ராஜயோகம்

                                                                           ராஜயோகம்

”அம்மா, நான் சாயங்காலம் வீட்டுக்கு வர்ரதுக்கு நாழியாகும்” என்றாள் பானு.   “இந்தப் பொண்ணு, ஆபிசிலே என்னதான் பண்ணுவாளோ? கொஞ்ச நாளாவே இப்படித்தான். நாழியாகும்னு சொல்லிட்டு, இருட்னதுக்கு அப்புரம்தான் வீட்டுக்கு வர்ரா. எனக்குதான் கவலையா இருக்கு. அவ அப்பா எதையுமே கண்டுக்கிறதில்லை.  கடவுள்தான் காப்பத்தணும்.” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டாள் பானுவின் அம்மா கமலம்.

பி. காம். படித்து முடித்துவிட்டு, பானு ஒரு பேங்க்லே மேனேஜராக வேலை பார்க்கிறாள். கடந்த சில மாதங்களாக அவள் பேங்க்குக்கு அடிக்கடி வரும் ராஜ் என்ற ஒரு இளைஞனோடு நெருங்கிப் பழகுகிறாள். பானுவின் பேங்க்குக்கு அருகில் உள்ள ஒரு கம்புயூடட்ர் நிறுவனத்தில் ராஜ் பணிபுரிகிறான். ராஜ் மிகவும் புத்திசாலி. அவன் கம்புயூட்டர் துறையில், IIT யில் Ph. D படித்து, மாடர்ண் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறான். அவனுடைய நிறுவனத்தில் அவனுக்கு நல்ல பெயர்; கை நிறைய சம்பளம். அவனுக்கு பானுவை மிகவும் பிடித்திருக்கிறது. பானுவைப் பார்ப்பதற்காகவே அவள் வேலை பார்க்கும் பேங்க்குக்கு அடிக்கடி ராஜ் வருவான். ஒரு நாள் வந்து அவனுடைய அக்கவுண்டில் பணத்தைக் கட்டுவான். மறுநாள் வந்து அவன் அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுப்பான். பணத்தை அக்கவுண்ட்லே கட்டுவதும், எடுப்பதும் பானுவைப் பார்ப்பதற்காகத்தான். முதலில் பேங்குக்கு வந்து போவதில் தொடங்கிய தொடர்பு, நாளடைவில் காதலாக மாறியது. அலுவலகத்தில் வேலை முடிந்தவுடன் பானுவும் ராஜும் தினமும் சந்தித்து ஒரு உணவகத்திற்குச் சென்று  காபி சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. சில நாட்களில் அலுவலகத்தில் வேலையை சீக்கிரமாகவே முடித்துவிட்டு, அல்லது லீவ் போட்டுவிட்டு சினிமாவுக்கும், மெரினா பீச்சுக்கும் அவர்கள் இருவரும் போவதுண்டு.

ஆரம்பத்தில் ராஜோடு பழகுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த பானுவுக்கு, நாளடைவில் குற்ற உணர்வு அதிகமாகியது. ” எத்தனை நாள்தான் இப்படி திருட்டுத்தனமாகக் காதலிப்பது?, காதலை எப்படிப் பெற்றோருக்குத் தெரியப்படுத்துவது? நாம் தெரிவிப்பதற்குமுன் அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் என்ன செய்வது?” போன்ற கேள்விகள் அவளை வாட்டின.

இன்று ராஜிடம் இதைப் பற்றியெல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்ற தீர்மானத்தோடு ஒருநாள் பேங்க்குக்கு வந்தாள் பானு.   ”என்னைத் திருமணம் செய்துகொள் என்று எப்படி வெளிப்படையாகக் கூறுவது? அல்லது எப்படி மறைமுகமாகக் கூறுவது?” என்று அவள் நாள் முழுதும் சிந்தித்துக்கொண்டிருந்தாள். வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல் ராஜைச் சந்திக்கச் சென்றாள். இருவரும் ஒரு பூங்காவில் சந்தித்தார்காள். பானுவின் மனத்தில் இருந்த கவலையை அவள் முகம் வெளிப்படுத்தியது. அதைக் கண்டுபிடிப்பதற்கு ராஜுக்கு அதிக நேரம் ஆகவில்லை. “எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிற உன் முகம் இன்னிக்கி வாடியிருக்குதே!  ஏன் என்னச்சு? உடம்பு சரியில்லையா?” என்று கவலையோடு கேட்டான் ராஜ்.  “ஒண்ணுமில்லே; நாம் இப்படி பழகிறதை யாராவது பார்த்து அப்பா அம்மாவிடம் சொல்லிட்டா என்ன பண்ரதுன்னு நினைச்சா பயமா இருக்கு.” என்றாள் பானு.

“அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன? ஆமா, நாங்கள் காதலிக்கிறோம்.” என்று சொல்ல வேண்டியதுதான். இதுலே பயப்படர்ரதுக்கு என்ன இருக்கு?” என்று கேட்டான் ராஜ்.

“அப்படி சொன்னா, உடனே நம்ப இரண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணிவச்சிடுவாங்களா? ஜாதகம், ஜோஸ்யம், ஜாதி என்று சம்பிரதாயங்கள் எல்லாம் இருக்கே!” என்றாள் பானு.

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லை. எங்க அப்பா ஆந்திராவில் டீஎஸ்பி வேலை பார்த்து ரிடையர் ஆனவார். அவர் எத்தனையோ பேரை வரதட்சிணை கேசில் ஜெயில்லே போட்டவர். எங்க வீட்டுலே வரதட்சிணை எல்லாம் கேக்க மாட்டாங்க. நம்ப ரெண்டு பேர் பிறந்த நேரம், பிறந்த ஊர் இந்த ரெண்டையும் ஒரு ஜோஸ்யர்ட்டே கொடுத்தா நமக்கு எல்லாப் பொருத்தமும் இருக்கிற மாதிரி நம்ம ஜாதகத்தை எழுதிக்கொடுத்திடுவார். நீ என்ன ஜாதின்னு சொல்லு. நானும் அதே ஜாதிதான்னு ஒரு தாசில்தாருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, அவர்கிட்டே  இருந்து ஒரு சர்டிபிகேட் வாங்கிடுரேன். அப்புரம் வேற எதாவது பிரச்னை இருந்தா சொல்லு. அதுக்கும் வழி கண்டுபிடிச்சுடலாம். எதுக்கும் கவலைப் படாதே.  எங்க அப்பா அம்மாவுக்கு ஜாதகம், ஜோஸ்யம், ஜாதி இதுலே எல்லாம் நம்பிக்கையே கிடையாது. நான் சீக்கிரமே உன்னைத் திருமணம் செய்துகொள்வேன். என்னை நம்பு. எங்கே கொஞ்சம் சிரி பார்க்கலாம்.” என்று ராஜ் சொல்லி முடித்தான்.

“பிளான் எல்லா நல்லாதான் இருக்கு. எங்க அப்ப அம்மாவை அவ்வளவு சுலபமா ஏமாத்த முடியாது. அவங்க ரெண்டு பேரும், ஜாதகம் ஜாதி ரெண்டுலேயும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவங்க. அவுங்க பஞ்சாங்கம் பார்க்காத நாளே கிடையாது.”

”பானு, நான் ஒண்ணு சொல்றேன்; கேள். நீ திருக்குறள் படிச்சிருக்கியா? வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா? ”உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன, மடந்தையொடு எம்மிடை நட்பு.” என்று சொல்லி முடித்தான் ராஜ்.

 

“இப்படி சொன்னா எனக்குப் புரியாது. புரிகிற மாதிரி சொல்லு.” என்றாள் பானு.

“வள்ளுவர் என்ன சொல்றாருன்னா, “காதலர்களிடையே உள்ள தொடர்பு உடம்புக்கும் உயிருக்கும் இடையே உள்ள நட்பைப் போன்றது ” அப்படின்னு சொல்றாரு. அதாவது, உடம்பில்லாமல் உயிர் எதையும் செய்ய முடியாது; அதுபோல், உயிரில்லாவிட்டால் இந்த உடம்பு வெறும் பிணம். உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை நட்பு என்று சொல்றார். அதுபோல், நாம ரெண்டுபேரும் இணைபிரியாத நண்பர்கள். நீ இல்லாமல் நானில்லை. நானில்லாமல் நீ இல்லை.” என்றான் ராஜ்.

“டயலாக் எல்லாம் நல்லாதான் இருக்கு. இதைப் போய் நான் அப்பா அம்மாகிட்ட சொல்ல முடியுமா.” என்றாள் பானு.

“அது சரி. இன்னொண்ணு சொல்றேன்,கேள். உங்க அப்பாவுக்கு எங்க அப்பாவைத் தெரியாது. உங்க  அம்மாவுக்கும் எங்க அம்மாவுக்கும் எந்த உறவும் இல்லை. சில மாதங்களுக்குமுன் நம்ம ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தருக்குத் தெரியாது. ஆனா, இப்ப நம்ம ரெண்டு பேரும்  கருத்தொருமித்த காதலர்களாக – நண்பர்களாக – மாறிவிட்டோம். இது எப்படி என்றால், சிவப்பாக இருக்கும் நிலத்தில்  மழைபெய்தால், நிறமில்லாத மழைநீர் சிவப்பாக மாறிவிடுவதை எவராலும் பிரிக்க முடியாது. அதுபோல், நம்பளை யாராலும் பிரிக்க முடியாது.” என்றான் ராஜ்.

“ஐடியா நல்ல இருக்கே. இதை யார் சொன்னது?” என்று பானு கேட்டதற்கு, ராஜ், “அவர் பெயர் யாருக்கும் தெரியாது. அதனால், அவருக்குப் பெயர் “செம்புலப்பெயல் நீரார்” அதாவது ’செம்மண்ணில் பெய்த மழை’ என்பதுதான் அவர் பெயர்.” என்று விடை அளித்தான்.

“சரி, சரி, நாழி ஆயிட்டது நான் வீட்டுக்குப் போகணும். இலக்கியம் எல்லாம் நல்லாதான் இருக்கு, பிரேக்டிகலா ஒரு பிளான் பண்ணு. நாளைக்குப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு பானு கிளம்பினாள்.

“சரி. பத்திரமா போ. உன் கழுத்துக்கு மஞ்சள் கயிறு வர்ரதற்கு இன்னும் அதிக நாள் இல்லை.” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ராஜ்.

“கழுத்தெல்லாம் ரெடியாதான் இருக்கு. நீ கயிறைக் கொண்டுவா. நான் கழுத்தை நீட்றேன்.” என்று ஒரு குறும்புச் சிரிப்போடு கூறி பானு விடைபெற்றாள். மனத்தில் குழப்பத்தோடும் கவலையோடும் வந்த பானு, மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் வீட்டுக்குச் சென்றாள்.

பானுவிடம் தைரியமாகப் பேசினாலும், எப்படி அவளுடைய பெற்றோரைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைப்பது என்ற சிந்தனையோடு வீட்டிற்குச் சென்றான் ராஜ். ராஜுக்கு ஒரு  தங்கை. அவள் பெயர் ரமா. ரமாவும் ராஜும் மிகவும் நெருக்கமாகப் பழகுவார்கள்.  இதுவரை ராஜ் பானுவைப் பற்றி ரமாவிடம் எதையும் சொல்லவில்லை. ஆனால், அன்று அவன்  ஆழ்ந்த சிந்தனையோடு இருப்பதைப் பார்த்த ரமா, “என்ன அண்ணா, எந்தக் கோட்டையைப் பிடிக்கத் தீவிர யோசனை?” என்று கேட்டாள்.

ராஜ், ”நான் உங்கிட்ட ஒண்ணு சொல்றேன். அதை உன்னோடு வைச்சுக்கோ. அப்பா அம்மாவிடம் இப்ப ஒண்ணும் சொல்ல வேண்டாம்.” என்றான். மிகுந்த கவனத்தோடு,  சிறு குழந்தை கதை கேட்பதைப்போல், ராஜ் சொல்லப்போவதைக் கேட்க ஆவலாக இருந்தாள் ரமா.

“நான் கொஞ்ச நாளா ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன், அவள் பெயர் பானு. நான் அவளை என்னோட ஆபிசுக்குக் கிட்டேதான் சந்திப்பது வழக்கம். அவள் வீடு இங்கதான் எங்கேயோ இருக்கு. எங்கே எருக்குன்னு தெரியாது. அவ அப்பா அம்மா, ஜாதகம் ஜோஸ்யம், ஜாதி இதிலெல்லாம் ரொம்பிக்கை உள்ளவங்க. நம்ம அப்பா அம்மா போல் இல்லை. “ என்று சொல்லி, ராஜு பெருமூச்சு விட்டான்.

“எனக்கு அவுங்களப் பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. உன்கிட்ட ஃபோட்டா ஏதாவது இருக்கா? என்று கேட்டாள் ரமா.

இருக்கு என்று சொல்லி, தன்னிடமிருந்த ஃபோட்டாவை ரமாவிடம் காட்டினான் ராஜ். அதைப் பார்த்தவுடன், “அண்ணா, அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க; சினிமா ஸ்டார் போல இருக்காங்க; புடிச்சாலும் புடிச்ச; புளியங்கொம்பத்தான் புடிச்ச!” என்று சிரிப்பொடு சொன்னாள் ரமா. அது சரி, அவுங்க அப்பா அம்ம பேரு என்ன? “என்று கேட்டாள். “அப்பா பேரு ஜானகிராமன், அவர் ஒரு வக்கீல். அம்மா பேரு கமலம்” என்றான் ராஜ்.

மறுநாள் ஆபீசுக்குப் போனவுடன் ராஜுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது; அது ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். அவனுடைய நிறுவனத்தின் பிரசிடண்ட் அவனை அழைத்து. “ராஜ், அமெரிக்காவிலே ஒரு கஸ்டமர், நம்ப சாஃப்ட்வேர் வேணும்னு சொல்ராங்க. ஆனா, அதிலே நிறைய மாற்றங்கள் வேணும்னு நினைக்கிறாங்க. அவுங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்துகொடுத்தா அநேகமா ஒரு கோடி கிடைக்கும். அந்த சாஃப்ட்வேர் நீ எழுதினதுதான். அதனாலே, நீ தான் அமெரிக்காவுக்குப் போகணும். நாளைக்கே கிளம்பு. அங்கே, சுமார் ஒரு மாதம் இருக்க வேண்டியதாக இருக்கும்னு நினைக்கிறேன். குட் லக்.” என்றார். வேறு வழியில்லாமல், மறுநாளே அமெரிக்காவுக்குக் கிளம்பினான் ராஜ்.

அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னால்,  தான் அவசரமாக, வேலை காரணமாக அமெரிக்காவுக்குச் செல்வதாகவும், விரைவில் திரும்பி வந்துவிடுவதாகவும் பானுவிடம் கூறுவதற்காக அவள்  ஆஃபீசுக்கு ராஜ் ஃபோன் செய்தான். ஆனால், அவள் யாரோடோ பேசிக்கொண்டிருந்ததால் அவளால்  அவனோடு பேசமுடியவில்லை. அவளைப் பார்ப்பதற்காக அவளுடைய பேங்க்குக்குச் சென்றான். அவன் சென்றபொழுது, அங்கும் அவளைப் பார்க்க முடியவில்லை. சுருக்கமாக ஒரு கடிதம் எழுதி, பானுவோடு வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு விமான நிலையத்திற்குச் சென்றான். இன்று இருப்பதைப் போல் அப்பொழுது செல் ஃபோன்கள்  இல்லை.  அமெரிக்காவில் இருந்து பானுவைத் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தான் ராஜ்.  

ராஜ் கொடுத்த கடிதத்தை வாங்கிக்கொண்ட பெண் அதை பானுவிடம் கொடுக்க மறந்துவிட்டாள். ராஜ் அமெரிக்காவுக்குச் சென்றதைப் பற்றி பானுவுக்கு எந்தத் தகவலும் இல்லை.  ராஜைக்  காணாமல் பானு தவித்தாள். அவன் ஆபிசில் கேட்டால், அவன் எங்கே இருக்கிறான், எப்பொழுது வருவான் என்று எவரும் சரியாகக் கூறவில்லை. நாளுக்கு நாள் பானுவின் துயரம் அதிகரித்தது. சில நாட்கள் ஆஃபிசுக்கு லீவ் போடுவிட்டு வீட்டிலேயே இருந்தாள். சரியாக சாப்பிடுவதில்லை. அவளைப் பார்த்தால் அவள் எதையோ இழந்து தவிப்பதைப் போல் காட்சி அளித்தாள். அவள் அம்மாவுக்கு மிகவும் கவலை. அம்மாவின் கேள்விகளுக்கு பானு சரியாக பதில் அளிப்பதில்லை. தன்னுடைய  மகள் இப்படி இருப்பதை எந்தத் தாயால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்?

அடுத்த வீட்டுக் கல்யாணி கமலத்துக்கு தூரத்து உறவு; கல்யாணியும் கமலமும் சகோதரிகள் போல் பழகுவார்கள். கல்யாணியின் மகள் கலா, பானுவிடம் மிகவும் அன்பாக இருப்பாள். பானுவும் கலாவும் சகோதரிகள் போலப் பழகுவார்கள். பானு -ராஜ் காதலைப் பற்றி கலாவுக்கு ஓரளவுக்குத் தெரியும். ஒருநாள், கமலம் கல்யாணியிடம் பானுவின் நிலைமையைப் பற்றி விவரமாகக் கூறினாள். என்ன செய்யலாம் என்று யோசனையும் கேட்டாள். “எங்களுக்கு ஒரு ஜோஸ்யரை நல்லாத் தெரியும். அவர் எல்லாத்தையும் கரெக்டா சொல்லுவாரு. அவருக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லட்டுமா?” என்று கல்யாணி கேட்டாள். கமலத்துக்கு ஜோஸ்யத்தில் அசாத்திய நம்பிக்கை உண்டல்லவா? அவள் மகிழ்ச்சியோடு கல்யாணியிடம், ”நல்ல யோசனைதான். அவருக்கு ஃபோன் செய்து வரச் சொல்லுங்கள்.” என்றாள் கமலம்.

மறுநாள் மாலை ஜோஸ்யர் கல்யாணி வீட்டுக்கு வந்தார். ஜோஸ்யருக்கு சுமார் எழுபது வயதிருக்கும். வயதானதால் தலைமுடி சுத்தமாக நரைத்திருந்தது. தாடியும் வெளுத்திருந்தது. நெற்றியில் திருநீறு அணிந்திருந்தார். அவரைப் பார்த்தால் நன்றாகப் படித்தவர் போல் இருந்தார். கமலமும் பானுவும் கல்யாணி வீட்டில் ஜோஸ்யரைச் சந்தித்தார்கள். கமலம் ஜோஸ்யரிடம் பானுவின் ஜாதகத்தைக் கொடுத்தாள். ஜோஸ்யர் சற்று நேரம் ஏதோ கணக்கெல்லாம் போட்டார். ”அம்மா, இது ரொம்ப அதிர்ஷ்டமான ஜாதகம். இப்ப சில கிரகங்கள் எல்லாம் வக்ரத்லே இருப்பதாலே கோஞ்சம் மனவருத்தம், பயம் எல்லம் இருக்கும். இன்னும் ஒரு மாதத்தில் வக்ர நிவர்த்தியாகிடும், சுக்கிர திசை ஆரம்பிக்கப் போவுது.” என்றார் ஜோஸ்யர்.

 கல்யாணி, “இந்தப் பொண்ணுக்கு எப்ப கல்யாணம் ஆகும்? கல்யாணத்துக்குப் பிறகு குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? அதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்.” என்று ஆர்வத்தோடு கேட்டாள். ஜோஸ்யர்,”பேஷாச் சொல்றேன். இது ஒரு ராஜயோக ஜாதகம். தாம்பத்ய வாழ்க்கை பிரமாதமா இருக்கும். அதிலே எந்த சந்தேகமும் இல்லை. விருச்சிக லக்னம், களத்திரகாரகன் சுக்கிரன் களத்திரஸ்தானத்தில் ஆட்சி; தனஸ்தானத்துக்கும், புத்ரஸ்தானத்துக்கு, அதிபதியான குருபகவான் மீனத்துலே ஆட்சி. எந்த தோஷமும் இல்லை. இந்தப் பொண்ணுக்கு வாழ்க்கை ஜம்னு நன்னா இருக்கும்.” என்றார் ஜோஸ்யர்.

கமலம், கல்யாணி, பானு, கலா ஆகிய நாலு பேருக்கும் ஜோஸ்யர் சொன்னது எதுவும் புரியவில்லை. ஆனால், கேட்பதற்கு நன்றாக இருந்தது. பானுவுக்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது என்பது மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. கலா, “சார், எதோ யோகம்னு சொன்னிங்களே. அதை இன்னொரு தடவை சொல்லுங்க.” என்று கேட்டாள். அவர் “ராஜயோகம்னு சொன்னேன்” என்றார். கலா பானுவுக்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். பானுவை மெதுவாகக் கிள்ளிவிட்டுவிட்டு, ஜோஸ்யரை பார்த்து, “அது ராஜயோகமா? அல்லது ராஜ் யோகமா?”என்று கலா கேட்டாள். ஜோஸ்யர் “ராஜயோகம்னாலும் ஒண்ணுதான்; ராஜ்யோகம்னாலும் ஒண்ணுதான். அவ நன்னா இருப்பா; அவளுக்கு கடவுள் அனுக்கிரஹம் பூர்ணமா  உண்டு. நிச்சயதார்த்தம், கல்யாணம்னா கண்டிப்பா காண்டேக்ட் பண்ணுங்க.” என்று சொல்லி, விசிடிங் கார்டைக் கொடுத்தார். தனக்கு வரவேண்டிய ஃபீசை வாங்கிக்கொண்டு சென்றார். கலா, பானுவைப் பார்த்து, “ ஏ! உனக்கு ராஜ்-யோகம்னு ஜோஸ்யர் சொல்லிட்டார்; சந்தோஷமா இரு.” ராஜ்-யோகம் என்றால் என்ன என்று கலாவுக்கும் பானுவுக்கும் மட்டும்தான் புரிந்தது.

ராஜ் சொன்ன செய்தியைக் கேட்டவுடன், ரமாவுக்கு ரொம்ப சந்தோஷம். அவளால் அவள் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. அவள் தன் அம்மாவிடம் போய் ராஜ் சொன்னதையெல்லாம் அப்படியே சொன்னாள்; ஃபோட்டாவையும் காட்டினாள். அவள் அம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம். அவள் தான் கேட்டதை எல்லாம் அப்படியே அவள் கணவர் பாஸ்கரனிடம் கூறினாள். கூறியது மட்டுமல்லாமல்  திருமணத்திற்குத் தேவையான முயற்சிகளை எல்லாம் எடுக்குமாறு பாஸ்கரனைத் தூண்டினாள். ஜானகிராமன் யார், அவர் எங்கே இருக்கிறார் என்றெல்லாம் ரமாவிடம் இருந்து பாஸ்கரன் தெரிந்துகொண்டார். அவர் தன் வீட்டிற்கு அருகிலே இருப்பதாகப் புரிந்துகொண்டார். ஆனால் ஜானகிராமன் வீட்டு முகவரியை ரமா கூறவில்லை. முதலில் ஜானகிராமனின் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

பாஸ்கரன் பெரிய போலிஸ் அதிகாரி அல்லவா? அவர் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, சென்னைப் போலிஸ் கமிஷனரிடம் இருந்து ஜானகிராமனின் முகவரியைக் கண்டுபிடித்தார். ஜானகிராமன் ஒரு வக்கீல். அவரைப் பார்க்க வேண்டுமானால் ஏதாவது ஒரு கேஸ் வேண்டுமே. அதற்காக கற்பனையாக ஒரு கேஸை உருவாக்கிக்கொண்டார் பாஸ்கரன். ஒருநாள் மாலைநேரம், பாஸ்கரன் ஜானகிராமன் வீட்டிற்குச் சென்றார்.

ஜானகிராமன் வீட்டுத் திண்ணையில் குமாஸ்தா இருந்தார். அவரிடம், “சார், என் பெயர்  பாஸ்கரன், நான் பணியிலிருந்து ஓய்வுபெற்ற டீஎஸ்பி; ஒரு கேஸ் சம்பந்தமாக வக்கீல் ஜானகிராமனைப் பார்க்க வந்திருக்கிறேன்.” என்று பாஸ்கரன் கூறினார். குமாஸ்தா அவசரம் அவசரமாக, உள்ளே சென்று ஜானகிராமனிடம் தகவலைக் கூறினார். ஜானகிராமன், “வக்கீல்தானே போலிஸ்ஸேடஷனுக்குப் போவது வழக்கம். போலிஸ்காரர் ஏன் நம்மைத் தேடி வந்திருக்கிறார்?” என்று சற்று குழப்பத்தோடு வெளியே வந்து பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றார்.

பாஸ்கரன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, “ஒரு கேஸ் சம்பந்தமா உங்க கிட்டே அட்வைஸ் கேக்கலாம்னு வந்திருக்கேன்.” என்றார். ஜானகிராமன், “விவரத்தைச் சொல்லுங்க. நான் எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்.” என்றார்.  பாஸ்கரன், “எனக்கு ஆந்திராவில் ஒரு வீடு இருக்கு. அதில் வாடகைக்கு குடியிருப்பவன் அஞ்சு வருஷமா வாடகை கொடுக்காம இருக்கான்.  பலமுறை வீட்டைக் காலிசெய்யச் சொல்லியும் காலிசெய்யாமல் இருக்கான்.” என்று சொன்னார். ஜானகிராமன், “சார், உங்களுக்குத் தெரியாதது இல்லை. இதுபோல கேஸ் எல்லாம் கோர்ட்க்குப் போனா பல வருஷம் இழுத்தடிப்பாங்க. போலிஸ் வழியா விரட்டினா, தானே போயிடுவான், அப்படி செய்ய உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா, சொல்லுங்க, நான் கோர்ட்லே கேஸ் ஃபைல் பண்றேன்.” பாஸ்கரன், “நீங்க சொல்றதுதான் சரி. நான் இதைப் போலிஸ்  விஷயமா ஆக்க வேண்டாம்னு நினைச்சேன். சரி, நான் அங்கே இருக்கிற டீஎஸ்பியை காண்டேக்ட் பண்றேன்.” என்றார் பாஸ்கரன்.

இதுவரை பாஸ்கரனை கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த ஜானகிராமனுக்கு, பாஸ்கரனை எங்கேயோ பார்த்ததுபோல் தோன்றியது. ஜானகிராமன், “சார், உங்களை இதுக்கு முன்னால் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. நீங்க எங்கே படிச்சிங்க? எப்ப படிச்சிங்க?” என்று கேட்டார். பாஸ்கரன், “நான் பிரசிடென்சி காலேஜ்லே B.A, பிறகு  1982 இல் M.A.படிச்சேன்”  என்றார். ஜானகிராமன், “நானும் அதே சமயத்திலே , அங்கேதான் படிச்சேன். நீங்க டென்னிஸ் விளையாடுவிங்களா? நான் படிக்கிறபோது , அங்கே டென்னிஸ் பாஸ்கரன்னு ஒருத்தர் இருந்தார். அவர் அங்கே படிக்கிற ஒரு பொண்ணைக் காதலிச்சு, யாருக்கும் தெரியாமல் ரிஜிஸ்டெர்டு மேரேஜ் செய்துகொண்டதா எல்லாரும் பேசிக்கிட்டாங்க.” என்று தன்னுடைய பழைய நினைவுகளை பாஸ்கரனோடு பகிர்ந்துகொண்டார்.

பாஸ்கரன், “அந்தக் குற்றவாளி நான்தான். நானும் விசாவும் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டோம். ஆந்திராவுக்குப் போய் முப்பது வருஷம் வேலை பார்த்தேன். இப்ப, ரிட்டையர்டு ஆன பிறகு, என் பையனோடு சென்னையில் இருக்கேன்.”

“வெங்கட்ரமணன் என்பவர் உங்களோட படிச்சாரா? அவரை உங்களுக்குத் தெரியுமா?” என்று ஜானகிராமன் பாஸ்கரனைக் கேட்டார். பாஸ்கரன், “ரமணா ஜுவல்லர்ஸ் வெங்கட்ரமணன்தானே? நல்லா தெரியும். அடுத்த வாரம் அவர் பையனுக்கு கல்யாணம்.; கூப்பிட்டிருக்கிறார். வர்ரேன்னு சொல்லியிருக்கிறேன்.” என்றார். தன்னையும் வெங்கட்ரமணன் அழைத்திருப்பதாகவும் தானும் போகப்போவதாகவும் ஜானகிராமன் கூறினார்.

ஜானகிராமன், ”ஆமாம்; உங்க மனைவி பேர் என்னான்னு சொன்னிங்க?” பாஸ்கரன், “அவ பேரு விசாலாட்சி. சுருக்கமா விசான்னு எல்லாரும் கூப்பிடுவாங்க. ஜானகிராமன் ஆச்சர்யம் தாங்க முடியாமல், “O my God! This is a real surprise.” என்று கூறிவிட்டு, தன் மனைவி கமலத்தை அழைத்து, ஜானகிராமனைப் பற்றிய தகவல்களை எல்லாம் அவளிடம் சொன்னார். கமலம், ஆச்சர்யத்தோடு, “விசா எங்க அத்தையோட நாத்தனார் மகள். கல்யாணம் ஆகிறவரைக்கும் நானும் அவளும் நெருங்கிப் பழகினோம். எனக்கு அவளைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. ஒருநாளைக்கு அவளையும், உங்க பையனையும் கூட்டிட்டு வாங்க.” என்றாள். ”இப்ப எங்க பையன் ராஜ் அமெரிக்காவுக்குப் போயிருக்கிறான். இந்த வாரம் வந்திடுவான். என் குடும்பத்தோடு அந்த வெங்கட்ரமணன் பையன் கல்யாணத்துக்கு வர்ரோம். நீங்களும் வாங்க. அங்கே பாக்கலாம்.” என்றார் பாஸ்கரன்.

அந்த சமயம் பானுவைப் பார்ப்பதற்கு கலா வந்தாள். அவளைப் பார்த்தவுடன், “அதுதான் உங்க பொண்ணா?” என்று பாஸ்கர் ஜானகிராமனிடம் கேட்டார். அதற்கு ஜானகிராமன், “இல்ல. இவ அடுத்த வீட்டுப் பெண். அவுங்க எங்களுக்கு சொந்தம். இப்ப நீங்களும் சொந்தமாகிட்டிங்க. அதனாலே உங்களுக்கும் சொந்தம்தான். நீங்க அவுங்களையும் சந்திக்கணும். அவுங்களும் வெங்கட்ரமணன் பையன் கல்யாணத்துக்கு வருவாங்க. அப்ப இண்டொரடுயூஸ் பண்ரேன்.” என்றார்.

 “சரி சார், சரிம்மா, நான் போயிட்டுவர்ரேன். உங்களைச் சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம். அடுத்த வாரம் பாக்கலாம்.” என்று கூறி,  ஜானகிராமன் – கமலம் தம்பதிகளிடமிருந்து பாஸ்கரன் விடைபெற்றார்.

அடுத்த வாரம், வெங்கட்ரமணண் பையன் கல்யாணத்துக்கு பாஸ்கரன், விசா, ராஜ், ரமா நான்கு பேரும் சென்றார்கள். அங்கே, பானுவும் அவளுடைய பெற்றோர்களுடன் சென்றாள்; கலாவும் அளுடைய பெற்றோர்களும் சென்றார்கள். பானு வருவதைப் பார்த்தவுடன், ராஜ் அவளை நோக்கிச் சென்றான். பானு தன் பெற்றோர்களுடன் வருவதால், சற்று விலகிப்போய் தனியே ஒரு இடத்தில் நின்றான். ஆனால், பானுவைப் பார்த்து, அவன் இருக்கும் இடத்திற்கு வருமாறு சைகை காட்டினான். பானு கலாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். “இதோ வர்ரேன்.” என்று கலாவிடம் கூறிவிட்டு ராஜ் இருக்கும் இடத்திற்கு பானு விரைந்து சென்றாள்.

“உன்னைப் பார்க்காம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என்றாள் பானு. ராஜ், “அவசரமா போக வேண்டியிருந்தது. உங்க பேங்குக்கு  ஃபோன் பண்னினேன்; ஆனா, உன்னோடு பேச முடியவில்லை.பேங்குக்கு வந்தேன்; உன்னைப் பார்க்க முடியலை; ஒரு கடித்தை எழுதி உன்னிடம் கொடுக்கச் சொல்லி, ஒரு பெண்ணிடம் கொடுத்தேன். அமெரிக்காவிலிருந்து பல தடவை உன்னைக் காண்டேக்ட் பண்ண முயற்சி செய்தேன். கனெக்‌ஷன் கிடைக்கலை.சாரி. இனிமே, உன்னை விட்டுவிட்டு எங்கேயும் போக மாட்டேன். அவன் அவளிடம் கூறாமல் அமெரிக்காவுக்குப் போனதால் இருந்த கோபம், வருத்தம் எல்லாம் அவனைக் கண்டவுடன் மறைந்தன. அவனைக் கட்டித் தழுவி முத்தம் கொடுக்க வேண்டும் என்று அவள் உள்ளம் துடித்தது. ராஜும் அப்படித்தான் நினைத்தான். அங்கே பலரும் இருந்ததால் கட்டித் தழுவி முத்தமிட வாய்ப்பில்லை.

”நான் இல்லாதபொழுது நடந்ததையெல்லாம் என் தங்கை ரமா சொன்னாள். அடுத்த வாரம் உன்னைப் பெண்பார்க்க நான் எங்க அம்மா அப்பாவோடு வர்ரேன். நான் அன்னிக்கி ஒருநாள் செம்புலப்பெயல் நீரார் எழுதினாதாக ஒரு பாடலைச் சொன்னேனே, ஞாபகமிருக்கா?“ என்று கேட்டான் ராஜ். நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜைப் பார்த்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சியால் பானுவால் பேச முடியவில்லை. அவன் சொன்ன பாடல் ஞாபகம் இருக்கிறது என்பதைத் தெரிவிப்பதற்ககாக  மெதுவாகத் தலையை அசைத்தாள்.

 ராஜ், “அந்தப் பாடல் நம்ம விஷயத்திலே தப்பாகிவிட்டது. உன் அப்பாவுக்கு என் அப்பாவைத் தெரியும்; உன் அம்மாவுக்கு என் அம்மா உறவு.“ என்றான். பானு, “நான் ஒரு  பாட்டு சொல்லட்டுமா? நான் ஸ்கூல் இருக்கும்பொழுது படிச்சது. ஒருவரி தான் ஞாபகம் இருக்கு.” என்றாள். ராஜ் ஆவலுடன், “அது என்ன பாட்டு? சொல்.” என்றான். பானு, “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்றாள். ராஜ், “ஆமாம். சுத்தி வளைச்சுப் பார்த்தா எல்லாருமே சொந்தம்தான். இன்னொரு குட் நியூஸ். அமெரிக்காவிலே நியூ யார்க்லே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கு. வருஷத்துக்கு 200,000 டாலர். நம்ம கல்யாணத்துக்குப் பிறகு நாம் அமெரிக்கா போகப்போறோம். யாதும் ஊரேன்னு சொன்னில்லே, இனிமே  நியூ யார்க்தான் நம்ப ஊர்.” என்று கூறி, யாரும் பார்க்காத இடத்திற்கு பானுவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்துக்கொண்டான்; அவசரமாக சில முத்தங்களைக் கொடுத்தான். பானு, ”சரி, சரி.என்னை விடு.  யாராவது பார்க்கப் போறாங்க. நான் போய் என் ஃபிரண்ட் கலா பக்கத்திலே உட்காரப் போறேன்’ என்று கூறிவிட்டு, பானு மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு போய் கலாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“என்ன! ஜோஸ்யர் சொன்ன ராஜ் -யோகம் கிடச்சாச்சா?’ என்று கலா கேட்டவுடன், பானு வெட்கத்தோடு தலை குனிந்தாள்.

 

 

பி. கு. இந்தச் சிறுகதை,ஒரு திருக்குறள், இரண்டு குறுந்தொகைப் பாடல்கள், ஒரு புறநானூற்றுப் பாடல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு கற்பனைக் கதை.

திருக்குறள்

உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

(குறள் -1122)

 

 

இந்தக் குறளுக்கு விளக்கத்தை, https://kuralthiran.com என்ற வலைத்தளத்தில் காணலாம்.

குறுந்தொகை

அகவன் மகளே அகவன் மகளே 
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் 
அகவன் மகளே பாடுக பாட்டே 
இன்னும் பாடுக பாட்டேஅவர் 
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே.      
(குறுந்தொகை, 23)

யாயும் ஞாயும் யாரா கியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும் எவ்வழி யறிதும் 
செம்புலப் பெயனீர் போல 
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.   
(குறுந்தொகை, 40)

இந்த இரண்டு பாடல்களுக்கும் விளக்கத்தை, https://nallakurunthokai.blogspot.com என்ற வலைத்தளத்தில் காணலாம்.

 புறநானூறு

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

 தீதும் நன்றும் பிறர்தர வாரா;

 நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

 சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

 இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,             5

 இன்னா தென்றலும் இலமே மின்னொடு

 வானம் தண்துளி தலைஇ, ஆனாது

 கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

 நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்

 முறைவழிப் படூஉம் என்பது திறவோர்                           10

 காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்

 பெரியோரை வியத்தலும் இலமே;

 சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

 

இந்தப் பாடலின் விளக்கத்தை https://puram400.blogspot.com/ என்ற வலைத்தளைத்தில் காணலாம்.

 

Comments

Popular posts from this blog

தாவத் தெரிந்த குரங்கு

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்

கிருஷ்ண லீலா