மோர்க்குழம்பு செய்த மேஜிக்

                                          மோர்க்குழம்பு செய்த மேஜிக்

 முனைவர் இர. பிரபாகரன்

”அம்மா, நான் ஒரு பலகாரம் பண்ணப் போறேன்” என்றாள் மைதிலி.

“உனக்கு ஒண்ணும் செய்யத் தெரியாது. போய் படிக்கிற வேலையைப் பாரு.” என்றாள் மைதிலியின் அம்மா மீனாட்சி.

மைதிலி ஒரு வசதியான குடும்பத்துப் பெண். அவளுடைய பெற்றோருக்கு மைதிலி ஒரே பெண். செல்லமாக வளர்ந்தவள். மைதிலியின் அப்பா சாமிநாதன், சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறார்; மிகவும் கண்டிப்பானவர். அவரைக் கண்டாலே, அவரிடம் வேலைபார்ப்பவர்கள் பயப்படுவார்கள். அவர் மனைவிக்குக்கூட அவரிடம் கொஞ்சம் பயம்தான். எவ்வளவு வேலை இருந்தாலும், ஒவ்வொரு நாளும் மைதிலியிடம் கொஞ்ச நேரமாவது சாமிநாதன் பேசாமல் இருக்க மாட்டார். மைதிலியுடன் சேர்ந்துதான் காலையிலும் இரவிலும் சாப்பிடுவார். கல்லூரியிலிருந்து மைதிலி வீட்டிற்கு வர எவ்வளவு நேரமானலும் காத்திருப்பார்.

வீட்டில் எல்லா வேலைகளையும் செய்வதற்கு ஆட்கள் இருந்தாலும், தன் கணவருக்கும் பெண்ணுக்கும் என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றையெல்லாம் தன் கையாலே செய்தால்தான் மீனாட்சிக்குத் திருப்தி. அதனால், சமையலுக்கு யாரையும் வைத்துக்கொள்ளவில்லை.

மீனாட்சியின் தங்கை கமலாவின் வீடும் மீனாட்சியின் வீடும் அடுத்தடுத்த வீடுகள். கமலாவுக்கு ஒரே ஒரு பெண் சித்ரா. மைதிலி எப்பொழுதும் கமலாவின் வீட்டிலேயே இருப்பது வழக்கம். கமலா மைதிலியைத் தன் குழந்தையாகவே கருதி, அவளே மைதிலியை வளர்த்தாள்.

கல்லூரியில் படிக்கும்பொழுது, மைதிலிக்கு அருண் என்ற பையனுடன் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு. நாளடைவில் அந்தத் தொடர்பு காதலாக வளர்ந்தது. அவர்கள் சந்தித்துப் பேசாத நாட்களே இல்லை. இப்படியே பல மாதங்கள் ஓடின. கல்லூரிப் படிப்பு முடிந்தது. அருணுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. படிப்பு முடிந்துவிட்டதால், மைதிலியும் அருணும் அடிக்கடி சந்திக்க முடியவில்லை. 

மைதிலியின் பெற்றோர்கள் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். எப்பொழுது பார்த்தாலும் மைதிலியின் வீட்டில் அவளுடைய கல்யாணத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். மைதிலிக்கு வீடே நரகம்போல் இருந்தது. தான் அருணைக் காதலிப்பதை யாரிடமும் சொல்ல முடியவில்லை. அருண் வேறு ஜாதி; அவள் வேறு ஜாதி. சாமிநாதன் மிகுந்த ஜாதிப் பற்றுடையவர். அதனால், அவள் அருணைத் திருமணம் செய்துகொள்வதற்குக் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டார் என்று மைதிலிக்குத் தெரியும். இருந்தாலும், தன்னுடைய காதலைப் பற்றித் தெரியப்படுத்துவதற்கு சித்ராவின் உதவியை மைதிலி நாடினாள்.

ஓரிருமுறை, சித்ரா, “அம்மா, மைதிலி ஒருத்தரைக் காதலிக்கிறா, அவரையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறா. ஆனா, …. அவர் வேறு ஜாதி.” என்று தயங்கித்தயங்கிக் கூறினாள்.

“அவுங்க அப்பா அதுக்கு ஒருநாளும் சம்மதிக்கமாட்டார்” என்று கமலா உறுதியாகக் கூறினாள்.

அருண் அடிக்கடி மைதிலிக்கு ஃபோன் செய்து அவளைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினான். ஒருநாள், சித்ராவின் உதவியோடு, வீட்டிலிருந்து வெளியேறி, அருணை ஒரு பாதுகாப்பான இடத்தில் மைதிலி சந்தித்தாள்.

மைதிலியைப் பார்த்தவுடன் அருண், “மைதிலி, ஏன் ஒருமாதிரி இருக்கே? முகம் வாடியிருக்கே! என்ன ஆச்சு” என்றான்.

“எங்க அப்பா ஒரு ஜாதிப் பைத்தியம். அவர் நம்ம கல்யாணத்துக்கு கண்டிப்பா சம்மதிக்கவே மாட்டார். எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்றாள் மைதிலி.

”எங்க வீட்டிலேயும் பிரச்சனைதான். நான் எங்க அத்தை பெண்ணைத்தான் கட்டிக்கணும்னு பிடிவாதமா இருக்காங்க” என்றான் அருண். மைதிலி அழத்தொடங்கினாள்.

“மைதிலி, அழாதே! நான் உன்னை ஒருநாளும் கைவிட மாட்டேன்.” என்றான் அருண்.

“நாம ஒண்ணு செய்யலாம். நான் சொல்ற நாள்ள, சொல்ற இடத்துக்கு நீ வா. நாம இரண்டுபேரும் ரிஜிஸ்டர்டு கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கு நிறைய சம்பளம் வருது. நான் தனியா ஒரு வீட்டில் இருக்கேன். நமக்கு யார் தயவும் வேண்டாம். நாம கணவன் மனைவியா சந்தோஷமா இருக்கலாம். நம்பளை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. நீ என்ன சொல்றே?” என்று கேட்டான் அருண்.

“ஐய்யய்யோ! அப்பா. அம்மா, சித்தி, சித்ரா எல்லாரையும் விட்டுட்டு எப்படி வர்ரது? எனக்குப் பயமா இருக்கு. அவங்க …..” என்று சொல்லி முடிப்பதற்குள் மைதிலிக்கு அவளை மீறி அழுகை வந்துவிட்டது.

“மைதிலி, அழாதே! நாம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்னா, எனக்கு வேறு வழி தெரியிலே. யோசிச்சுப் பாரு. நீ என் கண்ணில்லியா? அழக்கூடாது. சத்தியமாச் சொல்றேன். நாம ரெண்டுபேரும் ரிஜிஸ்டர்டு கல்யாணம் பண்ணிக்கிறதைத் தவிர வேறு வழியில்லை. நம்ப இரண்டு பேர் வீட்டிலேயும் நம்ப கல்யாணத்துக்குத் தடையா இருக்காங்க. நம்ப முடிவை நாமதான் எடுக்கணும். பிளீஸ்! நான் சொல்றதை நல்ல யோசிச்சுப் பார். நான் உன்னை நாளைக்குக் கூப்பிடறேன். எங்க வரணும், எப்ப வரணும்னு சொல்றேன். அழாதே! தையிரியமா இரு. எல்லாம் நல்லபடியா நடக்கும். சித்ரா காத்துக்கொண்டிருக்கிறாள். அவளோடு சேர்ந்து வீட்டுக்குப் போ.” என்றான் அருண். மைதிலியும் சித்ராவும் வீட்டிற்குச் சென்றார்கள்.

போகும் வழியெல்லாம் மைதிலி அருண் கூறியதைப் பற்றி சித்ராவிடம் கூறி அழுதுகொண்டே போனாள். அன்றிரவு மைதிலியுடன் சித்ரா தங்கினாள். இருவரும் தீவிரமாக யோசித்தார்கள். கடைசியில், மைதிலி அருணைத் திருமணம் செய்துகொள்வதற்கு சித்ரா உதவுவதற்கு முன்வந்தாள்.

மறுநாள், அருண் ஃபோன் செய்தான். அவன், சொன்ன இடத்திற்கு மைதிலியும் சித்ராவும் சென்றார்கள். அருணுக்கும் மைதிலிக்கும் ரிஜிஸ்டர்டு கல்யாணம் நடைபெற்றது. மைதிலி அருணுடன் அவன் வீட்டிற்குச் சென்றாள்.

மைதிலியைக் காணாமல் அவளுடைய பெற்றோர் செய்வதறியாமல் தவித்தார்கள். சாமிநாதனுக்குப் போலிஸ் கமிஷனர் நெருங்கிய நண்பர். சாமிநாதன் கமிஷனருக்கு ஃபோன் செய்து, “எங்க பெண் மைதிலியைக் காணும். நீங்கதான் உதவி செய்யணும்.”  என்று அழாதகுறையாகச் சொன்னார்.

கமிஷனர், “நான் உடனே உங்க பெண்ணைக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்றேன்” என்று சாமிநாதனுக்கு ஆறுதல் அளித்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, கமிஷனர் மீண்டும் ஃபோன் செய்து, “உங்க பெண்ணுக்குக் கல்யாணம் ஆயிட்டுது. அவ பல்லாவரத்திலே தன் கணவனோடு இருக்கா.”, என்றார்.

“யார் அந்த அயோக்கியப் பயல்? அவனை உடனே அரெஸ்ட் பண்ணுங்க சார். அவன் என் பெண்ணைக் கடத்திக்கிட்டு பொயிட்டான்.” என்று சாமிநாதன் கதறினார்.

கமிஷனர், ”சார், அவங்க இரண்டுபேரும் மேஜர். கல்யாணம் செய்துக்கிறதுன்னு அவங்களே முடிவெடுத்து செய்துகொண்டார்கள். நாங்க ஒண்ணும் செய்யமுடியாது.” என்றார்.

சாமிநாதனும் மீனாட்சியும் ஒருவரை ஒருவர் குறைகூறி, சண்டை போட்டுக்கொண்டார்கள். “நீங்கதான் உங்க பொண்ணுக்கு ரொம்ப இடம் கொடுத்து, அவளைச் சுத்தமா கெடுத்திட்டிங்க.” என்று மீனாட்சி சாமிநாதனைக் குற்றம் சாட்டினாள். “நீ அவ அம்மாதானே; ஏன் அவளுக்கு நல்ல புத்தி சொல்லக்கூடாது? நீயும் உன் தங்கச்சியும்தான் இதற்கெல்லாம் காரணம்.” என்று எரிந்து விழுந்தார் சாமிநாதன். இருவரும் ஒருவரோடு ஒருவர் சரியாகக்கூடப் பேசிக்கொள்ளாமல் ஐந்து மாதங்கள் கழிந்தன. சாமிநாதனின் கோபம் தணியவில்லை.

மைதிலியைப் பற்றிய கவலையால் மீனாட்சி சரியாகச் சாப்பிடாமல் தூங்காமல் தவித்துக்கொண்டிருந்தாள். சாமிநாதனுக்கும் கவலைதான். ஆனால், அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மீனாட்சி மிகவும் கவலையாக இருப்பதைப் பார்த்த, கமலாவும் சித்ராவும் ”நாங்க மைதிலியை பார்த்துவரப் போகிறோம்.” என்று மீனாட்சியிடம் சொல்லிவிட்டு, மைதிலியைப் பார்க்கப் போனார்கள்.

அவர்களைக் கண்டவுடன் மைதிலிக்கு அழுகையே வந்துவிட்டது. அம்மா அப்பாவைப் பற்றி விசாரித்தாள். “உங்க இரண்டு பேரையும் பார்த்ததுலே எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் வர்ரதுகுள்ளே, நான் சமைக்கணும். நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் சீக்கிரம் சமைச்சுடுறேன்’, என்று சொல்லிவிட்டு மைதிலி சமைக்கத் தொடங்கினாள்.

கட்டித் தயிரைத் தன் மெல்லிய காந்தள் மலர் போன்ற விரல்களால் பிசைந்தாள். தயிர் பிசைந்த தன் கைவிரல்களைப் புடைவையிலேயே துடைத்துக் கொண்டாள். தாளிப்பின் புகை அவளுடைய குவளை மலர் போன்ற, மைதீட்டிய கண்களில் படிந்தது. அருண் வந்துவிட்டான் என்பதை உணர்ந்த மைதிலி, தன் புடைவையை மாற்றிக்கொள்ளாமல், அருணை சாப்பிட வருமாறு அழைத்தாள். அருண் வந்து சாப்பிட உட்கார்ந்தவுடன், தானே துழாவிச் சமைத்த, இனிய, புளிப்பையுடைய மோர்க்குழம்பை அருணுக்குப் பரிமாறினாள்.

அருண், “ மைதிலி!, இதுபோல் சுவையான மோர்க்குழம்பை நான் சாப்பிட்டதே இல்லை. பிரமாதம்!“ என்று பாராட்டி, ரசித்துச் சாப்பிட்டான். அதைக் கேட்டவுடன், மைதிலியின் முகம்  மகிழ்ச்சியை நுண்மையாக வெளிப்படுத்தியது. அருண் மைதிலியை அழைத்துத் தன் பக்கத்தில் உட்காரச் சொன்னான். தன்னுடைய மோர்க்குழம்பு சாதத்தில் ஒரு உருண்டையை அவளுக்கு ஊட்டிவிட்டான்.  கமலாவும் சித்ராவும் பார்த்துவிடப் போகிறார்களோ என்று மைதிலிக்கு வெட்கமாக இருந்தது. இருந்தாலும், அருண் தொடர்ந்து அவளுக்கு ஊட்டிவிட, அவள் தன்னை மறந்து, அவன்மீது சாய்ந்தபடியே அவன் கொடுத்ததை சாப்பிட்டுகொண்டிருந்தாள். மைதிலி சமைத்தது, கணவனோடு சேர்ந்து சாப்பிட்டது எல்லாவற்றையும் செல்ஃபோனில் வீடியோவாக, மைதிலிக்குத் தெரியாமல் சித்ரா பதிவுசெய்துவிட்டாள்.

மறுநாள் மாலை, கமலாவும் சித்ராவும் மீனாட்சி வீட்டுக்குப் போய், மைதிலி வீட்டில் நடந்ததை எல்லாம் விளக்கமாகக் கூறினார்கள். தான் எடுத்த வீடியோவையும் சித்ரா மீனாட்சியிடம் காட்டினாள். மைதிலி சமைத்ததைப் பார்த்து மீனாட்சிக்கு ஒரே ஆச்சர்யம்.

மீனாட்சி, ”எங்கே, அந்த வீடியோவை இன்னும் ஒருதடவை காட்டு.” என்று சித்ராவிடம் கேட்டாள். அதைப் பார்த்தவுடன், “மைதிலி கர்ப்பமாக இருக்கா போலிருக்கே!” என்று கூறினாள். கமலாவும் சித்ராவும் அதை ஆமோதித்தார்கள்.

 

மீனாட்சி, “எனக்கு இப்பவே மைதிலியைப் பார்க்கணும் போலிருக்கு என்று அழுதுகொண்டே கூறினாள். இதையெல்லாம், சாமிநாதான் தான் இருந்த இடத்திலிருந்தே கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கும் உடனே மைதிலியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

“தான் செய்த மோர்க்குழம்பில் மைதிலி கொஞ்சம் கொடுத்தனுப்பினாள்.” என்று மீனாட்சியிடம் தான் கொண்டுவந்த பாத்திரத்தைக் கமலா கொடுத்தாள். “மைதிலி மோர்க்குழம்பு செய்தாளா?  அவளுக்கு மோர் செய்வதுக்கும் தெரியாது; குழம்பு வைக்கவும் தெரியாது. அவள் எப்படி மோர்க்குழம்பு செய்தாள்?” என்று ஆச்சர்யத்தோடு மீனாட்சி கேட்டாள். “அதைச் சாப்பிட்டுப் பார். அப்புறம் தெரியும் அதன் அருமை.” என்று சொல்லிவிட்டு கமலா சித்ராவுடன் தன் வீட்டுக்குச் சென்றாள். மோர்க்குழம்பை ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, மீனாட்சி படுக்கப்போனாள். மீனாட்சியுடன் படுக்கையிலிருந்த சாமிநாதனுக்குத் தூக்கமே வரவில்லை; புரண்டு புரண்டு படுத்தார். படுக்கையிலிருந்து எழுந்து அடுப்பங்கரைக்குப் போய், ஃபிரிட்ஜில் இருந்த மோர்க்குழம்பு முழுவதையும் சாப்பிட்டு முடித்தார்.

மறுநாள் காலையில் எழுந்தவுடன், மைதிலியைப் பார்க்கப் போக வேண்டும் என்று சாமிநாதன் முடிவு செய்தார். காலை உணவைச் சாப்பிட்டவுடன், “எனக்குப் பல்லாவரத்தில் ஒரு வேலை இருக்கு. நான் பொயிட்டு வர்ரேன்.”, என்று மீனாட்சியிடம் சொன்னார்.

 “நானும் வர்ரேன். எனக்குக் கொஞ்சம் அங்கே வேலை இருக்கு.”, என்றாள் மீனாட்சி.

“அங்கே உனக்கு என்ன வேலை?” என்று தெரியாததுபோல் சாமிநாதன் கேட்டார்.

“மோர்க்குழம்பு பாத்திரம் காலியா இருக்கிறதைப் பார்த்தேன். உங்களுக்குப் பல்லாவரத்தில் என்ன வேலைன்னு எனக்குத் தெரியும்.” என்றாள் மீனாட்சி.

“சரி சரி! வா போகலாம் என்றார் சாமிநாதன். மோர்க்குழம்பு மேஜிக் நன்றாகவே வேலை செய்துவிட்டது!

பின் குறிப்பு: இந்தக் கதை, குறுந்தொகையின் 167 ஆவது பாடலைத் தழுவி எழுதப்பட்டது. அந்தப் பாடலை படிக்க விரும்புபவர்கள், அதை

https://www.blogger.com/blog/post/edit/4663394474994898414/2245113387250817651

என்ற என்னுடைய வலைப்பதிவில் காணலாம்

 

Comments

Popular posts from this blog

தாவத் தெரிந்த குரங்கு

பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்

கிருஷ்ண லீலா