடலும் (373) குறுந்தொகையில் உள்ள இந்த ஒருபாடலும் மட்டுமே சங்க இலக்கியத்தில்
காணப்படுகின்றன.
திணை: குறிஞ்சி.
கூற்று: கழறிய (இடித்துரைத்த) பாங்கற்குக் (தோழனுக்குத்) கிழவன் (தலைவன்)
அழிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவிமீது
மிகுந்த அன்போடு, எப்பொழுதும் அவள் நினைவாகவே இருக்கிறான். தலைவனின் நிலையைக் கண்ட
தோழன் “எப்பொழுதும் அவளையே நினைத்துக்கொண்டிருக்கிறாயே!” என்று தலைவனைக் கண்டிக்கிறான்.
அதற்குத் தலைவன் ”நீ கற்ற வேதங்களில், பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்கும் மருந்து இருந்தால்
எனக்குக் கூறுக. இல்லையேல், நீ என்னைக் கடிந்துரைப்பதில் என்ன பயன்?” என்று கேட்கிறான்.
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.
கொண்டு கூட்டு: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! செம்பூ முருக்கின் நல்நார்
களைந்து, தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும்
உண்டோ? இது மயலோ?
அருஞ்சொற்பொருள்: செம்பூ =
செந்நிறமான பூ; முருக்கு = புரச மரம்; நார் = பட்டை; கமண்டலம் = பிடியுள்ள செம்பு;
படிவம் = விரதம்; படிவ உண்டி = விரத உணவு; கற்பு = கல்வி, நீதிநெறி; எழுதாக் கற்பு
= வேதம்; மயல் = மயக்கம்.
உரை: பார்ப்பன மகனே! பார்ப்பன
மகனே! சிவந்த பூவையுடைய புரச மரத்தினது, நல்ல பட்டையை நீக்கிவிட்டு, அதன் தண்டோடு ஏந்திய,
தாழ்கின்ற கமண்டலத்தையும் விரத உணவையுமுடைய, பார்ப்பன மகனே! வேதத்தையறிந்த உன்னுடைய
சொற்களுள், பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய மருந்தும்
உளதோ? அது இல்லாவிட்டல், நீ என்னைக் கடிந்துரைப்பது உன் அறிவின் மயக்கமோ!
சிறப்புக் குறிப்பு: கற்பு என்ற சொல்லுக்குக் கல்வி அல்லது நீதிநெறி என்று பொருள் கொள்ளலாம்.
பழங்காலத்தில், வேதம் எழுதப்படாமல் வாய்வழியாக ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டதால்,
அது ”எழுதாக் கற்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
58. குறிஞ்சி
- தலைவன் கூற்று
பாடியவர்: வெள்ளிவீதியார். இவர் குறுந்தொகையில்
எட்டுப் பாடல்களும் (27, 44, 58, 130, 148, 149, 386), அகநானூற்றில் இரண்டு பாடல்களும்
( 45, 362), நற்றிணையில் மூன்று பாடல்களும் ( 70, 335, 348) பாடல்களும் இயற்றியுள்ளார்.
தன் சொந்த வாழ்க்கையில், வெள்ளிவீதியார் தன் தலைவனைவிட்டுப் பிரிந்திருந்தபொழுது தன்
நிலையைக் குறித்து வருந்தி இப்பாடலை இயற்றியதாகக் கூறப்படுகிறது. இப்பாடலைப் பாடியவர்
கொல்லனழிசி என்று கூறுவாரும் உளர்.
பாடலின் பின்னணி: தலைவிமீது
தலைவன் தீராத காதலுடன், தான் செய்யவேண்டிய செயல்களையும் தன் கடமைகளையும் மறந்து எப்பொழுதும்
தலைவி நினைவாகவே இருக்கிறான். தலைவனின் தோழன், “நீ இந்தக் காம நோயைப் பொறுத்துக்கொண்டு
உன் கடமைகளைச் செய்வதுதான் சிறந்தது.” என்று தலைவனைக் கடிந்துரைக்கிறான். அதற்கு மறுமொழியாகத்
தன் நிலைமையைத் தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
இடிக்குங் கேளிர்
நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ
நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும்
வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன்
கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல்
போலப்
பரந்தன் றிந்நோய்
நோன்றுகொளற் கரிதே.
அருஞ்சொற்பொருள்: இடித்தல்
= கண்டித்துரைத்தல்; கேளிர் = நண்பர்; குறை = குற்றம்; நிறுக்கல் = நிறுத்தல்; மன்
= மிகுதி; தில்ல = தில் – அசைச்சொல், விழைவுக் குறிப்பு; அறை = பாறை; மருங்கு = இடம்;
உணங்கல் = உருகுதல்; பரந்தன்று = பரவியது;
நோன்றல் = பொறுத்தல்.
உரை: என்னைக் கண்டித்துரைக்கும்
நண்ப! என்னுடைய குறையாக நீ கருதும் என் காமநோயை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தால்
மிகவும் நன்றுதான். அதுவே என் விருப்பமும்
ஆகும். கதிரவனின் வெயில் அடிக்கும் நேரத்தில் வெம்மையான பாறையிடத்தே, கையில்லாத ஊமை
ஒருவன் கண்ணால் பாதுகாக்க முயலும், உருகிய
வெண்ணெயைப் போல் இந்தக் காமநோய் என்னிடம்
பரவியுள்ளது. அது பொறுத்துக்கொள்வதற்கு அரிதாக இருக்கின்றது.
விளக்கம்: வெப்பமான பாறையில்
வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் கதிரவனின் வெப்பத்தால் உருகாமல் இருப்பதற்குப் பாதுகாவலாக ஒருவன் இருக்கிறான். அவன்
இருகைகளும் இல்லாத ஊமன். அவனுக்குக் கைகளிருந்தால் அந்த வெண்ணையை எடுத்து வேறிடத்தில்
வைத்து அவனால் பாதுகாக்க முடியும். அவனால் பேச முடிந்தால், பிறரை உதவிக்கு அழைக்கலாம்.
கைகளும் பேசும் திறமையும் இல்லாததால், பாதுகாவலாக இருப்பவன் உருகும் வெண்ணெயைத் தன்
கண்களால் பார்த்துக்கொண்டு செயலற்ற நிலையில் இருக்கிறான். வெண்ணெய் கதிரவனின் வெப்பத்தால்
உருகிப் பரவுவதைப் போலத் தலைவனின் காமநோய்
பரவுகிறது.. செயலற்ற நிலையில் வெண்ணையைப் பாதுகாக்க முடியாத கையில்லாத ஊமன் போலத்,
தலைவன் தன் காமநோயை அடக்கிப் பாதுகாப்பதற்குரிய ஆற்றலும் பிறரிடம் அதை வெளிப்படுத்தக்கூடிய
நிலையிலும் இல்லாததால் அவனால் அவனுடைய காமநோயைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
60. குறிஞ்சி - தலைவி கூற்று
பாடியவர்: பரணர். சங்க காலப் புலவர்களிலேயே மிகவும் சிறந்த புலவர்களில்
ஒருவர் பரணர். பரணரால் பாடப்படுவது பாராட்டுதற்குரியது
என்ற கருத்தில் “பரணன் பாடினன்’ என்று ஒளவையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு
99). பரணர், புறநானூற்றில் 13 செய்யுட்களும்,
அகநானூற்றில் 34 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும், குறுந்தொகையில் 16 செய்யுட்களும்,
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார்.
இவரால் பாடப்பட்டோர் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்,
சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி, வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் கடல்பிறக்கோட்டிய
வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர். இவருடைய பாடல்கள்
வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை. இவர் கபிலரின்
நண்பர். மருதத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில்
வல்லவர். இவர் பதிற்றுப்பத்தில் கடல் பிறக்கோட்டிய வேல்குழு குட்டுவனைப் பாடியதற்கு,
உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பாடலின் பின்னணி: தலைவனுடைய
பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்திய தலைவி, “தலைவர் என்னிடம் அருளும் அன்பும்
இல்லாதவராக இருந்தாலும், அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும். அதுவே எனக்கு மிகுந்த இன்பத்தை அளிக்கும்.” என்று
தன் தோழியிடம் கூறுகிறாள்.
குறுந்தாட்
கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன்
கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை
கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி
யாங்குக் காதலர்
நல்கார் நயவா
ராயினும்
பல்காற் காண்டலும்
உள்ளத்துக் கினிதே.
அருஞ்சொற்பொருள்: தாள் = அடிப்பக்கம்;
கூதளை = கூதளஞ்செடி; வரை = மலை; பெருந்தேன் – தேனடையைக் குறிக்கிறது; இருக்கை = அமர்ந்திருக்கும்;
கோலுதல் = குவித்தல்; சுட்டுபு = சுட்டி; நல்குதல் = அருள் கூர்தல் ; நயத்தல் = விரும்புதல்;
கால் = காலம்.
உரை: குறுகிய அடியையுடைய
கூதளஞ்செடி அசைந்து ஆடும் உயர்ந்த மலையிலுள்ள,
பெரிய தேனடையைக் கண்ட முடவன், காலில்லாததால் உட்கார்ந்துகொண்டே, தன் உள்ளங்கையை
ஒரு சிறிய குடை (பாத்திரம்) போல் குவித்து, அம்மலையின் கீழே இருந்தபடியே, அந்தத் தேனடையைப்
பலமுறை சுட்டிக்காட்டித் தன் கையை நக்கி இன்புற்றதைப்
போல, தலைவர் என்னிடம் அருளும் அன்பும் இல்லாதவராக இருந்தாலும் அவரைப் பலமுறை பார்ப்பதே
என் உள்ளத்திற்கு இனிமையானதாக இருக்கிறது.
விளக்கம்: ”நெடுவரை” என்றது காலுடையவர்களாலும் ஏறுதற்கு அரிய
உயரமான மலை என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. குடை என்றது பனையோலையால் செய்யப்பட்டு நீர்
எடுப்பதற்கும் குடிப்பதற்கும் உணவுப்பொருள்களை வைப்பதற்கும் உரிய ஒருகருவி. ”உட்கைச் சிறுகுடை” என்றது முடவன் தன் உள்ளங்கையைக்
குவித்து வைத்திருப்பது ஒருசிறிய குடைபோல் உள்ளது என்பதைக் குறிக்கிறது. ”முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்பட்டாற்போல” என்னும் பழமொழி இங்கே நினைவு கூரத்தக்கது.
கலித்தொகை
– பாலைக்கலி - பாடல் எண் 8
‘ ‘ ‘ ‘ ‘ ‘ ‘
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே
பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையும்கால்
நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு
வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீர் உளே
பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேரும்கால்
நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர்
இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே
பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழும்கால்,
நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
என ஆங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.
(கலித்தொகை, பாலைக்கலி, 12-24)
மணப்பொருள்
பலவும் கூட்டிய நறும் சந்தனம், தம் உடலிலே பூசிக் கொள்பவர்க்கல்லாது, மலையிலே பிறந்தாலும்,
அம்மலைக்கு என்ன நன்மையைச் செய்யும்? நினைத்துப் பார்த்தால், உங்கள் மகளும், உங்களுக்கு
அத்தகைய சந்தனம் போன்றவளே அல்லவோ!
நீர்
நிரம்பிய வெண்முத்துகள், கோத்து அணிபவர்க்குத் தானே பயனைத் தரும். அதுவல்லாமல், நீரினுள்ளே
பிறந்தாலும், அந் நீருக்கு அவை என்ன பயனைச் செய்யும்? நன்கு நினைத்தால், உங்கள் மகளும்
உங்களுக்கு அந்த முத்துகள் போன்றவளே அல்லவோ!
ஏழு
நரம்புகளிலே தவழ்ந்துவரும் இனிய இசையானது யாழிலேதான் பிறக்கும். ஆயினும், இசைத்து அநுபவிப்பவர்க்கு
இன்பம் தருமே அல்லாது, பிறந்த யாழுக்கு அதனால் என்ன பயன் ஏற்படும்? ஆராய்ந்தால், உங்கள்
மகளும் உங்களுக்கு அத்தகையவள் அல்லவோ?
ஆகவே,
அவள் காதலனுடன் போனாள் எனக் கருதி நீங்கள் வருந்த வேண்டாம்; அவளைத் தேடிச் செல்லவும்
வேண்டாம். உங்கள் மகள் தலைசிறந்த கற்புடையவள்; அவளுக்கு எந்தத் துன்பமும் செய்ய வேண்டாம்.
அவள் தன்னுடைய சிறந்த காதலனுடன் கூடிச் சென்றுவிட்டாள். அவளுடைய முடிவு சற்றும் அறநெறி
தவறாத ஒழுக்கம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Comments
Post a Comment