அடுத்த பிறவி

 அடுத்த பிறவியில் ஆணாகத்தான் பிறக்க வேண்டும்

ராமைய்யா பிள்ளை என்பவர் திருவாருக்கு அருகே  உள்ள புலிவலம் கிராமத்தில் இருந்த ஒரு பண்ணையார்.  அவரை ராமைய்யா பிள்ளை என்று குறிப்பிடாமல் பண்ணையார்  என்றே பலரும் குறிப்பிடுவது வழக்கம். அவருக்கு சுமார் முப்பது வயது இருக்கும். அவர் நல்ல உயரமும் அதற்கேற்ற உருவமும் உடையவர்; முகத்தில் ஒரு பெரிய மீசை. பார்ப்பதற்குப் பழங்காலத்துத் தமிழ் சினிமாவில் வரும் வில்லன் பி. எஸ். வீரப்பா போல இருப்பார்; ஆனால் முரட்டுக் குணமுடையவர் அல்ல; அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவார்; அவ்வப்பொழுது யாருக்கும் தெரியாமல் மது அருந்தும் வழக்கம் உண்டு; புதிதாக வரும் சினிமாக்களை முதல் ஷோவிலேயே பார்க்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்; போஜனப் பிரியர்.

பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை. அவருடைய தந்தையாருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அவர் மீண்டும் ஒரு திருமணம் செய்துகொண்டார். ராமைய்யா பிள்ளையின் பெரியம்மாவும் அவருடைய அம்மாவும் இறந்து சில வருடங்களாயின. தந்தையார் நான்கு ஆண்டுகளுக்குமுன் இறந்தார். தந்தையார் இறந்தபின், அவருடைய பல ஏக்கர் நிலங்களுக்கும் மற்ற சொத்துகளுக்கும் ராமைய்யா பிள்ளை சொந்தக்காரரானார். சட்டப்படி அந்த சொத்துகள் எல்லாம் ராமைய்யா பிள்ளைக்குத்தான் சொந்தமானதாக இருந்தாலும், அவருடைய பங்காளிகள் அந்த சொத்துகளுக்கு உரிமை கொண்டாடி, திருவாரூர் கோர்ட்டில் சிவில் வழக்குத் தொடர்ந்தார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த வழக்குக்காக அடிக்கடி ராமைய்யா பிள்ளை திருவாரூருக்குப் போக வேண்டியதாக இருக்கிறது.

அவர் தினமும் காலை எழுந்தவுடன் வயல் பக்கம் போய்ப் பார்த்துவிட்டு, அங்கு வேலை செய்பவர்களிடம் பேசிவிட்டு வருவார். வீட்டுக்கு வந்தவுடன் காலை உணவு. அடுத்து ரேடியோவில் சினிமாப் பாடல்களை கேட்பதிலும், சில பத்திரிகைகளைப் படிப்பதிலும் காலத்தைப் போக்குவார். மதிய உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரம் தூக்கம். பிறகு அவருடைய நண்பர்களோடு கூடி சீட்டாடுவார். மாலைநேரம் டிபன்; சாயந்திரம் திருவாரூருக்குப் போய் சினிமா பார்க்காத நாட்களில்,வீட்டுக்கு வருபவர்களிடம் வெட்டிப்பேச்சு; பின்னர் இரவு உணவு, மீண்டும் ரேடியோ கேட்பதிலும், பத்திரிகை படிப்பதில் நேரத்தைச் செலவழிப்பார். அவ்வப்போழுது தன் மனைவியிடம் பேசுவார். இரவில் மனைவிடம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவருடைய வாழ்க்கையின் முதன்மையான குறிக்கோள்.

அவருக்கு முற்றிலும் மாறாக, அவர் மனைவி ரத்தனம் எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இருப்பாள். திருமணம் ஆனவுடன் அவள் தன் கணவர் வீட்டுக்கு வந்த பொழுது, சமையலுக்கு ஒரு பெண்மணி இருந்தாள். ஒருநாள் தன் கணவருக்குத் தன்கையால் தானே உணவு தயாரித்துப் பரிமாறினாள் ரத்தனம். சாப்பாடு மிகவும் ருசியாக இருந்ததை ரசித்துச் சாப்பிட்ட ராமைய்யா பிள்ளை,” ரத்தனம், உன் சமையால் பிரமாதம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இனிமே நீயே சமை.” என்று கூறினார். அவ்வாறு கூறியது மட்டுமல்லாமல், ஏற்கனவே சமையல் செய்துகொண்டிருந்த பெண்மணியை வேலையைவிட்டு நீக்கிவிட்டார். தான் சமைத்த சாப்பாட்டைத் தன் கணவர் விரும்பிச் சாப்பிட்டதைக் கண்ட ரத்தனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அவருக்கு சமைத்துச் சாப்பாடு போடுவது எவ்வளவு கஷ்டமான  வேலை என்பதைத் தெரியாமலேயே, அதைத் தன்னுடய கடமை என்று தவறாக நினைத்து அந்தப் பணியை ஏற்றுக்கொண்டாள். ராமைய்யா பிள்ளைக்கு காலையில் பலகாரம், மத்தியானம் சாப்பாடு, சாயந்திரம் டிபன், இரவு சாப்பாடு எல்லாம் அந்தந்த வேளைக்கு அவ்வப்பொழுது சூடாகக் கிடைக்க வேண்டும்.ஒருவேளை சமைத்த உணவை அடுத்த வேளை  சாப்பிடமாட்டார்.

திருமணம் ஆகிய ஒரு வருடத்தில் ரத்தனத்திற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த ராமையா பிள்ளைக்குப் பெண் குழந்தை பிறந்ததில் சற்று ஏமாற்றம்தான்.  இப்பொழுது அந்தப் பெண்ணுக்கு ஒன்றரை வயதாகிறது. ரத்தனம் மீண்டும் கருவுற்றிருக்கிறாள்.

ஒருநாள், இரவு தன் வேலை எல்லாம் முடித்துவிட்டு, பெண்ணைத் தூங்கவைத்துவிட்டு, ரத்தனம் படுக்கப்போனாள். மிகவும் களைப்பாக இருந்ததால், படுத்தவுடன், அவளை அறியாமலே கண்ணயர்ந்தாள். அவள் வருகைக்காகக் காத்திருந்த ராமைய்யா பிள்ளைக்கு ஏமாற்றம். தன் கணவர் விருப்பப்படி, அவரோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ரத்தனத்தின் உள்ளம் விரும்பினாலும், அவளுடைய உடல் ஒத்துழைக்க மறுத்தது.

ஒருநாள், கேஸ் சம்பந்தமா ராமையா பிள்ளை திருவாரூருக்குப் போகவேண்டியிருந்தது. கேஸ் வேலை மத்தியானமே முடிந்தது. அன்றுதான் “தில்லானா மோகனாம்பாள்” படம் திருவாரூரில்  ரிலீஸ். ராமைய்யா பிள்ளை ஆர்வத்தோடு அந்தப் படத்தை ரசித்துப் பார்த்துவிட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார். திடீரென்று அவருடைய வண்டி வழியில் நின்றுபோய்விட்டது. வானம் இருட்டிக்கொண்டு மழை கொட்டத் தயாரகிக்கொண்டிருந்தது. ராமைய்யா பிள்ளை என்ன செய்வதென்று தெரியாமல் நடுவீதியில் நின்றுகொண்டிருந்தார்.

அந்தச் சமயம் பார்த்து சுப்புணி என்பவர் வந்தார். சுப்புணியின் உண்மையான பெயர் சுப்பிரமணியன். ஆனால், அவரை எல்லோரும் சுப்பிணி என்றுதான் கூப்பிடுவார்கள். சுப்புணி ஒரு மாட்டுத் தரகர். இரண்டு மாதங்களுக்குமுன் ராமைய்யா பிள்ளையுடைய இரண்டு பசுமாடுகள் பாம்பு கடித்து இறந்துபோன பொழுது, சுப்பிணிதான் அவருக்கு நல்ல விலையில் இரண்டு மாடுகள் வாங்கிக் கொடுத்தார். அதனால் ராமைய்யா பிள்ளைக்கும் சுப்புணிக்கும் ஓரளவுக்குப் பழக்கம் உண்டு. 

”ஐயா, இந்த நேரத்திலே, இங்கே என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க?” என்றார் சுப்புணி. ராமைய்யா பிள்ளை நடந்ததைச் சொன்னார்.

“இப்ப ரொம்ப மழை பெய்யப் போகுது. நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள சுத்தமா நனைஞ்சு பொயிடுவிங்க. இங்கே, பக்கத்துலே எனக்குத் தெரிஞ்சவங்க வீடு ஒண்ணு இருக்கு. அங்கே தங்கிட்டு காலையிலே போங்க. அவுங்க உங்களை நல்லா கவனிச்சுப்பாங்க. நான் உங்க வண்டியைத் தள்ளிகிட்டுப் போய் மெக்கானிக்கிடம் கொடுத்து என்னா ஆச்சுன்னு பார்த்து ரிப்பேர் பண்ணி காலையிலே கொண்டு வர்ரேன்.” என்றார் சுப்புணி. முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், வேறு வழி இல்லாமல் சுப்புணி சொன்ன இடத்துக்கு, அவரோடு சென்றார் பண்ணையார்.

அந்த வீட்டுக்குப் போனவுடன், “இந்தா பட்டம்மா! ஐயா புலிவலம் பண்ணையார், இன்னிக்கி ராத்திரி இங்கே தங்கப் போறார். அவரை நல்லா கவனிச்சுக்கோ.” என்றார் சுப்புணி. பண்ணையாரை முன்பின் தெரியாமல் இருந்தாலும், அவரை அன்போடு வரவேற்றாள் பட்டாம்மா.

“சுந்தரி! ஐயா வந்திருக்காங்க. நீ அவருக்கு காபி டிபன் எல்லாம் கொண்டா.” என்று தன் மகளிடம் கூறினாள் பட்டம்மா. பட்டம்மாவைப் பார்த்தால், அன்று அவர் பார்த்த தில்லானா மோகனாம்பள் திரைப்படத்தில் வந்த ஜில் ஜில் ரமாமணி (மனோரமா) போல் இருந்தாள்.

பட்டம்மாவின் மகள், தன் தாயார் சொல்லியது போல வெகு விரைவாக ஸ்வீட், காரம் காபி எல்லாம் கொண்டுவந்து ராமையா பிள்ளைக்குக் கொடுத்துவிட்டு, அவரைப் பார்த்து ஒரு புன்சிரிப்புச் சிரித்தாள். சுந்தரிக்கு சுமார் இருபது வயதிருக்கும். அவள்  நல்ல சிவப்பு நிறம்; தலை நிறைய  கருமை நிறத்தில் சுருட்டை முடி, முகத்தில் பவுடர், கண்ணுக்கு மை எல்லாம் கொஞ்சம் அதிகாமகவே தடவிக்கொண்டு, ஒரு நடிகைபோல் தன்னை அலங்காரம் செய்துகொண்டிருந்தாள். ராமைய்யா பிள்ளைக்கு அன்று “தில்லான மோகனாம்பள் படத்தில் அவர் பார்த்த நடிகை பத்மினியைவிட சுந்தரி அழகாக இருப்பதாகத் தோன்றியது.  ”’தான் எங்கே இருக்கிறோம்?’,’இந்தப் பட்டம்மாவும், சுந்தரியும் யார்?’” என்று புரிந்துகொள்வதற்குப் பண்ணையாருக்கு அதிக நேரம் ஆகவில்லை. இது போன்ற இடங்களுக்கு பண்ணையார் இதற்குமுன் வந்ததில்லை. தன்னை இந்த இடத்தில் கொண்டுவந்துவிட்ட சுப்புணிமேல் கோபப்பட்டார். அன்று இரவு எந்தத் தவவறும் செய்யாமல் மறுநாள் காலை எவரும் கண்ணிலும் படாமல், நடந்தாவது வீட்டுக்குப் போகவேண்டும் என்றும் எக்காரணைத்தையும் முன்னிட்டு சுந்தரி வீட்டுக்கு இனிமேல் வரக்கூடாது என்றும் தனக்குத் தானே கூறிக்கொண்டு பண்ணையார் தன் மனதை உறுதிப்படுத்திக்கொண்டார். ஆனால், அன்றிரவு பண்ணையாரின் உணர்ச்சி வென்றது; அறிவு தோற்றது.

மறுநாள் காலை பண்ணையாரின் மோட்டார் சைக்கிளைச் சரிசெய்து கொண்டுவந்தார் சுப்புணி. சுப்புணிமேல் நேற்று பண்ணையாருக்கு இருந்த  கோபம் இப்பொழுது இல்லை. “ஐயா, ராத்திரி எல்லாம் வசதியாக இருந்ததா?” என்று கேட்ட சுப்புணியைப் பண்ணையார் நன்றியோடு பார்த்து, லேசாகச் சிரித்தார்.

பண்ணையாருக்கு மனதில் ஒரு சந்தேகம். தில்லான மோகனாம்பள் , சுந்தரி  ஆகிய இந்த இரண்டு பேரில் ரொம்ப அழகானவள் யார் என்பதுதான் அவருடைய சந்தேகம். அதனால், தில்லானா மோகனாம்பள் திரைப்படத்தை நான்குமுறை பார்த்துவிட்டு, ஒவ்வொருமுறையும் சுந்தரியையும் வந்து பார்த்துவிட்டு இரவில் தங்கி இருந்துவிட்டு காலையில் வீட்டுக்குப் போனார். பண்ணையாரின் நடவடிக்கைகள் முதலில் அவர் மனைவி ரத்தனதிற்குப் புரியாத புதிராக இருந்தன. ஆனால், அவர் கைவிரல்களில் இருந்த வைரமோதிரம் இப்பொழுது இல்லை; கழுத்திலிருந்த பவுன் சங்கிலி இப்பொழுது அங்கு இல்லை. வீட்டில் இருந்த அவளுடைய கொலுசு, மற்றும் சில நகைகளும் இப்பொழுது வீட்டில் இல்லை. அவரும் பல இரவுகள் வீட்டில் இருப்பதில்லை. இதை எல்லாம் சேர்த்துப் பார்த்த ரத்தனத்திற்கு பண்ணையாரின் செயல்கள் புரிந்தன.

இதைப் பற்றி எல்லாம் பண்ணையாரிடம் கேட்டு எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதியாக  நினைத்து, ஒருநாள், “ என்னாங்க, இப்ப எல்லாம் நீங்க வீட்டிலே இருக்க மாட்டேங்கிறிங்க. உங்க வைர மோதிரம், சங்கிலி, என்னோட கொலுசு, அப்புறம் வேற சில நகைகள் எல்லாம் காணும். என்னாங்க நடக்குது.” என்று கேட்டாள் ரத்தனம்.

“திருவாரூர் கோர்ட்லே கேஸ் நடக்குது. அதுக்காக அடிக்கடி அங்கே போக போகவேண்டியதாக இருக்கு; செலவு வேற நிறைய ஆகுது. அதுக்காக நான் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுகிட்டு இருக்கேன். நீ வேற இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டு என்னைத் தொல்லை பண்ணாதே.” என்று கூறி, கோபத்தோடு கிளம்பி, மன நிம்மதியைத் தேடி சுந்தரி வீட்டுக்குப் போனார். அன்று போன பண்ணையார் அங்கேயே தங்கிவிட்டார்.

பண்ணையார் வீட்டில் இல்லாதபொழுது, ரத்தனம் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள். ஒருநாள் வேலைக்காரப் பையனை அனுப்பி, பண்ணையார் எங்கே இருக்கிறார் என்று பார்த்துவரச் சொன்னாள். அந்தப் பையன் அங்கும் இங்கும் தேடினான். பண்ணையாருடைய மோட்டார் சைக்கிள் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தான்.  மோட்டார் சைக்கிள் நிறுத்தப்படிருந்த வீட்டில் பண்ணையார் இருப்பதைக் கண்டுபிடித்து, ரத்தனத்திடம் சொன்னான். புலிவலம் ஒரு சிறு கிராமம். அங்கு யார் வீட்டில் என்ன நடக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். பண்ணையார் வீட்டில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தி ரத்தனத்திடம்,” என்னம்மா இது? ஐயா இப்படி பண்றாரு. உங்களைப் பார்த்தா எனக்கு ரொம்ப க‌ஷ்டமா இருக்கு.” என்று சொன்னாள். “எல்லாம் என் தலைவிதி. அந்த சுந்தரி பொம்பளை நல்லா சொக்குப்பொடி இவரை மயக்கிட்டா. கடவுள்தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.” என்று சொல்லி தன்னைத் தானே நொந்துகொண்டாள் ரத்தனம்.

சுந்தரி வீட்டுக்குப்  பண்ணையார் வந்து ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும்.  ரத்தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்ததாகப் பண்ணையார் கேள்விப்பட்டார். உடனே போய், தன்னுடைய மகனைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். ”இத்தனை நாள் ரத்தனத்தை விட்டுவிட்டு சுந்தரி வீட்டிலேயே இருந்த பிறகு, இப்ப போய் எப்படி ரத்தனத்தைப் பார்ப்பது? போனால் அவள் என்னை ஏற்றுக்கொள்வாளா?” என்றெல்லாம் எண்ணித் தன் செயலை நினைத்துப் பண்ணையார் வெட்கப்பட்டார்; வேதனைப்பட்டார்.

வீட்டில் தன் கணவர் இல்லாமல், அவர் மனைவி ரத்தனம் பட்ட பாடு அவளுக்குத் தான் தெரியும். அவள் மகன் பிறந்தபொழுது ரத்தனத்திற்குப் பிரசவம் பார்த்த மருத்துவச்சி, குழந்தை பிறந்து ஒருவாரம் கழித்து ரத்தனத்தைப் பார்க்க வந்தாள். ரத்தனத்தைப் பார்த்த அவள் பெரும் அதிர்ச்சி அடைந்தாள். ரத்தனம் தன் உடம்பிலிருந்து இரத்தம் குறைந்து மிகவும் சோகையோடு இருந்தாள். “அம்மா, உங்களுக்கு உடம்பு சரியில்லை. உடம்பில ரொம்ப ரத்தம் கொறைஞ்சு, சோகையா இருக்கிங்க. சீக்கிரமா எதாவது ஒரு பெரிய டாக்டரைப் பாருங்க. திருவாரூர் அல்லது தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திரிக்குப் போய் உடம்பைக் கவனிச்சுக்கங்க. இது ரொம்ப ஆபத்தும்மா” என்று கவலையோடு எச்சரித்தாள். ஆனால், பின் தூங்கி முன் எழுந்து, கல்லானாலும் கணவன் புல்லானலும் புருஷன் என்று வாழ்ந்த ரத்தனத்தைக் காப்பாற்ற எந்தக் கடவுளும் முன்வரவில்லை.

ஒரு நாள் கேஸ் சம்பந்தமாக, பண்ணையார் தஞ்சாவூருக்குப் போக வேண்டியதாக இருந்தது. அங்கு, வக்கீலோடு பேசி முடிப்பதற்கு நீண்ட நேரம் ஆயிற்று; அன்றிரவு, தஞ்சாவூரில் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்துவிட்டு, விடியற்காலைக் சுந்தரி வீட்டுக்கு வந்தார் பண்ணையார்.

சுந்தரி வீட்டுக்குச் சற்று தூரத்தில் வரும்பொழுது, அவரை எதிர்த்து வழக்குத் தொடரும் அவருடைய பங்காளி சண்முகம் பிள்ளை, சுந்தரி வீட்டில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்தால், அப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தவரைப் போல் இருந்தார். வீட்டு வாசற்படிவரை வந்து சுந்தரி சண்முகம் பிள்ளையை வழி அனுப்புவதையும் சண்முகம் பிள்ளை அவளுக்கு ஏதோ கொடுப்பதையும் அதை அவள் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வதையும் தன் கண்களால் பார்த்தார் பண்ணையார்.

சில நாட்களுக்குமுன், சுந்தரியைத் தன் வீட்டுக்கே அழைத்துக்கொண்டுபோய் அங்கேயே நிரந்தரமாக வைத்துக்கொள்ளாம் என்று பண்ணையார் தீவிரமாக யோசித்தார். அவருடைய தாத்தாவுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். அவருடைய அப்பாவுக்கு ஒரே சமயத்தில் இரண்டு மனைவிகள் இருந்தார்கள். அவர் சுந்தரியை மணந்துகொள்வதற்கு சட்டம் இடம் கொடுக்காததால், அவளைத் தன் மனைவியோடு தன் வீட்டில் வைத்துக்கொண்டால், தனக்கும் தன் மனைவி ரத்தனத்துக்கும் அவள் உதவியாக இருப்பாள் என்று நினைத்தார். ஆனால், இன்று சண்முகம் பிள்ளையைச் சுந்தரி வீட்டில் பார்த்த பிறகு சுந்தரியோடு தொடர்பு வைத்துக்கொள்வதற்கு அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. மோட்டார் சைக்கிளை நேராகத் தன் வீட்டிற்குச் செலுத்தினார். வீட்டுக்குப் போகும் வழியெல்லாம், தான் செய்த தவறையும், தான் ரத்தனத்து இழைத்த துரோகத்தையும் நினைத்துத் தன்னையே வெறுத்தார்.

வீட்டு வாசற்படிவரை சென்றார். ரத்தனம் தன்னை ஏற்றுக்கொள்வாளோ மாட்டாளோ என்று மனத்தில் அச்சத்தோடும் குழப்பத்தோடும் உள்ளே போவதற்குத் தயங்கினார். அவரைப் பார்த்தவுடன், அவள் மகள் “அப்பா, அப்பா” என்று தனக்குத் தெரிந்த மழலைமொழியில் கூறிக்கொண்டு அவர் காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். ரத்தனம், “உள்ளே வாங்க. ஏன் அங்கே நிக்கிறிங்க?” என்று அன்போடு அழைத்தாள். அவளைப் பார்த்தவுடன், அவளுக்கு உடல் சரியில்லை என்பதை பண்ணையார் உணர்ந்தார். ”’ரத்தனம், உடம்புக்கு என்ன?’,’ஏன் இப்படி இளைச்சுப் போயிருக்கே?’, ‘ என்னாச்சு?’” என்று கவலையோடு கேட்டார். ”ஒண்ணுமில்லைங்க; நீங்க கவலைப்படாதிங்க.” என்றாள் ரத்தனம். பண்ணையார் தன் மகன் எங்கே இருக்கிறான் என்று தேடிப்பார்த்து அவனை அன்போடு தூக்கி முத்தமிட்டார். தன் ஆஸ்திக்கு ஒரு ஆண்வாரிசு கிடைத்துவிட்டான் என்று பெருமைப்பட்டார். வழ்க்கம்போல் ரத்தனம் பண்ணையாருக்கு சமைத்துச் சாப்பாடு போடுவதிலும், குழந்தைகளைக் கவனித்துகொள்வதிலும், வீட்டில் உள்ள மற்ற வேலைகளைப் பார்ப்பதிலும் கவனம் செலுத்தினாள்.

ஒருநாள் சுந்தரியின் அம்மா, கோட்டூரில் உள்ள ஒருகுளத்தில் குளிக்க வந்தாள். அங்கு குளித்துக்கொண்டிருந்த சரசு என்பவள், அவளைப் பார்த்து,“ ஏ, அக்கா! பண்ணையாருக்கு வலைவீசி, அவரை உங்க வீட்லேயே வளைச்சுப் போட்டுட்டேன்னு, பண்ணையார் பொண்டாட்டி உன்னைத் தாறுமாறு பேசினான்னு கேள்விப்பட்டேன். அது உனக்குத் தெரியுமா?” என்று  கேட்டாள்.

அப்பொழுது, அந்தக் குளத்துக்கே அருகே இருந்த மாமரத்திலிருந்து ஒரு மாம்பழம் குளத்தில் விழுந்தது. அதைப் பார்த்த, பட்டம்மா, “இப்ப நடந்தது என்னான்னு தெரியுமா?” என்று அவளைக் கேட்டாள். “மாம்பழம் விழுந்தது” என்று சரசு பதிலளித்தாள். “அந்த மாம்பழத்துக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் பட்டம்மா. “அதை ஒரு வாளைமீன் கவ்வுச்சு.” என்றாள் சரசு. “அதுதான் எங்க வீட்லேயும் நடந்துச்சு. அந்த மாம்பழம் தானா விழுந்ததைப் போல பண்ணையார்தான் எங்க வீட்டுக்கு வந்தார். நாங்க  ஒண்ணும் அவருக்கு வலைவீசலை. வந்தவர் எங்க வீட்லேயே தங்கிட்டார். இப்ப அவருக்கு ஒரு ஆம்பளைப் பிள்ளை பிறந்தவுடன் அவனைப் பாக்கிறத்துக்கு வீட்டுக்கு ஓடி வந்துட்டார். இப்ப பொண்டாட்டி சொல்றபடியெல்லாம் ஆடுறாரு. என்று ஆத்திரமாக வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்தாள் பட்டம்மா.

சில நாட்கள் கழித்து, ஒரு நாள் இரவு, குழந்தைகள் தூங்கிய பிறகு, ரத்தனம், படுக்கைக்குப் போனாள். பண்ணையார், “ரத்தனம்! என்னை மன்னிச்சிடு, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். இனிமேல் நான் எங்கேயும் போக மாட்டேன்.உன் கிட்டேயே இருப்பேன்” என்று தயங்கித் தயங்கிக் கூறினார். “ஐய்யய்யோ, அப்படி எல்லாம் சொல்லாதிங்க. நீங்க ஒரு தப்பும் செய்யலை. எனக்கு அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, உங்களைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன், நீங்க விரும்புற மாதிரி நடந்துப்பேன்.” என்று பண்ணையாருக்கு ஆறுதலாகப் பதிலளித்தாள் ரத்தனம். ஆனால், மனதுக்குள், “அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா ஒரு ஆம்புளையாப் பிறக்கணும்; தன் மனைவியைத் தவிர வேறு ஒருத்தியையும் மனசால கூட நினைக்காம,  அவளையும் பிள்ளைகளையும் அன்போடு கவனித்துக்கொள்ளும் நல்ல ஒழுக்கமுள்ளவனாக இருக்கணும். இவரைப்போல் இல்லாமல் இருக்கணும்.” என்று தன் கண்களை மூடிக்கொண்டு குலதெய்வத்தை வேண்டிக்கொண்டாள். மூடிய கண்களைத் திறக்காமலேயே ரத்தனம் தன் அடுத்த பிறவிக்கானா பயணத்தைத் தொடங்கிவிட்டாள்!

***************

 

இந்தச் சிறுகதை குறுந்தொகைப் பாடல்கள்  8, 49 ஆகியவற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.

குறுந்தொகை – பாடல் 8

 

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. 


அருஞ்சொற்பொருள்கழனி = வயல்மா = மா மரம்உகுதல் = உதிர்தல்தீம்பழம் = இனிய பழம் ; பழனம் = பொய்கைவாளை = ஒருவகை மீன்கதுவுதல் = பற்றுதல்ஊரன் = ஊரை உடைய தலைவன்ஆடி = கண்ணாடிபாவை = கண்ணாடியில் தோன்றும் உருவம் ; மேவல் = விரும்பல்.

 

உரை: வயல் அருகில் உள்ள மா மரத்திலிருந்துபழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன்என் வீட்டிலிருந்த பொழுது என்னை வயப்படுத்துவதற்காக என்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளைப் பேசினான்இப்பொழுதுதன்னுடைய வீட்டில்முன்னால் நிற்பவர்கள் கையையும் காலையும் தூக்குவதால் தானும் தன் காலையும் கையையும் தூக்கும் கண்ணாடியில் தோன்றும் உருவத்தைப்போல்தன் புதல்வனின் தாய் (மனைவிவிரும்பியவற்றைத் தலைவன் செய்கிறான்.

 

 

குறுந்தொகை – பாடல் 49

 

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 

 

அருஞ்சொற்பொருள்கொங்கு =  பூந்தாதுமுண்டகம் = முள்ளிச் செடிமணி = நீலமணிகேழ் = நிறம்மா = கருமைசேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்இம்மை = இப்பிறவி ; மறுமை = மறு பிறவிநேர்தல் = பொருந்துதல் .

 

உரைஅணிலின் பல்லைப் போன்ற கூர்மையான முள்ளையுடையதாது முதிர்ந்த முள்ளிச்செடியும்,  நீலமணியின் நிறத்தை ஒத்த கரிய கடல் நீரையுமுடைய நெய்தல் நிலத் தலைவ!  இப்பிறப்பு நீங்கி,  நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும்நீயே என் கணவனாக இருக்க வேண்டும். நான் உன் மனதிற்கேற்றவளாக (மனைவியாகஇருக்க வேண்டும்.

 

Comments

Popular posts from this blog

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்

மறந்தனா அல்லது மறைந்தானா?

கல்பனாவின் காதல்